வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (09/05/2018)

கடைசி தொடர்பு:16:54 (09/05/2018)

`என்னைக் கவர்ந்த முதல் பெண் இவர்தான்’ - ப்ளஸ் டூ ரகசியத்தை உடைத்த தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதல் முறையாகத் தனது முதல் க்ரஸ் யார் என்பதை மேடையில் அறிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தோனி

கூல் கேப்டன் தோனி குறைந்த சுய விவரத்தை வைத்திருப்பவர். தன் தனிப்பட்ட வாழ்க்கை விஷங்களைப் பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள இவருக்கு அதிகம் பிடிக்காது. ரசிகர்களும் அவரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை சற்று விரும்பாதவர். இப்படியிருக்க, இவர் முதல் முறையாகத் தன்னை கவர்ந்த முதல் பெண் யார் என்பதை மேடையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை அணி மீண்டும் களமிறங்கியதால் அந்த அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சி.எஸ்.கே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த அணிக்கு ஸ்பான்சர் செய்யும் கல்ஃப் ஆயில் (Gulf Oil) நிறுவனத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் மற்ற வீரர்களான வாட்சன், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்றோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர், சி.எஸ்.கே அணி வீரர்களுக்குச் சிறிய மைண்ட் ரீடிங் கேம்ஸை செய்து காட்டினார். நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மிகவும் சுவாரஸ்யமாகச் சென்றுகொண்டிருந்தது. இதன் இறுதியில் பேசிய தொகுப்பாளர், “விழா முடியும் தருவாயில் உள்ளது. இப்போது தோனியின் முதல் க்ரஸ் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள போகிறோம்” எனக் கூறினார். இதைக் 
கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் மிகவும் ஆரவாரம் செய்தனர். அதன் பின் மேடையின் நடுவில் தோனியை அழைத்த தொகுப்பாளர், இப்போது உங்களின் க்ரஸ் பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறது எனக் கூறுங்கள் எனக் கேட்டார். அதற்கு தோனி சிறிது யோசித்துவிட்டு
5 எனப் பதிலளித்தார். அதன் பின், அந்தப் பெயர் குறித்து சில கேள்விகள் தோனியிடம் கேட்கப்பட்டது. அதன் பின் தொகுப்பாளர், தன் கையில் வைத்திருந்த ஒரு பேப்பரில் தோனி நினைத்த பெயரை எழுதினார். பின்னர் அது மற்ற வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மட்டும் காட்டப்பட்டது. இறுதியில் அந்தப் பெயரை (Swathi) தோனியிடம் காட்டி இதுதான் நீங்கள் நினைத்த பெயரா எனத் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சிறிது தயங்கியபடி ‘ஆம்’ எனப் பதிலளித்த தோனி. பிறகு, இதை என் மனைவி சாக்‌ஷியிடம் சொல்லிவிடாதீர்கள் எனக் கூறினார். ஸ்வாதியைக் கடைசியாக நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது பார்த்தது எனவும் தெரிவித்தார். தோனியின் பேச்சைத் தொடர்ந்து சிறிது நேரம் அரங்கமே கலகலப்புடன் காணப்பட்டது.