வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (14/09/2018)

கடைசி தொடர்பு:18:25 (14/09/2018)

ஊக்கப்படுத்திய 78 வயது மகன்... 102 வயதில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை!

உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார், பஞ்சாப்பைச் சேர்ந்த 102 வயது  பெண் ஒருவர். 

வீராங்கனை

இளம் வீரர்களின் சாதனைகளையே நம் நாடும் நாட்டு மக்களும் அதிகமாகப் பேசுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் வாழும் பல வயதானவர்களும் தங்களின் துறைகளில் பல சாதனை படைத்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் வயது வெறும் எண்கள் மட்டுமே. இதை நிரூபித்துக் காட்டியுள்ளார் இந்தியாவின் மிக வயதான தடகள வீராங்கனை மன் கவுர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த 102 வயதான கவுர் என்ற வீராங்கனை ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் (World Masters Athletics ) 100-104 வயது பிரிவினருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். குரு தேவ் என்ற தன் 78 வயதான மகன் அளித்த ஊக்கத்தினால் 93 வயதில் தன் தடகள வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் கவுர். அவரின் மகன் குரு தேவும் முதியவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். 

 இப்போது வரை தனது தாய்க்கு எந்தவித உடல் பாதிப்புகளும் இல்லை என குருதேவ் தெரிவித்துள்ளார். ‘முதல் முறையாக என் தாய் ஓடத் தொடங்கும்போது 100 மீட்டரை ஒரு நிமிடம் எட்டு விநாடிகளில் கடந்தார்’ என  சொல்லி நெகிழ்கிறார் குரு தேவ். தங்கம் வெல்வது கவுருக்கு இது முதல் முறையல்ல. கடந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் இவர் தங்கம் வென்றுள்ளார். இதுவரை கவுர் 5 முறை உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். அதிலும் கடந்த முறை இவர் கலந்துகொண்ட 100 மீட்டர் ஓட்டத்தின் மூலம் நூறு வயதானவர்களில் மிகவும் வேகமாக ஓடக்கூடியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

102 வயதான இந்த இளம் வீராங்கனை தங்கம் மட்டுமல்ல தன் சாதனையின் மூலம் சமூக வலைதளங்களில் பலரின் மனதையும் வென்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி.