போலீஸ் கண்முன்னே கோடாரியால் வெட்டப்பட்ட இளைஞர்! மனதை உறையவைத்த ஹைதராபாத் கொலை | A man was hacked to death On Busy Hyderabad Road

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (26/09/2018)

கடைசி தொடர்பு:18:21 (26/09/2018)

போலீஸ் கண்முன்னே கோடாரியால் வெட்டப்பட்ட இளைஞர்! மனதை உறையவைத்த ஹைதராபாத் கொலை

ஹைதராபாத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்படும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவர் மனதையும் உறையச் செய்துள்ளது. 

கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அட்டபூர் பகுதியில் இன்று காலை நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘வீடியோ தொடங்கும்போது, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ஒருவர் தரையில் விழுந்து கிடக்கிறார். அவரின் அருகில் நின்ற மஞ்சள் சட்டையணிந்த மற்றொருவர் விழுந்து கிடந்தவரை கோடாரி கொண்டு சரமாரியாக வெட்டுகிறார். அருகில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் வெட்டியவரைக் கீழே தள்ளிவிட, விழுந்தவர் உடனடியாக எழுந்து யாரும் தன் அருகில் வராதவாறு கோடாரியை அனைவர் நோக்கியும் காட்டுகிறார். அருகில் வந்தவர்கள் தெறித்து ஓடுகின்றனர். இதையடுத்து மஞ்சள் சட்டைக்காரர் தொடர்ந்து அந்த நபரை கோடாரியால் சரமாரியாக வெட்டுகிறார். இதில் தரையில் கிடந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார். இந்தச் சம்பவம் போக்குவரத்துக் காவலர் கண்முன்னே நடந்துள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவருக்கும் நெஞ்சு பதறும். அந்த அளவு கொடூரமாக ஒருவர் மற்றொருவரை பட்டப்பகலில் கொலை செய்கிறார். 

ஹைதராபாத் சாலையில் நடந்த இந்தக் கொலையில் இறந்தவர் 25 வயதான ரமேஷ் என்பது அடுத்து நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மளிகைக்கடை வைத்திருந்த மகேஷ் என்பவர் காதல் பிரச்னையால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர் ரமேஷ். இவர்தான் இன்று கொல்லப்பட்டுள்ளார். இவரைக் கொன்றது மகேஷின் தந்தை மற்றும் மாமா எனவும் தெரியவந்துள்ளது. 

இன்று காலை ராஜேந்திர நகர் நீதிமன்றத்தில் இருந்து ரமேஷ் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அங்கிருந்து, 100 மீட்டர் இடைவெளியில் மகேஷின் தந்தையும் மாமாவும் ரமேஷைப் பின் தொடர்ந்து வந்துள்ளனர். பி.வி.என்.ஆர். எக்ஸ்பிரஸ் சாலையில் ரமேஷ் வரும்போது அவரைப் பின்தொடர்ந்து ஒருவர் கோடாரியால் தாக்கியுள்ளார். முதல் தாக்குதலிலேயே ரமேஷ் கீழே விழுந்துள்ளார். அவர் விழுந்த பிறகு சாகும்வரை தொடர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். ரமேஷைக் கொலை செய்த பிறகு இதில் தொடர்புடைய மகேஷின் தந்தை மற்றும் மாமா ஆகிய இருவரும் கையில் வைத்திருந்த கோடாரியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

இந்தக் கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ``கொலை சம்பவம் நடக்கும்போது அருகில் இருந்த சிலர் கொலையாளியைத் தடுத்தனர். ஆனால், அவர்களின் முயற்சி கைகொடுக்கவில்லை. இந்த நிகழ்வின்போது அருகில் மூன்று காவலர்கள் இருந்தனர். அதில் இருவர், கொலையைக் கண்டதும் தங்களின் தடியை எடுக்கச் சென்றனர். ஒரு காவலர் மட்டும் கொலையாளியை தடுத்தார். ஆனால், கொலையாளி அதையும் மீறி தாக்குதல் நடத்துவதிலேயே குறியாக இருந்தார். மேலும், கொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது அப்போது அந்த வழியாகக் காவல் வாகனம் ஒன்று சென்றது. அவ்வளவு கூட்டத்தை பார்த்தும் காவல் வாகனம் நிற்காமல் சென்றது’ என கூறியுள்ளனர்.