வானவில்லை நெய்யும் அங்குலிகள் :- காஞ்சிப் பட்டின் மகத்துவம் | Do you know how silk saree is made?

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (24/11/2017)

கடைசி தொடர்பு:17:17 (24/11/2017)

வானவில்லை நெய்யும் அங்குலிகள் :- காஞ்சிப் பட்டின் மகத்துவம்

வ்வோர் ஊருக்கும் அதன் சிறப்புதான் செழிப்பு. திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா, சேலத்துக்கு மாம்பழம் போல காஞ்சிபுரத்துக்குப் பட்டு. சின்னக் குழந்தைக்கும் காஞ்சிபுரம் பட்டுப் புடைவை என்றால் தெரியும். ஏனெனில் அம்மாக்கள் அனைவரும் வீட்டு அலமாரியில் பத்திரமாகக் காஞ்சிப் பட்டை பாதுகாத்து வருவர்; மிக முக்கிய சுபகாரியங்களுக்கு மட்டுமே பட்டுப்புடைவை உடுத்துவர். ஆனால் இந்த வழக்கம் கூட காலப்போக்கில் '90ஸ் கிட்ஸ்க்கு மட்டும்தான் தெரியும்' என்ற நிலைக்கு வந்துவிட்டது.

பட்டுப்புடைவை உருவாகும் முறை

உலகப் புகழ்பெற்ற மிகப் பழைமைவாய்ந்த பாரம்பர்ய ஆடை என்பது மட்டுமா காஞ்சிப்பட்டுக்குரிய சிறப்பு. அதன் பளபளப்பும், நிலைத்து நிற்கக்கூடிய தன்மையும் அவ்வளவு எளிதில் உருவாக்க முடியாத கலை நயமிக்க ஆடை அது. ஒரு பட்டுப்புடைவை உருவாக 15 நாள்கள் தேவைப்படும். பட்டுக்கோறவை பிரிப்பது, அதற்குச் சாயம் போடுவது, இழை சிக்கெடுப்பது, அதன் விறைப்புத்தன்மைக்காக அரிசிக் கஞ்சியில் போட்டு உலர வைப்பது, பரூட்டதில் பட்டு இழைப்பது, இழைத்த பட்டை சரியான இறுக்கத்தில் பாவு கட்டுவது, பட்டை தறியேற்றுவது, பட்டு நூலை ஒரு மெல்லிய வெள்ளிக் கம்பியுடன் பிணைத்து, பின் பொன் நூலுடன் பிணைத்துச் சரிகை நெய்ய தயார் படுத்துவது, அச்சு மரம் அடிப்பது, டிசைனுக்குத் தகுந்தவாறு இழைப்பது எனப் பல வேலைகள் உண்டு. இதில் சிறு தவறு செய்தாலும் வேலை நாசம். பட்டுப் புடைவையை மடிப்பதற்கே தனித் திறமையும் அனுபவமும் வேண்டும்.

நெசவாளிகளின் நிலைமை

பட்டுப்புடைவையுடன் பள்ளுவை (முந்தானை) சேர்க்கும் முறையை பிட்னி என்பர். சரிகை மற்றும் பள்ளுவை தனியே நெய்து, புடைவையுடன் மிக நுணுக்கமாகக் கோப்பர். சரிகையானது மூன்று அடுக்காய் நெய்து சேர்க்கப்படும். அதனால்தான் பலவருடங்களுக்குப் பின்  துணி தேய்ந்து நைந்து போனாலும், அதன் சரிகை கிழியாமல் தரமாய் எடை கூடி நிற்கிறது. இது கைத்தறி பட்டு செய்முறை ஆகும். இந்த வேலையை ஒருவரால் செய்து முடிக்க முடியாது. குடும்பமே செய்ய வேண்டும். ஏறத்தாழ பதினைந்து நாள்கள் உழைத்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடைவை நெய்தாலும், நெசவாளிகளுக்கு 5000 ரூபாய் கூலிதான் கிடைக்கும். ஏனெனில் தறி மட்டுமே அவர்களுக்குச் சொந்தம். மூலப்பொருள்கள் அனைத்தும் முதலாளிகளுக்குச் சொந்தமானது. இப்போதுதான் விசைத்தறி வந்துவிட்டதே, பின் ஏன் கைத்தறி என்று உங்கள் மனம் கேட்டால், அந்த விஷயத்தில் நிலைமை இன்னும் மோசம், ஏழை நெசவாளிகளிடம் ஏதய்யா விசைத்தறி. முதலாளிகளிடம் கூலியாட்களாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

கலையும் கடின உழைப்பும்

காஞ்சிப்பட்டு புடைவை கடின உழைப்பால் உருவாகும் கதை ஒருபுறம் இருக்க, அதன் அழகான மறுபுறத்திற்கு காஞ்சிபுரத்தின் கோயில்கள் மிக முக்கியக் காரணம். ராமாயணம், மகாபாரதம் போன்ற பழைமை கதைகள், கடவுள் உருவங்கள், விதவிதமான பூக்கள், விலங்குகள் முதலியவை சித்திரிக்கும் விதமான டிசைன்களும் பளீரென எடுத்துக்கொடுக்கும் கலர்களும் பட்டுப்புடைவையின் பேரம்சம்.

