வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (22/03/2018)

கடைசி தொடர்பு:11:03 (22/03/2018)

`தகவல் திருடப்பட்டது உண்மைதான்!’ - மன்னிப்புக் கோரினார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதிற்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார், ஃபேஸ்புக்  நிறுவனத்தின் நிறுவனர். 

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

அமெரிக்காவில், 50 மில்லியன் மக்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்கள், ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்டது. இந்தத் திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தத் திருட்டை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற பொலிட்டிக்கல் டேட்டா ஃபர்ம் நிறுவனம் செய்தது என பிரிட்டன் தொலைக்காட்சி சேனல்' நியூஸ் 4' நேற்று செய்தி வெளியிட்டது. அதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் (சி.இ.ஓ) அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

ஃபேஸ்புக்கில் நடைபெற்ற தகவல் திருட்டுகுறித்து மார்க் ஸக்கர் பெர்க், சி.என்.என் தனியார் தொலைக்காட்சியில் (CNN) பேட்டி அளித்துள்ளார். அதில், '' ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்பட்டிருப்பது உண்மைதான். ஃபேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களைப் பாதுகாத்துதான் வருகிறோம். அது எங்கள் அடிப்படைக் கடமையாகும். இருப்பினும், தகவல்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார். இந்தத் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் போன்ற மற்ற நிறுவனங்கள் உருவாக்கிய ஆப்-கள் அனைத்தையும் ஃபேஸ்புக் தணிக்கை செய்யும் எனவும் தெரிவித்தார். 

Source - CNN