வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (09/12/2018)

கடைசி தொடர்பு:14:33 (09/12/2018)

வைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777

எமிரேட்ஸ் விமானம் முழுவதும் வைரத்தால் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

விமானம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் விமானத்தின் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது  ‘ சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்களை கவரும் வைர கற்கள் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம்தான் அது’. அதனுடன்  ‘எமிரேட்ஸ் வழங்கும் பிளிங் 777’ என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் அடித்து உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. தற்போது அது ஒரு விவாத பொருளாகவும் மாறியுள்ளது. 

வைரலான போட்டோ

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் எமிரேட்ஸ் நிறுவத்திடம், இது உண்மையா? அறிவியலுடன் விளையாடுகிறீர்களா? போன்ற பல கேள்விகள், கருத்துகளுடன் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இது உண்மையான விமானம் இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. சாரா ஷகீல் என்பவர் படிக கற்கள் செய்வதில் திறமை வாய்ந்த கலைஞர் (crystal artist). படிக வேலைப்பாடுகள் நிறைந்த பொருள்கள் மற்றும் தன் இணைய வடிவமைப்பு புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைதளத்தில் வெளியிடுவது இவரின் வழக்கம். அப்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படத்தில் முற்றிலும் வைரத்தால் நிறைத்தது போன்று எடிட் செய்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்துள்ளார். இது எப்படியோ எமிரேட்ஸ் நிறுவனத்தின் கண்களில் பட, சாரா ஷகீல் அனுமதியுடன் அந்த நிறுவனம் விமானத்தின் புகைப்படத்தை தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராம்

இது குறித்து Gulf செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “ அது உண்மையான விமானம் இல்லை. சாரா ஷகீல் என்ற கலைஞரின் புகைப்படத்தைத்தான் நாங்கள் பதிவிட்டிருந்தோம்” என விளக்கமளித்துள்ளார்.