Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'நாங்க கெட்டவார்த்தை அதிகமாப் பேசறது ஏன் தெரியுமா?' உண்மை சொல்லும் திருநங்கை

ஃபேஸ்புக்கில் 'இரண்டு திருநங்கைகள் இணைந்து என்ற கேப்ஷனுடன், ஏஞ்சல் கிளாடியும் தனுஜா சிங்கமும் பக்கா பாரம்பர்ய லுக்கில் 'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்' பாடலுக்கு டப் மேஷ் செய்வதுதான் டிரெண்டாகியுள்ளது. 

அழகிய பாவனைகள், பொருத்தமான உதட்டசைவு என அசத்துகிறார்கள் இந்த இருவருவம். இதில் ஏஞ்சல் கிளாடி கனடாவில், அட்மின் துறையில் வேலைப்பார்த்து வருகிறார். அவருடன் பேசினோம்.

கிளாடிஸ்

வாட்ஸ் அப் காலில், 'கனடாவில் இப்ப என்ன டைம்' என்று நாம் கேட்க. 'காலையில பதினோரு மணி. என் ஹெட் இன்னும் ஆஃபீஸ்க்கு வரலை. நிறைய பேசலாம்' என்று சிரித்துக்கொண்டே பேசத் தயாரானார். 

''நான் பேஸிக்கலி ஒரு ஆக்ட்ரஸ். தமிழ்ல இதுவரைக்கும் நாலு படம் பண்ணியிருக்கேன். அதுல மிஷ்கினோட 'ஓநாயும் ஆட்டிக்குட்டியும்' ஒண்ணு. இப்ப பாபி சிம்ஹாவோட ஒரு படம் பண்ணிட்டிருக்கேன்'' என்றவரிடம், டப் மேஷ் பற்றி பேச்செடுத்தோம்.

''அந்த வீடியோவை  நிறைய பேர் ஷேர் பண்ணுவதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. இந்த டப்மேஷ் ஜஸ்ட் ஒரு வெள்ளோட்டம். அதனாலதான் இதை ரொம்ப லைட்டா பண்ணியிருக்கோம் நானும் என் ஃபிரெண்ட்ஸும். 

தோழிகளுடன்

எனக்கு, என் ஃபிரெண்ட்ஸ் தனுஜா அண்ட் நேகாவுக்கு, இந்தச் சமூகத்தின் மேல நிறைய வருத்தங்கள் இருக்கு. திருநங்கைகளான எங்களுக்கு இந்தச் சமூகம் கொடுக்கிற கஷ்டத்தை மட்டுமே நான் இதுல குறிப்பிடலை. கறுப்பா இருக்கிறவங்களைக் கிண்டலடிக்கிறது, மாற்றுத்திறனாளிகளை கேலி பண்றதுன்னு... இங்க நிறைய பிற்போக்குத்தனங்கள் இருக்கு. இந்த விஷயங்களையெல்லாம் இனி வர்ற எங்களோட டப் மேஷ்கள் விமர்சனம் பண்ணும்.முக்கியமா சினிமாவுல, முற்போக்கான படங்கள்னு சொல்லப்படுற படங்கள்லகூட எவ்வளவு பிற்போக்குத்தனங்கள் இருக்குனு சம்பந்தப்பட்ட சீன்களை எடுத்துப்போட்டு டப் மேஷ் பண்ணப்போறோம். '' என்ற ஆதங்கத்தோடு சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.  

 

 

'''திருநங்கைகளைப் பற்றி நெகட்டிவ்வாக சித்திரிக்கிற விஷயங்களையும் கேலி பண்ணி டப் மேஷ் பண்றதுதான் எங்களோட டார்கெட்'' என்றவரிடம், 'திருநங்கைகள் முரடாக நடந்துகொள்கிறார்கள் என்று சமுதாயத்தில் ஒரு பார்வை இருக்கிறதே...'' என்றோம்.

கிளாடிஸ்

'ஆமாம், முரட்டுத்தனமாத்தான் நடந்துக்கிறோம். அது ஏன்னு யாராவது யோசிச்சி இருக்கிங்களா? நாங்க கத்திப் பேசறது, கெட்ட வார்த்தைனு அதிகமா பேசறது எல்லாமே எங்க பாதுகாப்புக்காகத்தான். இது தப்பான ஆண்களை எங்க கிட்ட நெருங்க விடாது. இல்லன்னா, அவங்களே எங்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணாலும், அதுதான் எங்களைக் கூப்பிட்டுச்சுன்னு அப்படியே பிளேட்டை திருப்பி போட்டுடுவானுங்களே...''என்று வேதனையுடன் சொல்லிவிட்டு போனை வைத்தார். ஏஞ்சல் கிளாடியின் பாரம் இப்போது நம் நெஞ்சில் இடம் பெயர்ந்திருந்தது. 

திருநங்கைகளுக்கான உணர்வுகளைப் புரிந்துகொள்வதுடன் சக மனிதர்களாக, நமது சமூகம் கருதி, அவர்களுடன் உரையாட முன் நகர வேண்டும். அப்படியான உரையாடல் நிகழும்போதுதான் அவர்களைப் பற்றிய தவறான கருத்துகள் ஒழிந்துபோகும். இப்போது காவல், கணினி என அனைத்துத் துறைகளிலும் தங்களின் இருப்பை அழுத்தமாகப் பதிந்துவரத் தொடங்கிவிட்டனர் திருநங்கைகள். சமீபத்தில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியேற்ற பிரித்தியா யாஷினியே மிகச் சிறந்த ஓர் உதாரணம். 

ஏஞ்சல் கிளாடி நாடகம், திரைத்துறையில் தனித் திறமையோடு வலம் வந்து, திருநங்கைகளுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement