வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (30/01/2017)

கடைசி தொடர்பு:12:46 (01/02/2017)

நிச்சயதார்த்த புடவையில் காதலை வெளிப்படுத்திய சமந்தா!

மந்தா - நாக சைதன்யா நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நேற்று கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. மிகவும் முக்கியமானவர்கள் சிலரே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்... அஃப்கோர்ஸ் சமந்தா - சைதன்யா ஜோடிதான். அவ்வளவு க்யூட். அவர்கள் பரிமாறிக்கொண்ட காதல் பார்வைகள். 'சே'... இப்படித்தான் சைதன்யாவை செல்லமாக அழைக்கிறார் சமந்தா.

சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் மோதிரம்  மாற்றும் வைபவம், சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஐயர் வைத்து நிச்சயதார்த்தம் என இரண்டு மதங்களின் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உயரமான விளக்குகளால் சூழப்பட்ட மேடை.  காதல் ஜோடி நின்ற தரைத்தள விரிப்பு பட்டு வேஷ்டி அமைப்பில் வடிவமைக்கப்பட்டு, சுற்றிலும்  பூக்களாலும், பாய்ச்சப்பட்ட ஒளியாலும் ஜொலிஜொலித்தது.

சமந்தா - நாக சைதன்யா நிச்சயதார்த்தம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தபோது 'கார்த்திக் - ஜெஸ்ஸி'யாக ஆரம்பித்த சமந்தா - நாக சைதன்யா காதல், இன்று நிச்சயம் முடிந்து முகூர்த்தத்துக்குக் காத்திருக்கிறது. பல காலம் மீடியாவின் கேள்விகளுக்கு மழுப்பலையே பதிலாக தந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் தன் பேட்டியில் வெளிப்படையாக தங்கள் காதலை அறிவித்தார் சே. நேற்றைய தன் நிச்சயதார்த்த உடையில், தங்கள் காதல் கதையின் அத்தியாயங்களை கைவேலைப்பாடுகளாக்கி, அதை ஆசையுடன் அணிந்துகொண்டு சமந்தா நின்றது... ஹைலைட். 


தன் குடும்பத்துடன் நாக சைதன்யா - சமந்தா ஜோடி

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சமந்தாவின் டிசைனர் க்ரேஷா பஜாஜினுடைய 'கோயிஷ் (Koesch)' நிறுவனம், தன்னுடைய கஸ்டமர்களுக்கு அவர்கள் விரும்பும் தீம்களை நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற வைபங்களுக்கான உடைகளில் டிசைன் செய்து கொடுப்பதில் புகழ்பெற்றது. தன் நிச்சய உடையை, தங்கள் காதல் தருணங்களின் காட்சிகளால் ஸ்பெஷலாக்க விரும்பினார் சமந்தா.

'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் 'கார்த்திக், ஜெஸ்ஸி'  பார்க்கில் நிற்பது தொடங்கி, சேயுடன் சமந்தா பைக்கில் சென்ற புகைப்படம், இருவரும் ஜோடியாக முதல் முறையாக மீடியா முன் நின்ற புகைப்படம், அகில் நாகார்ஜுனா நிச்சயதார்த்தத்தில் சே குடும்பத்துடன் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம், இருவரும் சேர்த்து எடுத்துக்கொண்ட ஜோடி புகைப்படங்கள்... என தன் அனைத்து பொக்கிஷப் புகைப்படங்களையும் டிசைனரிடம் கொடுத்தார் சமந்தா. அவற்றை தன் நிச்சயப் புடவையில்,  கைவேலைப்பாடாக பார்டர் வொர்க் செய்து தரும்படிக் கேட்டார். அவருடைய க்ரீம் கலர் புடவையில் அந்தக் காட்சிகள் அனைத்தையும் கோல்டன் ஜரி எம்பிராய்டரி மூலம் கொண்டுவர, டிசைனருக்கு ஒருமாத காலத்துக்கும் மேல் தேவைப்பட்டது.

Samantha Engagement

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

நிச்சய நிகழ்வில் தன் மனம் போல் அமைந்த நிச்சயப் புடவை, கைநிறைய கோல்டன் வளையல்கள், கழுத்தில் அன்கட் டைமண்ட் நெக்லஸ், தங்க நெற்றிச்சுட்டி என நின்றிருந்த சமந்தா... அழகு. 

 ''என் அம்மா எனக்கு மகளாயிருக்கிறார் ('மனம்' படத்தில் நாகார்ஜுனாவின் அம்மாவாக சமந்தா நடித்திருப்பார்). என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை' என நாகார்ஜுனா தன் அன்பை வெளிப்படுத்த, 'எனக்கு மற்றொரு சிஸ்டர் கிடைத்திருக்கிறார். ஐ'ம் ஸோ ஹேப்பி' என கொண்டாடியிருக்கிறார் அகில் நாகார்ஜுனா.

சமந்தா - சேவின் திருமணத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெளிநாட்டில் கிராண்டாக, ஸ்பெஷலாக கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சமந்தாவின் உறவினர்கள்.

நிஜ வாழ்க்கையில் சேர்ந்துவிட்டார்கள் 'கார்த்திக் - ஜெஸ்ஸி'! வாழ்த்துகள் சமந்தா - சே!

சமந்தா - நாக சைதன்யா நிச்சயதார்த்த ஆல்பத்தைக் காண க்ளிக் பண்ணுங்க

-அதிதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்