வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (10/07/2018)

கடைசி தொடர்பு:19:04 (14/09/2018)

35 முட்டை,11 காடை, ரெண்டரை கிலோ மட்டன்...55 வயசுல அள்ளிச் சாப்பிடும் `சாப்பாட்டு ராமன்’ டாக்டர்

யூ-டியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அந்தச் `சாப்பாட்டு ராமன்' ஒரு டாக்டர்

35 முட்டை,11 காடை, ரெண்டரை கிலோ மட்டன்...55 வயசுல அள்ளிச் சாப்பிடும் `சாப்பாட்டு ராமன்’ டாக்டர்

`குறிப்பிட்ட வயசுக்குமேல சாப்பாட்டை கன்ட்ரோல் பண்ணுங்க'னு ஊர்ல இருக்கிற எல்லா டாக்டரும் சொன்னா, அதுக்கு நேர்மாறா 55 வயசுல ஒருத்தர் கிலோ கணக்குல சாப்பாட்டை வல்லு வதக்குனு அள்ளிச் சாப்பிடுறார். இப்படி ரவுண்டுகட்டி தூர்வாரும் அவர், ஒரு டாக்டர் என்பதுதான் இதில் ஆச்சர்யம்!  யூ டியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் அந்தச் `சாப்பாட்டு ராமனு'க்கு போன் பண்ணேன்.

டாக்டர் பொற்செழியன் சாப்பாட்டு ராமன்

``அப்பா க்ளினிக்ல கொஞ்சம் பிஸி. நாம பேசலாமா?" என்றபடியே ஆரம்பித்தார் அவருடைய மகன் சபரிகுமார். 

``எங்களுக்கு விழுப்புரம் பக்கத்துல கூகையூர்தான் சொந்த ஊர். அப்பா மாதிரி நானும் ஒரு டாக்டர்தான். உக்ரைன் நாட்டுல எம்.பி.பி.எஸ் முடிச்சேன். ஊருக்கு வந்ததும் விளையாட்டா ஒரு யூ டியூப் சேனலை ஸ்டார்ட் பண்ணலாமேன்னு தோணுச்சு. எந்த மாதிரி வீடியோஸ் பண்ணலாம்னு யோசிச்சப்போதான் எங்க அப்பா பேஸிக்கா வீட்டுல நல்லாச் சாப்பிடுவார். அந்தச் சாப்பாட்டையே கான்செப்ட்டாக்கி அவரைவெச்சு `சாப்பாட்டு ராமன்' வீடியோஸ் பண்ண ஆரம்பிச்சோம். நாங்க எதிர்பார்த்ததுக்கு மேலேயே செம ரெஸ்பான்ஸ்"  என சபரிகுமார் ஆரம்பித்துவைக்க, கொஞ்ச நேரத்திலேயே நம்ம ஹீரோ `சாப்பாட்டு ராமன்'... டாக்டர் பொற்செழியன் லைனில் வந்தார். 

டாக்டர் பொற்செழியன் சாப்பாட்டு ராமன்

``நான் சாதாரணமா வீட்ல சாப்பிடுறதே ஃபாஸ்ட் ஃபார்வேர்டுல படம் பார்த்த மாதிரிதான் இருக்கும். அவ்ளோ ஸ்பீடு. சும்மா சரசரன்னு சாப்பிடுவேன். கடவுள், எனக்கு அப்படி ஒரு உடல்வாகையும் ஜீரண மண்டலத்தையும் கொடுத்திருக்கார். சாப்பாட்டைப் பொறுத்தவரை எனக்கு லிமிட்னு எதுவும் கிடையாது. என் வயிறு ரொம்பும் வரைக்கும் உள்ளே இறக்குவேன். இதுவரை வயிற்று உபாதைகளோ உடல்நலக்குறைவோ ஏற்பட்டதில்லை. நல்லா ஆரோக்கியமா இருக்கேன்!" என்றவர் சிறிய இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

``எங்களுக்கு 15 ஏக்கர்ல சொந்தமா விவசாய நிலம் இருக்கு. அங்கே விளையுறத மட்டும்தான் நான் சாப்பிடுறேன். மத்தபடி வெளியே எங்கேயும் சாப்பிடுறதில்ல. ஹோட்டல், கல்யாண விருந்துன்னு மறந்தும் அந்தப் பக்கம் போறதில்ல. எனக்கு மூக்குமுட்ட சாப்பிடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, அது ஆரோக்கியமானதா இருக்கணும். அதுல கவனமா இருப்பேன்.

இந்த 55 வயசுல 11 முழு காடை, 35 முட்டை,  ரெண்டரை கிலோ மட்டன்னு இஷ்டத்துக்கு வெளுத்துவாங்க முடியுதுன்னா, காரணம் அதான். குறிப்பா, 3 கிலோ சோறும் கருவாட்டுக் குழம்பும் சேர்த்து நான் சாப்பிட்ட வீடியோவை மட்டும் இதுவரைக்கும் 9 லட்சம் பேர் பார்த்து ரசிச்சிருக்காங்க. சாதாரணமா நான் சாப்பிடுறதுக்கு முன்னே 69 கிலோ இருப்பேன்.  சாப்பிட்டதும் 72 ல இருந்து 74 கிலோ வரைக்கும் கூடிடுவேன்.

அடுத்த நாள் பழையபடி 69 கிலோவுக்கு வந்திருவேன். 15 வருஷமா இப்படித்தான் நம்ம வண்டி ஓடுது. அதுபோக, இப்பல்லாம் சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தைகள் என்னுடைய வீடியோஸ் பார்த்ததும் நல்லாச் சாப்பிடுதுங்கன்னு பெற்றோர்கள் வீடு தேடி வந்து சொல்றாங்க. ஃபேஸ்புக்ல சிலர் `இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அவனவன் சாப்பாடு இல்லாம திரியுறான்'னும் கலாய்ப்பாங்க. பாராட்டோ திட்டோ ரெண்டையும் சமமா எடுத்துக்கிறதால எப்பவும் ஹேப்பியா இருக்கேன். இஷ்டத்துக்கு எவ்ளோ தின்னாலும் சுகர், பி.பி-ன்னு இதுவரை எந்தத் தொல்லையும் இல்லை.

நான் இப்போ சொல்றதை கவனமா நோட் பண்ணுங்க... எனக்கு சினிமாவுல நடிக்கவும் ஆசை. எப்பவும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கிற மாதிரி வெயிட்டான ஒரு ரோல் கிடைச்சா, வெளுத்துவாங்குவேன்" என்றவர் கடைசியாக முடிக்கும்போது...

``சாப்பாட்டுக்காக நான்... சாப்பாட்டுக்காகவே நான்'' என அம்மா ஸ்டைலில் அடக்கமாகச் சொல்லிச் சிரிக்கிறார்!


டிரெண்டிங் @ விகடன்