`பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி மீது நடவடிக்கை! மக்கள் கருத்து இதுதான்! #SurveyResult | whats the people view about covai sp vikatan survey

வெளியிடப்பட்ட நேரம்: 06:49 (02/04/2019)

கடைசி தொடர்பு:06:49 (02/04/2019)

`பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி மீது நடவடிக்கை! மக்கள் கருத்து இதுதான்! #SurveyResult

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே உலுக்கியது. பொதுமக்களும், கட்சிகளும், இயக்கங்களும் தங்களது எதிர்ப்பினைப் போராட்ட வடிவமாகக் காட்டி வருகின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக, அம்மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பேசுகையில் புகார் அளித்த பெண்ணின் பெயரைச் சொல்லிவிட்டார். பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்திருப்பதைக் கூறியதும், `வாய்தவறி கூறிவிட்டதாக' தெரிவித்திருந்தார்.

எஸ்.பி

தவறுதலாகக் கூறியிருந்தாலும் அது தவறு என, ஏ.பிரகாஷ் சூர்யா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதன் விசாரணையின்போது தமிழக அரசு, `எஸ் பி.யின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தது. (தற்போது, எஸ்.பி.பாண்டியராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.) இது குறித்து வாசகர்களிடம் விகடன் இணையதளம் வழியே நடத்தப்பட்டது. அதில் பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதன் முடிவுகள் இதோ! 

எஸ்.பி

'புகார் அளிக்க வருபவர்களை மிரட்டும் நோக்கம்' 78 சதவிகிதத்தினரும், 'முற்றிலும் பொய்' என்று 20.3 சதவிகிதத்தினரும் 'உண்மை இருக்கலாம்' என்று 1.7 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி

'அரசே இப்படிச் சொல்ல வைத்திருக்கலாம்' என்று 97.2 சதவிகிதத்தினரும், 'நியாயமான காரணங்கள் இருக்கலாம்' 2.8 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். 

எஸ்.பி

'எடுத்திருக்காது' என்று 99 சதவிகிதத்தினரும், 'எடுத்திருக்கும்' என்று 1 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். 

எஸ்.பி

'வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்' என்று 98.6 சதவிகிதத்தினரும், 'நியாயமானதாக இருக்கும்' என்று 1.4 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். 

வழக்கறிஞர் அஜிதா இந்த சர்வே குறித்து, பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக் குழுவைச் சேர்ந்த, வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினேன். ``தமிழக அரசைப் பற்றி, இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்கள் சரியாகவே கணித்துள்ளனர். எஸ்.பி.பாண்டியராஜனை இப்போது பணியிடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கையை அவர் அந்தப் பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்திய சில மணிநேரத்தில் எடுத்திருந்தால் நம்பியிருக்கலாம். இவ்வளவு நாள்கள் கழித்து செய்யும்போது வெறும் கண் துடைப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், அவர் விசாரித்த பல வழக்குகளில் அவர் கையாண்ட முறைகளால், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே முகாந்திரம் இருக்கிறது. அதனால், இப்போது அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது, மக்கள் மத்தியில் நாங்களும் ஏதோ செய்திருக்கிறோம் என்று காட்டுவதற்காகத்தான். இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரி மீதான குற்றச்சாட்டை அரசே ஏற்றுக்கொள்வது போலாகி விடும் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வீடியோக்கள் 90 சதவிகிதத்தை யூ டியூபிலிருந்து அழித்து விட்டதாக சிபிசிஐடி தகவல் சொல்கிறது. இதனை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் இல்லை என்றான பிறகும், இந்த வேலையில் அவர்கள் ஈடுபடுவது இந்த அரசுக்கு சாதமாகச் செயல்படுகிறது என்ற சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதுவரை அந்த ஒரு எப்.ஐ.ஆரைத் தவிர, வேறு எந்த எப்.ஐ.ஆரும் பதியவில்லை. ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு குற்றம் நடந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் எத்தனை எப்.ஐ.ஆர்களைப் பதிந்திருக்க வேண்டும்? இதுவரை கைது செய்யப்பட்ட நால்வரின் நண்பர்கள், பழகியவர்கள் என இந்நேரம் 200 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கலாமே! அதையும் செய்யவில்லையே?

அதனால்தான், பாதிக்கப்பட்ட பெண்களை நாங்கள் அமைத்திருக்கும் குழுவிடம் வந்து கூறலாம் என்று தெரிவித்துள்ளோம். சிலர் முன் வந்துள்ளார்கள். அந்தப் பெண் சம்பந்த வீடியோ அழிக்கப்பட்டிருந்தாலும், அவர் குற்றம் சாட்டும் நபரையும் அவரின் நண்பர்களையும் செல்போன் ஆடியோ பதிவுகளை ஆராய்ந்தால் நிச்சயம் சிக்கிக்கொள்வார். இது தமிழகத்தையே அதிரச் செய்த குற்றம். ஆனால், அரசு தேர்தலை மனதில் வைத்துச் செயல்படுகிறதோ என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. இதில் இன்னொரு விஷயத்தை அவசியம் சொல்ல வேண்டும். பொள்ளாச்சியில் உள்ள திருமணத் தகவல் மையங்கள் சிலவற்றில் விசாரித்தபோது, கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ஏழு பெண்களின் திருமணம் வேறு ஏதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்துவிட்டனராம். அவர்கள் பார்த்த அந்தப் பெண்ணும் இந்தக் குழுவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். இது பொள்ளாச்சியில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் பிரச்னையாக மாறியிருக்கிறது" என்கிறார். 


டிரெண்டிங் @ விகடன்