இவ்வளவு பெருமை இருந்து என்ன பயன். வீழ்ந்து போனது இந்தத் தொழில் மட்டுமா. நம் ரசனையும்தான். இப்போதெல்லாம் தரத்தை விட அளவிற்கு மரியாதை கொடுத்துவிட்டோம். நம் பாட்டி, அம்மாக்கள் ஒரு காஞ்சிப் பட்டு வைத்திருந்தாலும் அதன் பெருமை உணர்ந்து ஆசையோடு கட்டிக்கொள்வர். ஆனால், இப்போது நம்முடைய மேலோங்கிய அறிவு, ஒரு புடைவைக்கு எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும்; அதே ரூபாய்க்கு விதவிதமான பல போலி பட்டுப்புடைவைகள், அதிகமான டிசைனர் சேலைகளை வாங்கிக் கொள்ளலாம் என கார்ப்பரேட் புத்தி ஐடியா கொடுக்கிறது. யோசனை நல்லதுதான். ஆனால், இந்த மாற்றத்தால் நெசவாளிகளின் தறி வாழ்க்கை பறி போய்விடுகிறது. அவர்களின் பிள்ளைகள் யாரும் நெசவு கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. பெற்றோர்களும் அவர்களின் தொழிலை புகழ்பாட முடிவதுமில்லை. தங்கம், வெள்ளியில் பிரகாசித்த சுத்த பட்டு, தற்போது செம்பு சேர்க்கப்பட்டும் ஜொலிக்குது. நிலைமை அப்படி.

படுத்துவிட்ட பட்டும் நம் ரசனையும்

இப்போது ஜி.எஸ்.டி தாக்கத்தால், பட்டு படுத்தே விட்டது. மூலப்பொருள்களின் மீதான வரியால் பட்டுப்புடைவையின் விலை இன்னும் அதிகரித்துவிட்டது. இனி கல்யாணங்களுக்குப் பட்டுப்புடைவை எடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாலும் ஆச்சர்யம் இல்லை. கூட்டுறவுச் சங்கங்கள், ஆன்லைன் விநியோகம் என அரசு சில உதவிகள் செய்தாலும், நம்மிடத்தில் தேவை இல்லையெனில் தொழில் எங்கே நடக்கப் போகிறது. விவசாயத்தைப் போல நெசவுத் தொழில் நம் தென்னிந்தியாவில் பலரின் வாழ்வாதாரம் ஆகும். இறக்குமதி செய்யப்படும் பல்வேறு ஆடைகள் மேல் மோகம் கொள்ளும் நாம் சிறிதேனும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்தால், பட்டதாரிகளும் பட்டு வேலையைச் செய்யலாம். நேரடியாக நெசவாளர்களிடமிருந்து பட்டுப்புடைவை வாங்க முயல்வது தொழிலை மேன்மைபடுத்தும். நானூறு வருடத்துக்கும் பழைமை வாய்ந்த பாரம்பர்யமிக்க உலகப் புகழ்பெற்ற காஞ்சிப்பட்டு என்று சொல்லிவிட்டு, அதன் அழகையும் சிறப்பையும் நாம் ரசிக்கத் தவறியது ஏனோ. சிறப்பை மேலும் செழிக்கச் செய்த பெருமை இத்தலைமுறைக்கு இல்லையெனினும் அழிக்கச் செய்த பழி வேண்டாமே!

பட்டு நெய்யப்படும் கைத்தறி இயந்திரம்

       

இழைக்கும் பட்டுச் சரிகை

 

பட்டு நெய்யப்படும் கைத்தறி இயந்திரம் - ஜாக்கட்

 

பட்டு நூலை தறியேற்றுதல்

 

நுணுக்கமாகப் பட்டு நூல்களைப் பிரித்து, இயந்திரத்தில் தனித்தனியாய் கோப்பது

 

பட்டைத் தறியில் இழைக்கும் நெசவாளி

 

முந்தானைக்கு கலர் பாவு மாற்றுவது

 

தறியைக் காலால் இயக்குதல்

 

பட்டு இழைக்கப் பயன்படும் பரூட்டம் தாழ்ப்பாள் கட்டை

 

புடைவைச் சரிகை பார்டர் அடுக்காய் நெய்தல்

 

புடைவையுடன் சரிகை பார்டரையும் சேர்த்தே நெய்தல்

 

சிக்கில்லாமல் கவனமாய் இன்ச் இன்ச்சாய் நகர்த்தி நெய்யப்படும் பட்டு

 

தறிநாடா

 

வெவ்வேறு வண்ண பட்டுநூல்கள் கொண்ட தறிநாடாக்கள்

 

சரிகை நெய்தல்

 

கைத்தறியில் செங்குத்தாகவும் படுக்கையாகவும் பட்டு நூலைக் கட்டுதல்

 

தார் மாற்றுவது

 

பட்டுப்புடைவை நெய்யும் நெசவாளி

 

மயில் டிசைன் பொருந்திய பட்டுச்சரிகை பார்டர்

 

மான் டிசைன் கொண்ட முந்தானை

 

நெசவு நெய்தல்

 

ஆயிரக்கணக்கான மெல்லிய பட்டு நூல்களைத் தறியில் இறுக்கி நெய்தல்

 

பட்டு நெசவாளி

 

ஒரு பட்டுப்புடைவையை ஒருவரால் மட்டுமே உருவாக்க முடியாது; கூடிப் பணியாற்றும் பட்டுத்தறிக் குடும்பம்

 

 

 


டிரெண்டிங் @ விகடன்