வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (06/11/2017)

கடைசி தொடர்பு:19:37 (06/11/2017)

“போக்கிடம் இல்லாம கோவில்லயே தங்கி இருக்கோம்!” நல்லதண்ணி ஓடை மக்களின் துயரம் #ChennaiSouls #VikatanPhotoStory

வடசென்னையின் காசிமேடு அருகே அமைந்துள்ளது, 'நல்ல தண்ணி ஓடைக் குப்பம்'.

நல்லத்தண்ணி ஓடை
எந்த முன்னறிவிப்புமின்றி அக்டோபர் 4-ம் தேதி வந்த அரசு அதிகாரிகள், சிலிண்டர்களை மட்டும் வெளியே வைத்துவிட்டு, மொத்தக் குப்பத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். 

குப்பத்துக்கு அடையாளமாக இருந்த அம்மன் கோயில் மட்டும் சுவடாகத் தனித்து நிற்கிறது. மொத்தமும் இழந்த வலியுடன், 35 நாள்களாக கோயிலே கதியாக இருக்கிறார்கள் பெண்கள். 

நல்லத்தண்ணி ஓடை”ராத்திரியில் மட்டும் அவங்க அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிடுவோம். அடுத்தவங்க வீட்ல இருக்கிறது ரொம்ப சங்கடமா இருக்கும். எப்போ பொழுது விடியும்னு காத்திருந்து இங்கே வந்துடுவேன்” என்று அழுதபடியே சொல்கிறார் தேச ராணி. 

நல்லத்தண்ணி ஓடைநல்ல தண்ணி ஓடைக் குப்பத்தில் மொத்தம் 446 குடும்பங்கள் வசித்து வந்தன. சாலை விரிவாக்கத்துக்காக 36 மீட்டருக்கு இடத்தைக் காலிசெய்யச்சொல்ல, 250 மீனவக் குடும்பங்கள் காலிசெய்துள்ளனர். ஆனாலும், எதற்குக் காலிசெய்தார்கள் என்றே தெரியாமல் குப்பத்தை இடித்திருக்கிறார்கள் அரசு அதிகாரிகள். 

நல்லத்தண்ணி ஓடை
“எனக்குச் சொந்தம் யாருமில்லேம்மா. தனியாதான் இருக்கேன். வீடு கட்டித் தந்துட்டுதான் இடத்தைக் காலி பண்ணவைப்போம்னு சொன்னாங்க. நாங்களும் நம்பினோம். ஆனா, 15 நாளுல எங்க வீட்டை இடிச்சுடனும்னு அவங்க முடிவு செஞ்சது எங்களுக்குத் தெரியாது. போக இடம் இல்லாம நிர்க்கதியா நிக்கிறேன்” என்கிற 60 வயது மூதாட்டின் கண்ணீர் மனதைப் பிசைகிறது. 

நல்லத்தண்ணி ஓடைஇடத்தைக் காலிசெய்த குடும்பங்களுக்கு தியாகராஜ சுவாமி கோயில் (நல்ல தண்ணி ஓடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தாண்டி அமைந்துள்ளது) நிலத்தில் வீடு கட்டித்தருவதாகச் சொல்லியிருக்கிறது ஓர் அதிகாரி குழு. மற்றொரு அதிகாரிகள் குழு, குப்பத்து மக்களின் பெயரில் சர்வே எண் வழங்கியுள்ளது. அதில் பல, கடலுக்குள் இருப்பது பெரும் அதிர்ச்சி. 

நல்லத்தண்ணி ஓடை
“என் மருமக கொண்டுவந்த சீர்களைக்கூட எடுக்க முடியாம இடிச்சுட்டாங்க. அவள் மனசு நொந்துபோய்ட்டா. எங்க வீடு அவ்வளவு பெரிசும்மா. இந்தக் குப்பத்திலே ஓட்டு வீடுன்னாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரூம் இருக்கும். என் மவளும் மருமவளும் வேற இடத்துக்கு மாறி மாறி கூப்புடுறாங்க. ஆனாலும், இங்கிருந்து போக மனசு இல்லை” என்கிறார் மச்ச காந்தி. 

நல்லத்தண்ணி ஓடை”எங்களுக்கு இந்தக் குப்பம்தான் எல்லாமா இருந்துச்சு. இங்கே எல்லாரும் மீனவர்கள். வேற ஆளுங்களுக்கு வாடகைக்குக்கூட குடுக்க மாட்டோம். என் அப்பா எனக்குக் கொடுத்த சீதனத்தைப் பார்த்துப் பார்த்து வெச்சிருந்தேன். மொத்தமா தரமட்டம் ஆக்கிட்டாங்க. இந்தக் கோயிலே கதியா, மழை வந்தாலும் இங்கேயே குன்னிகிட்டு ஒக்காந்திருக்கோம். மின்சாரம் இல்லே. அந்த விளக்கு வெளிச்சம்தான். இந்த அம்மன் நல்லது செய்யும்னு இருக்கோம்' என்று கும்பிடுகிறாள் வள்ளி. 

நல்லத்தண்ணி ஓடை
தற்போது, அகற்றப்பட்டிருக்கும் இடம் வரை சாலை விரிவாக்கப் பணி நடந்தால், அருகிலிருக்கும் எண்ணெய்த் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை நீக்கவேண்டி வரும். அதற்குச் சாத்தியமில்லை. எனவே, இந்த அகற்றம் உண்மையில் சாலை விரிவாக்கத்துக்கு இல்லை என்றும், அருகில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு பருப்புத் தொழிற்சாலைக்கு உதவவே என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் இந்தக் குப்பத்து மக்கள். 

நல்லத்தண்ணி ஓடை
”சுனாமி வந்தப்பவே இந்தக் குப்பத்துக்கு ஒண்ணும் ஆகலை. இந்தத் தண்ணி அப்படிப்பட்டது. அதனாலதான், நல்லத்தண்ணி ஓடைன்னு பேரு. ஆனா, இன்னைக்கு திடுதிப்புன்னு காலி பண்ணச் சொல்லி இடிச்சுட்டாங்க. வீட்டு சாமான்களை எடுக்கவும் விடலை. ஆரவாரமா இருந்த குப்பம், கலையிழந்து நிக்குது. எங்களுக்குக் கடலை விட்டா வேற பொழப்பு தெரியாது. இங்கேயே பொறந்து வாழ்றவங்க. எங்களை இங்கிருந்து தொரத்திட்டு என்ன சாதிக்கப்போறாங்க?” என்று அஞ்சலை கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

நல்லத்தண்ணி ஓடை
“சாப்பிட எதுவும் இல்லன்னாலும் பரவாயில்லே. இந்தக் குப்பத்தைப் பார்த்துட்டே இருந்துடுவோம். என்ன இருந்தாலும் சொந்த வீட்ல இருக்குறா மாறி வருமா. என் அப்பனும் அவங்க அப்பனும் காலங்காலமா வாழ்ந்த ஊரிது. இன்னைக்கு செங்கல் செங்கலா கெடக்கு” என்று உருக்குலைந்து குப்பத்தைப் பார்த்துக் கதறுகிறார் தனபாக்கியம். 

நல்லத்தண்ணி ஓடை
நல்ல தண்ணி ஓடைக் குப்பத்து மக்கள், உயர் நீதிமன்றத்தில் தற்போது தொடர்ந்துள்ள வழக்கு, நிலுவையில் உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்