”பெண்களைக் கேலிசெய்வது ஹீரோயிஸம் அல்ல!” - மம்மூட்டி ரசிகர்களுக்குப் பார்வதியின் பதிலடி | Parvathy gives perfect reply to those who trolled her

வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (14/12/2017)

கடைசி தொடர்பு:20:51 (14/12/2017)

”பெண்களைக் கேலிசெய்வது ஹீரோயிஸம் அல்ல!” - மம்மூட்டி ரசிகர்களுக்குப் பார்வதியின் பதிலடி

பார்வதி

சமீபத்தில், கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை பார்வதி, நடிகர் மம்மூட்டி நடித்த ’கசபா’ (Kasaba) பற்றிக் கூறிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. 

அந்த விழாவில், நடிகை பார்வதி, நடிகை ரிமா கல்லிங்கல் மற்றும் திரைப்பட இயக்குநர் கீதா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக நடந்த கருத்தரங்கில், நடிகை பார்வதியிடம் 'சினிமாவில் பெண்கள் நிலை எப்படி உள்ளது?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளிக்கையில், “சமீபத்தில், ஒரு பெரிய நடிகர் நடித்து வெளியான படத்தைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ‘கசபா” (kasaba) திரைப்படத்தில், பெண்களுக்கு எதிரான பல வசனங்கள் அந்த ஹீரோ (மம்மூட்டி) கூறுவார். அந்தத் திரைப்படத்திற்காக வேலை செய்த அனைவரையும் நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு திரைப்படம்  நிஜ வாழ்க்கையையும்  சமூகத்தையும்  பிரதிப்பலிப்பதாகவே  பலரும்  நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில், ஒரு சூப்பர்ஸ்டாராக உள்ள ஒருவர் இப்படியான வசனங்களைப் பேசும்போது, பலரும் பெண்களைக் கேலிசெய்வதே ஹீரோயிஸம் என்று நினைத்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்’ என்று தெரிவித்தார்.

பார்வதியின் கருத்துக்கு, மம்மூட்டி ரசிகர்கள் பலரும் பார்வதியை 'ட்ரோல்' செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சிலர் ”மம்மூட்டியை விமர்சிக்கும் தகுதி உனக்கில்லை” என்ற பாணியில் ட்ரோல் செய்திருந்தனர். மேலும் சிலர், “அவர் ‘மேனன்’ என்றும், கேரளாவில் மேனன்களின் ஆதிக்கம் அதிகம் என்ற பாணியிலும் ட்வீட் செய்திருந்தனர். ஆனால், நடிகை பார்வதி, ’தன் பெயருக்குப் பின்னால் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தையும் வைத்துக்கொள்ளமாட்டேன்’ என்ற நிலைப்பாடுடன் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, அவர் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். 

பார்வதி

தன்னை, மம்மூட்டி ரசிகர்கள் ட்ரோல் செய்ததற்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார் பார்வதி. “ஒரு திரைப்படம் சமூகத்தில் இருக்கும் எல்லா விதமான வாழ்க்கையையும், எல்லா மனிதர்களையும் பிரதிபலிக்கலாம். நல்லது, கெட்டது, அழகற்றது என... அது எதுவாகவும் இருக்கட்டும். ஆனால், வன்முறையையும் அநியாயத்தையும் ஒரு திரைப்படம் கொண்டாடக்கூடாது. அது எந்த வகையிலும் ஹீரோயிசம் ஆகாது. இதுதான் என் நிலைப்பாடு. உங்களுடைய கருத்துகளுக்கும், எண்ணங்களுக்கும் நன்றி”, என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவர்  தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “நான் ஒரு திரைப்படத்தைப் பற்றி பேசும்போது, அந்தப் படத்தில் நடித்த யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் பேசவில்லை. என்னைப் பாதித்த சில விஷயங்களைத்தான் பேசினேன். என்னுடைய சீனியர்களையும் அவர்களின் திறமையையும் மிகவும் மதிக்கிறேன். நான் ஒரு கருத்துக் கூறும்போது, அதில் தனிப்பட்ட நபர்களை நான் விமர்சிக்கவில்லை. அதுதான் உண்மை.” என்றும் விளக்கம் அளித்துள்ளார் பார்வதி! ஆனால், இன்னும் சமூகவலைதளங்களில், அவரைப் பற்றின  ட்ரோல் நின்ற பாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம்!

பெண்களின் கருத்துகளை, சொல்லவரும் விஷயத்தை மட்டும் விவாதிப்பதே சரியானது. அப்போதே ஒரு விவாதம் ஆரோக்கியமான திசையை நோக்கிப் பயணிக்கும். அதை விடுத்து, அவரை ட்ரோல் செய்து பதிவிடுவது, மீம்ஸ் க்ரியேட் செய்து சமூக ஊடகங்களில் பரவச் செய்வது என்பது எந்த விதத்திலும் முறையல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்