வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:32 (07/07/2018)

``ஜி.வி.பிரகாஷ்கூட சேர்ந்து பாடினேன்... அவர் இன்னும் பார்க்கலை!'' - `ஸ்மூல்’ லட்சுமி பிரியா

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று எதைத் திறந்தாலும் இரண்டு பேர் ஸ்மூல் ஆப்பில் பாட்டுப் பாடி தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருப்பார்கள். பாத்ரூம் சிங்கர்களுக்கு வரப்பிரசாதம் இந்த ஆப். சமீபத்தில் இந்த ஆப் மூலமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் சண்டாளி பாடல் பாடி 11 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார் லட்சுமி பிரியா. அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

ஸ்மூல் லட்சுமி பிரியா

``என்னுடைய சொந்த ஊர் நெய்வேலி. என் கணவர் தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளுக்கு ரெண்டு வயசாகுது. அப்பா, அம்மா, தம்பி, மாமியார், மாமனார்ன்னு கூட்டுக்குடும்பமாகத்தான் இருக்கோம். நான் சின்ன வயசுலேயே கர்நாடக சங்கீதம் படிச்சிருக்கேன். ஈவன்ட்களில் பாட்டுப் பாடிட்டு இருந்தேன். குழந்தை பிறந்ததும் பிரேக் எடுத்துட்டேன். வீட்டுல போர் அடிக்கும்போது டைம் பாஸூக்காகத் தான் ஸ்மூல் ஆப் ஒப்பன் பண்ணேன். ஓப்பன் பண்ண கொஞ்ச நாளிலேயே அந்த ஆப் மிகப்பெரிய பொக்கிஷம்னு தெரிஞ்சது. அதுல ஒரு பாட்டை பாடி போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி பலதடவை பிராக்டீஸ் பண்ணுவேன். பிறகுதான் ஸ்மூல்ல போஸ்ட் பண்ணுவேன். நிறைய ரசிகர்கள் எனக்கு ஃபாலோயர்ஸ் ஆனாங்க.

 

 

சமீபத்துல ஸ்மூலில் ஒரு போட்டி வைச்சிருந்தாங்க. `சகா' படத்தோட மியூசிக் டைரக்டர் ஷபீர்கூட சேர்ந்து பாடணும். அந்தப் போட்டியில நான் கலந்துகிட்டேன். என் வாய்ஸ் ஷபீருக்கு பிடிச்சுப்போகவும் அவரோட ஷார்ட் ஃபிலிம்ல என்னை பாட வைச்சார்.  அதுமட்டுமில்லங்க அவருடைய படத்துலேயும் என்னைப் பாட வைக்கிறேன்னு சொல்லியிருக்கார். 'ஆரம்பமே அட்டகாசம்'னு ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்துல பாடகர் வேல்முருகனோட இணைஞ்சு ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். `ஆரம்பமே அட்டகாசம்' படத்தோட டைரக்டர் நிறைய ஷார்ட் ஃபிலிம் எடுத்திருக்கிறார். அது எல்லாத்திலேயும் நான் பாட்டுப் பாடியிருக்கேன்'' என்றவர் சமீபத்தில் ஸ்மூலில் அழைப்பு விடுத்த ஜி.வி.பிரகாஷுடன் பாடியிருக்கிறார்.

லட்சுமி பிரியா

``ஜி.வி.பிரகாஷ் சார் ஸ்மூல் ஃபேன்ஸுக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அவரோட யார் வேணும்னாலும் பாடலாம்ங்கிறதுதான் அந்த அழைப்பு. அதுல நான் கலந்துகிட்டு 'செம' படத்துல வர்ற 'சண்டாளி'ங்குற பாட்டைப் பாடினேன். அந்தப் பாட்டை 11 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. எனக்கு செம எக்ஸைட்மென்டா இருக்குது. ஆனா ஒரு சின்ன வருத்தம் நான் பாடின பாட்டை ஜி.வி. சார் இன்னும் கேட்கலை. அவர் கேட்டா நிச்சயம் அவர் படத்துல ஒரு பாடல் பாடிடுவேன்னு நினைக்கிறேன்.

இப்போது மறுபடியும் ஈவன்ட்களில் பாட்டுப் பாடுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதன் மூலமாகவும் நிறைய வாய்ப்புகள் வருது. அதைத் தவிர சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துருக்கேன். ஆனா, ரெண்டு ரவுண்டுக்கு மேல எதுலேயும் செலக்ட் ஆகல. பாட்டு பாடுறதுதான் என் புரொபஷன்னு இப்போ தான் முடிவு பண்ணியிருக்கேன். என் குடும்பத்தினரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குறாங்க.  வெளியில் போகும்போது நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பாராட்டுறாங்க. நீங்க சூப்பரா பாடுறீங்க மேடம்.. நான் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன்னுலாம் சொல்றாங்க. கேட்கவே சந்தோஷமா இருக்கு. பெரிய மியூசிக் டைரக்டருடைய படத்துல பாடணுங்குறதுதான் என் ஆசை.  சீக்கிரமே அந்த ஆசையை நிறைவேற்றுவேன் என்கிறார், லட்சுமி பிரியா.

 

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்