வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (24/03/2018)

கடைசி தொடர்பு:13:10 (24/03/2018)

’சார் உங்க கூட செல்ஃபி எடுக்கணும்!’ - மாணவி விருப்பத்தை நிறைவேற்றிய ராகுல்

rahul gandhi selfi

`சார் உங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று ராகுலிடம் கோரிக்கை விடுத்த மாணவியின் விருப்பத்தை, நிகழ்ச்சி மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, செல்ஃபி எடுத்து நிறைவேற்றியுள்ளார். 

மைசூர், மஹாராணி பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், `நிரவ் மோடி ரூ.22,000 கோடி வங்கிப் பணத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டார். இந்த ரூ.22, 000 கோடியை, உங்களைப் போன்ற நாட்டில் உள்ள பெண்களிடம் கொடுத்தால், எத்தனை தொழில்கள் செய்யமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்'.

சீரானப் பொருளாதாரத்தில் முன்னேறிச் சென்றாலும், வேலை வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியவில்லை. இதற்குக் காரணம், திறமை உள்ளவர்களுக்கு நிதி ஆதரவு கிடைப்பதில்லை. ஏனெனில், பெரும் தொகை 15 - 20 பேருக்கு மட்டும் செல்கிறது என்று பேசினார். அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த மாணவி ஒருவர் எழுந்து நின்று, `சார் உங்களுடன் நான் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்' என்றார். 

இதை எதிர்பார்க்காத ராகுல், தாமதிக்காமல் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, அந்த மாணவியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.