‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை

சாருஹாசன்

’இவர் ஒன்பது வயதில் பள்ளிக்குச் செல்ல துவங்கினார். ஐம்பது வயதுக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்தார். இப்போது, எண்பது வயதில் புத்தகம் எழுதியிருக்கிறார். உண்மையை நகைச்சுவையாக சொல்வதுதான் இவரின் சிறப்பு என்று நினைக்கிறேன்...’ ’திங்கிங் ஆன் மை ஃபீட்’ (Thinking On My Feet) என்ற சாருஹாசனின் சுயசரிதைப் புத்தகத்தில் இப்படி ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார், அவரது மனைவி கோமளம் சாருஹாசன்.

புத்தகத்தை திறந்தவுடன் சாருஹாசன் - கோமளம் சாருஹாசன் தம்பதியரின் அறுபதாம் ஆண்டு திருமண நாள் புகைப்படம் அவர்களின் அழகு வாழ்க்கையின் அன்னியோயனத்துக்கு சாட்சியாக பளீரிடுகிறது.

சாருஹாசனுக்கு தற்போது 87 வயது. சமீபத்தில் மனைவி கோமளம் மறைந்துவிட, அவருடான நினைவலைகளுடன் மகள் சுஹாசினி மணிரத்னம் வீட்டில் வசித்துவருகிறார். மனைவி, காதல், திருமணம் ஆகியவற்றைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

சாருஹாசன்‘ஒருநாள் அப்பா என்னிடம், ''உன் அம்மாவுக்குப் பின், உன் சகோதர சகோதரிகளைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும். அதனால், நீ திருமணம் செய்துக்கொள்’ என்று கூறினார். என்னிடம் இதைப் பற்றி பேசுவதற்கு முன்பே எனக்கு பெண் பார்த்துவைத்துவிட்டார் என்பது வேறுகதை. திருமணமும் நடந்தது. அப்பாவுக்கு எதிரே அமர்ந்து பேசவே தயங்கும் காலம் அது. நான் கோமளத்தை முதன்முதலில் பார்த்தது, எங்களின் திருமண நாளில்தான். வழக்கறிஞராகவும் நடிகராகவும் வெளியுலகத்தில் சுதந்திரமாக வலம் வந்திருக்கிறேன். ஆனால், வீட்டு நிர்வாகம் மொத்தமும் என் மனைவி கோமளத்தின் கையில்தான். அந்த வகையில், அவள் எனக்கு மேலதிகாரியே'' என்கிறார் பெருமிதத்துடன்.

''எங்களின் திருமண வாழ்க்கையில், நான் அவளைப் பெரிதாக கடிந்துகொண்டதோ, சண்டையிட்டதோ இல்லை. எனக்கு அதில் உடன்பாடும் இல்லை. ஆனால், அவள் மீது ஆதிக்கம் செலுத்தினேனா இல்லையா என்பதை அவளிடம் இதுவரை நான் கேட்டதில்லை. ஏன் நான் உட்பட எல்லா ஆண்களுமே பெண்களிடம், குறிப்பாக மனைவியிடம் ஆணாதிக்கத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், காதலும் திருமணமும் வெவ்வேறு விஷயங்கள்.

என்னிடம் சில நண்பர்கள் வந்து, ’நாங்கள் காதலிக்கிறோம்; திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம்’ என்பார்கள். 'காதலிக்கும்போது சில மணி நேரங்கள் பார்த்து, சிரித்து, பேசிவிட்டு சென்றுவிடலாம். திருமணம் செய்துகொண்டால் ஆண்டாண்டு காலம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு சலிப்பின்றி பேசவேண்டும். அதனால், நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள்’ என்று கூறுவேன்.

என் மகள்கள் மூன்று பேருக்கும் 'நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால், திருமணம் செய்துக்கொள்ளாதீர்கள்' என்று கூறியவன் நான். ஏனென்றால், பெண்களுக்கு திருமண வாழ்க்கையில், சுதந்திரம் கிடைக்காது என்பது என் கருத்து. ஆனால், அவர்கள் மூவருமே, திருமணம் செய்துகொண்டார்கள். அது, அவர்களின் சுதந்திரம் என்றே நினைக்கிறேன்.'’ என்பவர் குரலில் யதார்த்தமும் மென்மையும் இழையோடுகிறது.

- ஷோபனா

படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!