வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (05/06/2018)

கடைசி தொடர்பு:12:36 (05/06/2018)

"டோரா இட்லி சாப்பிட்டாங்க" - உண்மை சொல்லும் நண்பன் புஜ்ஜி

துறுதுறுவென ஊர் சுற்றிக் கொண்டிருந்த டோரா, தற்போது கோமாவில் இருப்பதாக புகைப்படங்கள் உலா வருகிறது. உண்மையில் டோராவுக்கு என்ன ஆனது, இப்போது அவர் எப்படியிருக்கிறார், புஜ்ஜியிடம் விசாரித்தோம்..

முன்குறிப்பு: டோரா ரசிகரான விகடன் நிருபர், மேஜிக்கல் சர்ரியல் காமிக்கல் ரியலிஸத்தில் டோராவின் மாய உலகத்திலேயே சஞ்சரிக்கும்போது புஜ்ஜியிடம் எடுத்த பேட்டி இது! 

Dora Hospitalized

'முயற்சி திருவினையாக்கும், முயன்றால் சாதிக்க முடியும்' எனும் முத்துக்கு முத்தான கருத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். 'இப்போ எங்கே போறோம், இப்போ எங்கே போறோம்' என இயக்குநர் பிரபு சாலமனுக்கு முன்பே காடு, மலை, கடல், கண்மாய் எல்லாம் சுற்றிவந்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தவர். `திருடக்கூடாது' எனும் ஒற்றை வார்த்தையைக் கொண்டு பயங்கொள்ளாது பாதகர்களை திருத்திக் காட்டிய இரும்பு மனுஷி அவர். அவர்தான் டோரா! டோரா தி எக்ஸ்ப்ளோரர். பஞ்சு மிட்டாய் கலரில் ஒரு டி-ஷர்ட், ஆரஞ்சு மிட்டாய் கலரில் ஒரு டவுசர், கபாலத்தில் பாப் கட்டிங் என துறுதுறுவென ஊர் சுற்றிக்கொண்டிருந்த டோரா, தற்போது கோமாவில் இருப்பதாக புகைப்படங்கள் உலா வருகிறது. உண்மையில் டோராவுக்கு என்ன ஆனது, இப்போது அவர் எப்படியிருக்கிறார், புஜ்ஜியிடம் விசாரித்தோம்...

டோராவுக்கு என்ன ஆச்சு?

டோராவுக்கு ஒண்ணும் ஆகலை. அவ நல்லாதான் இருக்கா. இன்னைக்கு காலையில்கூட இட்லி சாப்பிட்டாளாம். `பழைய மாவு போல... புளிப்பா இருக்கு. நாளைக்கு வேற கடையில வாங்கு'ன்னு திட்டியிருக்கா. இன்னைக்கு நைட்டுக்கு சாப்பிட காடை பிரியாணியும் கத்திரிக்காய் கொஸ்தும் வேணும், புஜ்ஜிதான் வாங்கிட்டு வரணும்னு சொன்னாளாம். காடை பிரியாணிக்கு நான் எங்கே போவேன். நீங்களே சொல்லுங்க! என கையை விரிக்கிறார் புஜ்ஜி.

டோலக்பூர் லட்டு சாப்பிட்டுத்தான் டோராவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போச்சுன்னு சொல்றாங்களே, அது உண்மையா?

டோலக்பூர் மகாராஜா கிட்டே லட்டு வாங்கி சாப்பிட்டது உண்மைதான். ஆனால், அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோட்டா பீம் ஏரியாவுல டோராவுக்கு யாரும் தீங்கு நினைச்சிட முடியாது. போட்டு புரட்டி எடுத்துடுவார் பீம். கூடவே, என் நண்பன் ஜக்குவும் இருக்கான், டோராவை யாரும் ஒண்ணும் செஞ்சுட முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம், டோராவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண நாளிலிருந்து டோலக்பூர் கவர்னர்தான், அங்கேயும் இங்கேயும் போக்குவரத்துமாவே இருக்கார். அவளை எப்படியாவது குணப்படுத்தி வீட்டுக்கு கூட்டிவரணும்ங்கிறது டோலக்பூர் மக்களின் விருப்பமும் கூட.  

டோராவுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருது?

வாட்ஸ்அப்பில் வந்த போட்டோவிலேயே தெரியும், டோரா மூச்சு விட சிரமப்படுறா. அதனால், சீராக சுவாசிக்க வென்டிலேட்டர் வெச்சுருக்கோம். வென்டிலேட்டர் வேணும்னு சொன்னதுக்கு ஒருத்தர் மதுரையிலிருந்து தெர்மாமீட்டரை தூக்கிட்டு வந்த சோகக்கதை வேற நடந்தது. என்னத்த சொல்ல..! டோராவுக்கு சிகிச்சையளிக்க டோலக்பூரின் பக்கத்து கிராமமான சிங்கப்பூரிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் கீலே வந்திருக்கார். அவர் என்ன சொல்றார்ன்னு எங்களுக்கு சரியா புரியலை. அதைவிட, அவர் கிட்டே இருந்து கறுப்பு துண்டு போட்ட ஒருத்தர் விசிட்டிங் கார்டு வாங்கிட்டு போனார். அது ஏன்னு சுத்தமா புரியலை.

எங்களுக்கு புரியலைன்னு சொல்றீங்க, யார் யார் டோரா கூட மருத்துவமனையில் இருக்கீங்க?

டோரா கூட சோட்டா பீமுடைய தோழி சுட்கி மட்டும்தான் இருக்கா. டியாகோவை கூட உள்ளே அனுமதிக்கலை. அவளை நாங்க யாருமே நேரில் பார்க்கலை. அவளை தனி அறைக்கு மாத்தினதா சொல்றாங்க. உள்ளே என்ன நடக்குதுனு சுட்கிக்குதான் நல்லா தெரியும்.  அவ பூரண குணமடைஞ்சு மறுபடியும் பேக்கை தூக்கிட்டு பயணம் கிளம்பினாலே போதும். எனக்கு வேற எதுவும் தேவையில்லை" என சொல்கையில் புஜ்ஜியின் கண் கலங்குகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்