வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (05/11/2018)

கடைசி தொடர்பு:12:10 (05/11/2018)

இணையத்தைக் கலக்கும் கரடிக்குட்டி! வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது?

நேற்று முதல், ஒரு கரடிக்குட்டியின் வீடியோ இணையத்தைக் கலக்கிவருகிறது. இதைப் பார்த்த அனைவரும்  அதைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 

கரடி

‘ஒருவர், முயற்சியைக் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை’. இந்த வரிகள், மாவீரர் அலெக்ஸாண்டர் கூறியவை. இதை அப்படியே நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு குட்டிக்கரடி. 

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்ட்ரோம் ஹன்ட்லி (Storm Huntley) என்ற தொலைக்காட்ந்த் தொகுப்பாளர், ஒரு வீடியோவைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களில், 10 மில்லியன் பேர் அதைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது போன்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

அந்த வீடியோவில், ஒரு குட்டிக்கரடி தன் தாயுடன் பனி மலையில் ஏற முயல்கிறது. தாய்க் கரடி மிகவும் சாதாரணமாக மலையில் ஏறி விடுகிறது. ஆனால், அதன் பின்னால் வந்த குட்டிக்கரடி, மலை ஏற முயற்சி செய்து, தொடர்ந்து தவறி விழுந்துகொண்டேயிருக்கிறது. மலை மேலே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கிறது தாய்க் கரடி. குட்டிக்கரடி 300 அடி உள்ள மலையின் கீழ் வரை சென்று சற்றும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் ஏற முயல்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும், தாங்கள் அமர்ந்திருக்கும் சீட்டின் நுனிக்கு செல்வார்கள். ஆனால், தன்னம்பிக்கையை இழக்காத அந்த குட்டிக்கரடி, இறுதியில் மலையைக் கடந்து தன் தாயிடம் சேர்ந்து விடுகிறது. 

கரடியின் இந்தச் செயல், உலக அளவில் உள்ள நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. மேலும், இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.  ‘உலகின் மிகச் சிறிய திகில் காட்சி, ''இந்த வீடியோவைப் பார்ந்த நிமிடங்களில் என்னால் சுவாசிக்க முடியவில்லை. தாய்க் கரடியைவிட எனக்குதான் அதிகம் பதற்றமாக உள்ளது'’ போன்ற கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.