திருமணத்திற்குப் பெற்றோர் அனுமதி: பா.ம.கவின் யோசனையை ஏற்கிறார்களா? சர்வே ரிசல்ட்! #VikatanSurvey | People's reaction to our survey regarding PMK's decision on girls' marriage

வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (23/03/2019)

கடைசி தொடர்பு:09:57 (23/03/2019)

திருமணத்திற்குப் பெற்றோர் அனுமதி: பா.ம.கவின் யோசனையை ஏற்கிறார்களா? சர்வே ரிசல்ட்! #VikatanSurvey

பாட்டாளி மக்கள் கட்சி, பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில்,  21 வயதுக்கு உட்பட்டோர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனில், இரு தரப்பு பெற்றோரின் அனுமதியும் பெற வேண்டும் எனும் அறிவிப்பு குறித்து விமர்சனம் எழுந்தது.

பாமக

வாசகர்களின் கருத்துகளை அறிய நாம் விகடன் இணையதளம் வழியே சர்வே ஒன்றை நடத்தினோம். அதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு, கருத்துகளைப் பதிவு செய்தனர். அவர்களுக்கு நன்றி.  இனி அந்த சர்வே முடிவைப் பார்க்கலாம். 

பாமக

66 சதவிகிதத்தினர் `வரவேற்கிறேன்' என்றும், 29.7 சதவிகிதத்தினர் `எதிர்க்கிறேன்' என்றும், 4.3 சதவிகிதத்தினர் 'கருத்து இல்லை' என்றும் தெரிவித்துள்ளனர். 

பாமக

 40.6 சதவிகிதத்தினர் `ஆமாம்' என்றும், 59.4 சதவிகிதத்தினர் `இல்லை' என்றும் தெரிவித்துள்ளனர்.

பாமக

36 சதவிகிதத்தினர் `ஒடுக்கும்' என்றும், 64 சதவிகிதத்தினர் `ஒடுக்காது' என்றும் தெரிவித்துள்ளனர். 

பாமக


60.4 சதவிகிதத்தினர் `அமையும்' என்றும், 21.1 சதவிகிதத்தினர் 'அமையாது' என்றும், 18.4 சதவிகிதத்தினர் 'புதிய பிரச்னைகள்' உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாமக

43.9 சதவிகிதத்தினர் `உண்மை இருக்கிறது' என்றும் 48.7 சதவிகிதத்தினர் `உண்மை இல்லை' என்றும் 7.5 சதவிகிதத்தினர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்துள்ளனர். 

சல்மா

பா.ம.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த விஷயம் குறித்தும் சர்வே முடிவு குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளர், கவிஞர் சல்மாவிடம் கேட்டபோது, ``பா.ம.கவின் தேர்தல் அறிக்கையில் 21 வயதுக்குள் திருமணத்திற்குப் பெற்றோர் அனுமதி வேண்டும் எனச் சொல்லியிருப்பது பெண் உரிமைக்கு எதிரானது. ஏனென்றால், ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றிருக்கையில் இது அவர்களுக்குப் பொருந்தாது. அப்படியெனில், பெண்களுக்கு மட்டுமேயான இந்தக் கட்டுப்பாடு, பெண்களின் அறிவு இல்லை என்பதைப் போலவும் அவர்கள் முடிவு எடுக்கும் திறன் இல்லாதவர்கள் என்ற கருத்தையும்தான் முன்னிலைப்படுத்துகிறது. ஆணோ, பெண்ணோ ஒரு திருமணம் என்பது அவர்களின் விருப்பம் சார்ந்தது என்பதையே கேள்விக்குட்படுத்துகிறது. நாட்டை ஆளும் முடிவு எடுக்கக்கூடிய ஓட்டுரிமை பெண்ணுக்கு 18 வயதில் கொடுக்கப்பட்டிருக்க, சரியான நபரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க அந்தப் பெண்ணால் முடியாதா? அதை அறிந்துதானே சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 என்று இருக்கிறது. 

