வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (30/06/2018)

கடைசி தொடர்பு:18:24 (30/06/2018)

`கமான் ஹர்திக் கமான்’ - வைரலான ஸிவா தோனி வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா தோனி, ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸிவா
 

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா தோனி, ஐ.பி.எல் சீஸன்  தொடங்கியதிலிருந்து முடிந்தது வரை சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தார். ஐ.பி.எல் தொடரின்போது ஸிவா செய்யும் சிறிய சிறிய குறும்புகள், நடன வீடியோ போன்றவை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின்  மனதையும் கவர்ந்து வந்தது. இந்த வீடியோவுக்கு அனைத்து மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர். தற்போது ஸிவாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஐ.பி.எல் முடிந்த பின் நீண்ட நாள்களாக ஸிவா பற்றிய எந்தப் புகைப்படமும் வீடியோவும் வெளிவராமல் இருந்தன. தற்போது அவர்  இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் வீடியோ வெளியாகி அனைவர் மனதையும்  கவர்ந்துள்ளது. அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். 

இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது இஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “ஓ! என்னை உற்சாகப்படுத்துபவரை நான் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஸிவா, “கமான் ஹர்திக் கமான்” எனக் கத்திக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.