தாயாகவும் வீராங்கனையாகவும் சாதித்த பெண்! - நெகிழ்ச்சிக் கதை

170 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியின் இடையில் தாயாக தன் கடமையைச் செய்த லண்டன் வீராங்கனைக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தாய்

அல்ட்ரா ட்ரைய்ல் மவுண்ட் பிளான்க் (UTMB) என்ற மலையேறும் மாரத்தான் போட்டி ஆண்டுதோறும் பிரான்ஸில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற மலையேறும் மாரத்தான் போட்டியின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் சமூகவலைதளங்களில் பலரின் மனதைக் கவர்ந்துள்ளது. 

170 கிமீ தூரம் கொண்ட இந்தப் போட்டியில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் ஷோபியா பவர் என்ற 36 வயது பெண்ணும் கலந்துகொண்டார். இதில் என்ன தனி சிறப்பு எனப் பலருக்கும் தோன்றும். இவர் இந்தப் போட்டியின் நடுவே கிடைக்கும் நேரத்தில் தன் மூன்று மாதக்குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்துக்கொண்டும், ஒரு வீராங்கனையாக 43 மணிநேரத்தில் தன் இலக்கை அடைந்தும் சாதனை படைத்துள்ளார். போட்டியின் நடுவே ஷோபியா தன் குழந்தை கார்மிக்கிற்கு பால் அளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பலரின் பாராட்டையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளது. 

இது குறித்து பேசிய ஷோபியா, ``கார்மிக் என்னுடைய மூன்று மாதக் குழந்தை. அவனுக்கு டொனாச்சா என்ற அண்ணனும் உள்ளான். அல்ட்ரா ட்ரைய்ல் மவுண்ட் பிளான்க் போட்டியில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக 2014-ல் டொனாச்சா என் வயிற்றில் இருக்கும்போது எனக்கு இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நிர்வாகிகள் என்னைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருந்தது அந்த நேரங்களில் என் கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, இது வித்தியாசமாகவும் புதுவித அனுபவமாகவும் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தப் போட்டியில் ஷோபியா தோற்றிருந்தாலும் ஒரு தாயாக வெற்றி பெற்று சமூகவலைதளங்களில் அனைவர் மனதிலும் இடம்பிடித்து விட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!