வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (18/10/2017)

கடைசி தொடர்பு:13:54 (18/10/2017)

வரலாறு பேசும் -சென்னை ஜார்ஜ் டவுன்! #VikatanPhotoStory

சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்து வருவது புனித ஜார்ஜ் கோட்டை. இந்தியாவில் பிரிட்டிஸார் கட்டிய முதலாவது கோட்டை இந்த ஜார்ஜ் கோட்டைதான். 1660-ம் ஆண்டில் வணிக நோக்கத்துடன் இந்தியாவுக்குள் நுழைந்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.

சென்னை டாவின்ஸி கட்டடக்கலை மாணவர்கள் ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆர்மேனியன் தெருக்களில் பாரம்பர்ய நடைபயணம் என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நடைப்பயணத்தின்போது, ஜார்ஜ்ட்வுனில் உள்ள பாரம்பர்ய பழைய கட்டடங்கள், பழைமை வாய்ந்த கோயில்கள், பல விதமான மடங்கள் குறித்து கண்டறியவும் இதுகுறித்த வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் இந்த நடைபயணம் உதவியாக அமைந்தது. இந்த நடைபயணத்தில் 60 பேர் கலந்துகொண்டனர்.

ஆர்மேனியன் தேவாலயம்:

ஜார்ஜ் டவுன்- ஆர்மினியன் தெருவின் ஆரம்பத்தில் இருக்கிறது இந்த தேவாலயம். 1719-ம் ஆண்டில் ஆர்மேனியன் மக்களுக்காகக் கட்டப்பட்டது. சென்னையின் பழைமையான தேவாலயங்களில் ஒன்றான இத்தேவாலயம், வீடு போல அழகான கட்டட அமைப்பைக் கொண்டிருக்கிறது. இங்கு ஆர்மேனியக் குடும்பங்களின் 350 கல்லறைகள் இருக்கின்றன. இத்தேவாலாயத்தில் லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆறு மணிகள் உள்ளன. 150 கிலோ எடையுள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலியை எழுப்பும்.

 

(YMIA)கோஹாலே ஹால்:

கோஹாலே ஹால் 1915-ம் ஆண்டில் அன்னி பெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்டது. ஆண்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. பின்னர் பல சுதந்திரப் போராட்ட விவாதங்கள் இங்குதான் நடைபெற்றன.

 

தெரு மண்டபம் :

இத்தெருவில் ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய கோவில் தேர் ஊர்வலம் நடைபெறும். தெரு மண்டபத்திலிருந்து திருவெற்றியூர் வரை இக்கோவில் தேர் ஊர்வலம் நடைபெறும்..

 

காளிகாம்பாள் கோயில்:

சுமார் 400 வருடங்கள் பழைமையானவை. ஆங்கிலேயேர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என இந்த அம்மனை அப்பகுதி மக்கள் அழைத்து வந்திருக்கின்றனர். பின்னர் 1640ல் ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதும், கோட்டையம்மன் என்ற பெயரும் வந்திருக்கிறது.

 

கிருஷ்ணர் கோயில்:

சென்னையில் உள்ள மிகப்பழைமையான கிருஷ்ணர் கோயில் இதுதான். மற்ற கோயில்களைப்போல் அல்லாமல், இக்கோயிலிலுள்ள கொடிக்கம்பம் கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பழைய எல்.ஐ.சி கட்டடம்:

சென்னையின் அடையாளங்களின் ஒன்றான எல்.ஐ.சி யின் தலைமையகக் கட்டடம் முதலில் இங்குதான் இருந்திருக்கிறது. 1953ல் ஜார்ஜ்டவுனில் நான்கு மாடிக் கட்டடமாக நிறுவப்பட்ட எல்.ஐ.சி யின் தலைமையகம், பின்னர் அண்ணா சாலைக்கு மாற்றப்பட்டது.

 

செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் (cathedral) தேவாலாயம்:

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் (cathedral) தேவாலாயம். 1816-ம் ஆண்டு சென்ட் ஜார்ஜால் நிறுவப்பட்டது. 300 வருட பழைமையான பாரம்பர்யத்தைக் கொண்ட தேவாலயம் இது. இந்த தேவாலயத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி இந்தியாவில் உள்ள பழைமையான பள்ளிகளில் ஒன்றாகும்.

 

சுதர்ஷன் கட்டடம்:

சுதர்ஷன் கட்டடம் 1924ல் டாக்டர் வெங்கட்ராவால் நிறுவப்பட்டது. தற்போது கீழ்தளத்தில் வணிகக்கடைகளும் முதல் மாடியில் மருவத்துவமனையும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மூன்று தலைமுறையாக அங்கு மருத்துவ சேவை செய்து வருகின்றனர்.

மல்லிகேஸ்வரா் கோயில்:

லிங்கி செட்டி சாலையில் அமைந்திருக்கிறது மல்லிகேஸ்வரா் கோயில். சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் பேரி செட்டியாரால் நிறுவப்பட்டது. 

 

பவளக்காரத் தெரு: 

பவளக்காரத் தெருவில், கற்கள் மற்றும் வைரங்கள் போன்ற தொழில்கள் செய்துவந்துள்ளனர் அப்பகுதி மக்கள். இந்தத் தெருவில் பெரும்பாலும் நிறைய மடங்களை நம்மால் காணமுடிகிறது. தற்போது ரங்கூன் மடம், செட்டியார் மடம், சின்ன மடம் இன்றும் அழியாமல் நிலைத்திருக்கிறது.

 

கச்சாலீஸ்வரர் கோயில்:

ஜார்ஜ் டவுனில் உள்ள  பல கோயில்கள் டுபாசிகளால் கட்டப்பட்டது. இக்கோவிலைக் கட்டியவர் கலவை செட்டியார்,1715-ம் ஆண்டு இக்கோயில் தமிழ் மற்றும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்குள்ள சுவரில் ஓவியங்களை வரைந்து; அழியும் நிலையில் உள்ள பழைமையான கட்டடங்களைப் பாதுகாக்கவும் வலியுறுத்தினார்கள். சென்னையில் பழைமையான பகுதியையும் அதன் உண்மையான வரலாறையும் தெரிந்துகொண்ட திருப்தியை ஏற்படுத்தியது இந்த நடைபயணம்.


டிரெண்டிங் @ விகடன்