வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (29/11/2017)

கடைசி தொடர்பு:19:10 (29/11/2017)

அழும் குழந்தைகள்... பூட்டியிருக்கும் கழிப்பறைகள்... போராடும் செவிலியர்கள்! #VikatanPhotoStory

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை (27.11.2017) முதல் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராடி வருகிறார்கள்.

மருத்துவப் பிரிவு ஆணையத்தின்படி 9,000-க்கும் மேற்பட்டோர் 2015-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் முடிந்தும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

செவிலியர்களாகப் பணியாற்றிவரும் இவர்களுக்கு மாதச் சம்பளமாக 7,500 மட்டும்தான் வழங்கப்படுகிறது.

 3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இங்கு போராட்டம் நடத்திவரும் வேளையில், மீதம் இருப்பவர்கள் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அந்தந்த மருத்துவமனையில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் அமர்ந்து போராடி வருகிறார்கள். இதில், கர்ப்பிணிப் பெண்களும் அடக்கம்.

போராட்டத்தை வாபஸ் வாங்கக்கோரி உயர் அதிகாரிகள் சொல்லியும், செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. சாலை மறியலிலும் ஈடுபட்டதால், அனைத்து செவிலியர்களையும் உள்ளே வைத்து டி.எம்.எஸ் வளாகத்தைப் பூட்டினர்.

கடந்த இரண்டு நாள்களாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காமல், அங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று செவிலியர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்வதால், டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் கழிப்பிடங்களைப் பூட்டிவிட்டனர். இதனால், செவிலியர்கள் பெரும் அவஸ்தையைச் சந்தித்துவருகின்றனர்.

போராட்டம் நடத்தும் செவிலியர்களில் 95 சதவிகிதம் பேர் பெண்கள். கழிவறைகளைப் பூட்டியதால், மாதவிடாய்ப் பிரச்னைக்குள்ளான செவிலியர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தைகளோடு வந்திருந்த செவிலியர்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்க முடியாமல், இரவு பகலும் கஷ்டப்படுகிறார்கள்.

பேச்சுவார்த்தைக்குச் சென்ற செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். ஆனால், போராட்டக்களத்தில் இருக்கும் செவிலியர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

 

செவிலியர்களின் கோரிக்கையைக் கேட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2010-ம் ஆண்டு கான்ட்ராக்ட் அடிப்படையில், பணியமர்த்தப்பட்ட டிப்ளோமோ படித்த செவிலியர்களை ஏழு ஆண்டுகள் முடிந்தும்... அரசு, இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்பதற்காகக் கடந்த 20 நாள்களுக்கு முன்பு, அவர்கள்  பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒருவார காலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வேலை பார்க்கும் செவிலியர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் தங்களுடைய குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் விட்டுவிட்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்