`குணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க!' பெற்றோர்களை எச்சரிக்கும் உளவியல் #ViralVideoPsychology

உங்களின் தற்காலிக கேளிக்கைக்காக, ஒரு குழந்தையின் மன உணர்வுகளோடு விளையாடுவதும் உணர்ச்சி துஷ்பிரயோகமே

சில தினங்களாக வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வருகிறது அந்த வீடியோ. அம்மா ஒருவர் தன் மகளிடம் சேட்டை செய்தால் அடி விழும் என்கிறார். அதற்கு அந்தச் சிறுமி, 'சேட்டைப் பண்ணினா அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது. குணமா வாயால் சொல்லணும்' என அழுதபடியே சொல்கிறாள். இப்படி ஒரு தடவையல்ல, பல தடவை அந்த சிறுமி தன் வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடன் தன் அம்மாவிடம் சொல்கிறாள். அந்த வீடியோவில் முகம் காட்டாத சிறுமியின் அம்மாவைப் போலவே, வீடியோவைப் பார்க்கும் எல்லோருமே ரசித்துச் சிரிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பும்,  இதேபோல ஒரு அம்மா-குழந்தை வீடியோ வைரலானது. அதில், 'உன் அக்காவைத்தான் நிறைய பிடிக்கும்' என விளையாட்டாகச் சொல்லும் அம்மாவிடம், 'அப்போ என் மேலே பாசம் இல்லையா' என மழலையில் கேட்டபடியே அழுகிறது குழந்தை. இதுபோல குழந்தைகளை அழவைக்கும் வீடியோக்கள், இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வீடியோக்களில் வரும் அம்மாக்களுக்குத் தாங்கள் செய்வது சும்மா விளையாட்டுக்கு என்பது நன்குத் தெரியும். ஆனால், குழந்தைகளுக்கு?

 

 

 

இப்படிக் குழந்தைகளை அழவைத்து வீடியோ எடுப்பது சரியா? இந்த மாதிரியான செயல் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும்? என்ன சொல்கிறார், உளவியல் நிபுணர் ஷாலினி.

வீடியோ குழந்தை

``தங்கள் குழந்தையைச் சீண்டிவிட்டு, அது ரசிக்கும்படி ஏதாவது செய்வதை வீடியோ பதிவுசெய்து  வாட்ஸ்அப்பில் வெளியிடுவது இப்போது பிரபலமாகி வருகிறது. இதில் அம்மாக்களும் விதிவிலக்கில்லை. இதைக் கொஞ்சம் உளவியல்ரீதியில் அணுக வேண்டும். குழந்தைகளுடனான உறவில், மற்றவர்களைவிட தனக்கு இயல்பாகவே அதிக உரிமை இருப்பதாக அம்மாக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், தனக்குப் பிடித்ததையெல்லாம் பிள்ளைகளின் மேல் திணிப்பது  காலங்காலமாக நடந்து வருகிறது. அதில் ஒன்றாகத்தான் நான் இந்த வீடியோவையும் பார்க்கிறேன்.

ஆனால், குழந்தையின் பலவீனத்தையோ, அதன் பிரியத்தையோ தன் பொழுதுபோக்குக்காக அம்மா பயன்படுத்துவது நிச்சயம் தவறுதான். இப்படி, தன்னை வீடியோவில் பதிவுசெய்வதற்காக, சும்மா விளையாட்டுக்குத்தான் அம்மா சீண்டுகிறார் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது அல்லவா? அம்மா சீண்டும்போது, அந்தக் குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? நிஜமாகவே அம்மாவுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை. அதனால்தான் இப்படி மிரட்டுகிறார், கோபப்படுகிறார் என்று நினைக்கும். அந்த நினைப்பு அந்தக் குழந்தைக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கும். அதனால், மனம் உடைந்துபோகும்; இந்த வீடியோ நிகழ்வு முடிந்த பின்பும் குழந்தை கவலைப்பட்டு அழலாம்; எல்லாவற்றுக்கும் மேல் அம்மா தன்னைவிட்டுவிட்டுப் போய்விடுவாளோ என்ற நினைப்பில் பாதுகாப்பின்மையாக உணரும்.

ஒரு சாதாரண விளையாட்டு விஷயத்தில் இவ்வளவு தூரம் யோசிப்பது சரியா என நினைக்க வேண்டாம். குழந்தைகளின் மனம் அப்படிப்பட்டது. உங்களின் தற்காலிக கேளிக்கைக்காக, ஒரு குழந்தையின் மன உணர்வுகளோடு விளையாடுவதும் உணர்ச்சி துஷ்பிரயோகமே ( psychological abuse). இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள் பெற்றோரே. ஆங்கிலத்தில்,  With great power comes greater responsibility என்றொரு பொன்மொழி இருக்கிறது. 'அம்மாவாக இருப்பது பெரும் அதிகாரம். அதனால், தாய்மார்கள் அதிக தார்மீக பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம்' என்பது இதன் பொருள். ஆகவே, டெக்னாலிஜிக்கும் லைக்குக்கும் ஆசைப்பட்டுப் பொறுப்பை மறந்துவிடாதீர்கள்'' என்கிறார் ஷாலினி.

 

இதுபோன்ற வீடியோக்கள், குழந்தைகளின் உளவியலை பாதிக்கும் என நீங்கள் கருதினால், உங்கள் கருத்தை கமென்ட் செய்யவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!