வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (03/09/2018)

கடைசி தொடர்பு:16:30 (03/09/2018)

`அடுத்த தலைமுறையினரின் நிலை?’ - உலக வெப்பமயமாதல்குறித்து விளக்கும் வீடியோ!

உலக வெப்பமயமாதல் காரணமாக நம் அடுத்த தலைமுறை அழியும் அபாயம் உள்ளதை எளிமையாக விளக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. 

வெப்பமயமாதல்

வெப்பமயமாதல் குறித்து உலக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஜப்பான், ஐரோப்பா, கலிபோர்னியாவில் நிலவிய வெப்பம் வருங்காலத்தின் அபாயத்தை இப்போதே உணர்த்திவிட்டது. இதிலிருந்து நாம் காலநிலை மாற்றத்தின் வேகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிக சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசுபாடு போன்றவை குறித்து சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும் நாம் தொடர்ந்து மாசுபாட்டை அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம். கோடைக்காலத்தின் முதல் பாதியில் புவியின் வட அரைக்கோளத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. 2018-ம் ஆண்டுதான் வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உலக வெப்பமயமாதலால் நம் அடுத்த தலைமுறைக்கு ஏற்படும் விபரீதத்தை எளிதில் விளக்கும் வகையில் கிரீன் பீஸ் என்ற அரசு சாரா அமைப்பு வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ வெப்பமயமாதலின் தீவிரத்தையும், நம் அடுத்த தலைமுறையினரின் நிலை பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளது. வீடியோ தொடங்கும்போது தாய் மற்றும் குழந்தையின் சிலைகள் காண்பிக்கப்படுகிறது. அனைவரும் மிக சாதாரணமாக அந்தச் சிலையைக் கடந்து செல்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் குழந்தையின் கையிலிருந்து தண்ணீர் வடிய ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல குழந்தை உருகிக்கொண்டிருக்கிறது. பிறகு, குழந்தை உருகுவதை அனைவரும் 2 நிமிடம் நின்று பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இறுதியில் குழந்தை முற்றிலும் உடைந்து விழுகிறது. இந்த இரு சிலைகளில் தாயின் கல்லினாலும், குழந்தை பனிக்கட்டியின் மூலமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க குழந்தை உருகுகிறது. இறுதியாகச் சிலையின் கீழே உள்ள வாசகத்தைக் காட்டுகிறார்கள். அதில் ‘ உலக வெப்பமயமாதலால் நம் சந்ததியினர் மறைந்துகொண்டிருகின்றனர்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.