'அட... ஈனப்பெருஞ்சுவருனுதாங்க போஸ்டரே அடிக்கச் சொன்னாரு...!' - தி.மு.க. போஸ்டர் பின்னணி | They only asked us to use that word in Stalin Birthday Poster

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (06/03/2017)

கடைசி தொடர்பு:15:05 (06/03/2017)

'அட... ஈனப்பெருஞ்சுவருனுதாங்க போஸ்டரே அடிக்கச் சொன்னாரு...!' - தி.மு.க. போஸ்டர் பின்னணி

மு க ஸ்டாலின்

'பருத்தி வீரன்' படத்தில் நடிகர் கஞ்சா கறுப்பு பேசும் வசனம் ஒன்று இடம்பெறும். 'மாடுதானயா வாங்கப் போறேன்னு சொன்னேன்... போஸ்டர் லெவல்ல கொண்டுவந்து விட்டுட்டீங்களேயா' என்பதுதான் அந்த வசனம். இங்கே ஒரே ஒரு போஸ்டர் அடித்த காரணத்துக்காக, போஸ்டர் அடித்தவரை வேற லெவலில் கொண்டுவந்து விட்டிருக்கின்றனர் சமூக வலைதளவாசிகள். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்காகத் திருக்கண்டலத்தைச் சேர்ந்த சிம்சோன் என்ற அந்தக் கட்சியின் தொண்டர் அடித்திருந்த பிறந்த நாள் போஸ்டர்தான், சமூக வலைதளங்களில் சமீபத்திய வைரல்.

'மானம் காக்கவந்த ஈனப்பெருஞ்சுவரே...' என்ற வாசகம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். இந்த வாசகம் உருவான விதம் பற்றி அந்தப் போஸ்டரை அச்சடித்த அம்மன் லித்தோ கிராஃபி அச்சக உரிமையாளர் ஏழுமலை, ''எங்ககிட்டே, எல்லோரும் அவங்களே போஸ்டர் டிசைன் பண்ண வருவாங்க. நாங்க பிரின்ட் மட்டும் எடுத்துக் கொடுப்போம். அப்படியான சில சந்தர்ப்பத்துல எங்களோட டிசைனர்கிட்டேயும் இதுபத்திப் பேசுவேன். அப்படி, சிம்சோனே கைப்பட எழுதிக்கொடுத்த பேப்பர்லேயும் அதுபோன்ற வசனம்தான் இருக்கு.

அவர் எந்தத் தப்பான அர்த்தத்திலேயும் அந்த வசனத்தை எழுதுன மாதிரி எனக்குத் தெரியலை. 'மானம் காக்கும் ஈனப்பெருஞ்சுவரே...' என்கிற அர்த்தத்தில் அதை எழுதினாரா... இல்லை, 'மானம் காக்கும் சீனப்பெருஞ்சுவரே...' என்கிற அர்த்தத்தில் அப்படி எழுதினாரா எனக்குத் தெரியலை. போஸ்டர் பிரின்ட் ஆகி வந்தப்போகூட... 'நல்லாத்தான் வந்துருக்கு' என்றார் சிம்சோன். அவர், ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்துச் சொன்னப்பக்கூட நாங்கதான் போஸ்டர் அடிச்சுக் கொடுத்தோம். இப்ப, இது சம்பந்தமா மொத்தம் நூறு போஸ்டர் அடிச்சோம். ஆனா, இது தெரியாம செஞ்ச தப்பாத்தான் இருக்கு. உண்மையிலே என்ன மனநிலையில... எந்த உணர்வுல அதை எழுதியிருந்தார்னு சிம்சோனுக்கு மட்டும்தான் தெரியும். இப்ப அந்தப் போஸ்டரையும் ரீமூவ் பண்ணச்சொல்லி கட்சித் தலைமையகத்துலேர்ந்து ஒன்றியச் செயலாளர்கிட்ட சொல்லியிருக்காங்க'' என்றார்.

சிலர், பிரபலமான பின்பு போஸ்டர் அடிக்கிறார்கள்... வேறு சிலர், போஸ்டர் அடித்தபின்பு பிரபலமாகிறார்கள்.

- ந.புஹாரி ராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்