பா.ம.கவின் இந்த யோசனையில், முழுக்க முழுக்க சாதிதான் வலுவான பின்னணியாக இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்துவிடக்கூடாது என்பது இதன் அர்த்தம். சாதி ஒழிப்பு, சாதி மறுப்புக்காகப் பல போராட்டங்கள் நடந்த மண் தமிழகம். அதில், இதுபோன்ற யோசனைகளை, சாதி மறுப்பு கருத்தை ஒழிப்பதற்கே பயன்படுத்த நினைக்கிறார்கள். அதனால்தான் சர்வேயின் கடைசிக் கேள்வியான சாதிக்குள் திருமணம் என்பதைச் சொல்கிறதா என்பதற்கு, மற்றவற்றை விட அதிக வாக்குகள் விழுந்திருக்கின்றன. மேலும், பொதுவெளியில் மக்கள் பா.ம.கவின் யோசனைக்கு எதிராகத்தான் இருப்பதாக நான் கருதுகிறேன்" என்றார். 

வழக்கறிஞர் பாலு

இந்தச் சர்வே முடிவுகளைப் பற்றி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பாதுகாப்புக்குழுவின் தலைவர், வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டேன். ``பாட்டாளி மக்கள் கட்சி, சமூக நலனின் அக்கறை கொண்டு, 21 வயதுக்குட்பட்டவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி சர்வே நடத்திய உங்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி. எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் வர கர்நாடக மாநிலத்தில் நடந்த வழக்கும் ஒரு காரணம். 2011 ம் ஆண்டு, நீதியரசர்கள் பக்தவத்சலம் மற்றும் கோவிந்தராஜலு ஆகியோர் விசாரித்த வழக்கில், காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணிடம் திருமணத்திற்குப் பிறகு எங்கு வாழப்போகிறீர்கள், அதற்கு என்ன வருவாய் இருக்கிறது... போன்ற கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அந்தப் பெண்ணால் ஒன்றுக்குக்கூட  சரியான பதில் சொல்ல முடியவில்லை. அதைக் கேட்ட நீதிபதிகள், இந்து திருமணச் சட்டத்தில் சில பரிந்துரைகளைச் செய்ய மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது. நீங்கள் சர்வேயில் கேட்டுள்ளபடி, பெண்ணுக்கு 18 வயதுதான் சட்டப்படி என்றாலும், சமூக மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் நெகிழ்வுத் தன்மை கொண்டவை. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் இத்தனை திருத்தங்கள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. புதிய சட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்கள் வேண்டும் என்பதைத்தான் பா.ம.க கோருகிறது.

காதல் திருமணம் மற்றும் கலப்புத் திருமணங்களைத் தடுக்கத்தான் இந்தக் கோரிக்கையா என்றால், அதிலும் உண்மை இல்லை. காதலுக்கும் கலப்புத் திருமணத்திற்கும் ஒருபோதும் பா.ம.க எதிரானது அல்ல. சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் குழப்பத்துடன் இருப்பது வளரிளம் பருவம். அந்தப் பருவத்தில் காதல் வயப்பட்டு, அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு மீதி வாழ்க்கையைக் கஷ்டப்பட்டு வாழ வேண்டிய சூழலில் பெண்கள் மாட்டிக்கொள்வதைத் தடுக்கவே நாங்கள் முயற்சி எடுக்கிறோம். 21 வயதுக்கு மேல் பெற்றோர் அனுமதி வேண்டும் என நாங்கள் கேட்க வில்லையே! அப்படியெனில் சாதி மாறி திருமணம் செய்துகொள்வதைத் தடுக்க நாங்கள் நினைக்கவில்லை என்றுதானே அர்த்தம். பா.ம.க சொல்வதாலேயே சாதியைக் காப்பாற்ற நினைப்பதாகச் சிலர் நினைக்கலாம். 

காதல் வாழ வேண்டும் என நினைப்பவர்கள் காதலர்களும் காதலர்களின் குடும்பங்களும் நன்கு வாழ வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். பெற்றோர்களை விட்டு பிள்ளைகள் பிரியும்போது இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் எங்களின் தேர்தல் அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளோம்."


டிரெண்டிங் @ விகடன்