”என் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு நான் மன்னிப்பு கேட்டேன்” - சென்னைப் பெண்ணின் வேதனை அனுபவம்


பாலியல்

மீபத்தில், டிவிஎஃப் என்ற ஆன்லைன் டிவி நிறுவனத் தலைவர் அருணாப் குமார் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றசாட்டுகளைத் தொடர்ந்து,பல பெண்கள் பணியிடத்தில் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல் அல்லது துன்புறத்தலை சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக எழுதி வருகின்றனர்.

அதில் சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி பிரசாத் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஓர் அனுபவம்,  வைரலாகியுள்ளது. அவர் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து எழுதிய பதிவு இதோ...

 “எனக்கு 2013-ம் ஆண்டு நடந்த  ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். நான் சென்னையில் ஒரு பெரிய தன்னார்வல தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய மேலதிகாரியின் பார்வையே சரியாக இருக்காது.  எங்களுடைய தன்னார்வலப் பணி, பெரும்பாலும் வெளியில் சென்று வேலைப் பார்ப்பதாகத்தான் இருக்கும். என்னுடைய குழுவில் பெரும்பாலும் ஆண்கள். அந்த மேலதிகாரி பெண்களின் கண்களைப் பார்த்து பேசவே மாட்டார்; மார்பகங்களைப் பார்த்துதான் பேசுவார். சமயத்தில், திடீரென நட்பாக கட்டிப்பிடிப்பார்; என் கையை தொடுவார்; நான் என்ன உடை அணிந்துவந்தாலும், அதுப்பற்றி  பேசுவார் அல்லது விசாரிப்பார். 

நான் அந்த தன்னார்வலர் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததால், இவரின் இத்தகைய செயல்பாடுகளை நான் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனாலும், அவரின் சீண்டல்களிலிருந்து தப்பமுடியவில்லை. ஒருமுறை என் வேதனையை சக பெண் ஊழியரிடம் கூறினேன். எனக்கு அப்போது 24 வயது; அந்த பெண் ஊழியருக்கு 50 வயது. அதற்கு அவர், ”அந்த மேலதிகாரி ஒரு ஆங்கிலோ-இந்தியர்; அவர்கள் நட்பு ரீதியாக இப்படி பழகுவார்கள்'' என கூறினார். மேலும், நான் டி-ஷர்ட் அணிவதை தவிர்த்து, குர்தா போன்ற ஆடைகளை அணியவேண்டும் என்றும் எனக்கு அறிவுறுத்தினார். 

சரியென்று... என் வேலையில் மூழ்கினேன்.  ஒரு நாள், அலுவலகத்தில் மற்ற நான்கு தன்னார்வலர்களுடன், பணி விஷயங்கள் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த என் மேலதிகாரி திடீரென என்  பின்புறத்தை பிடித்து அழுத்திவிட்டுச் சென்றார். நான் அதிர்ந்துப்போனேன்.  அங்கேயே அவரை கன்னத்தில் அறைந்திருக்கவேண்டும். என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, நடந்த எல்லாவற்றையும் ஒரு குற்றச்சாட்டாகப் பதிவு செய்து, என் நிறுவனருக்கு அனுப்பினேன்.  மேலும், நடந்த சம்பவத்தை என் வலைப்பதிவிலும் எழுதினேன். விஷயம் பெரியதாகவே, நிறுவனமும் இதுகுறித்து விசாரித்தது; இங்குதான் அந்த நிறுவனத்தின் மொத்த சூட்சுமமும் எனக்கு விளங்கியது. அவர்கள் செய்த விசாரணை கூட்டத்துக்கு என்னை அழைக்கவே இல்லை! அதற்கு மாறாக, எனக்கு தெரியாமல் என் வீட்டுக்குச் சென்று, என் பெற்றோரை  மிரட்டினார்கள். “உங்கள் மகள் ஜெயிலுக்கு செல்ல வேண்டுமா” என மிரட்டியிருக்கிறார்கள். இதைக்கேட்ட என் அம்மா  பயந்துப்போனார்; அவரின்  உடல்நிலை ஏற்கெனவே மோசமாயிருந்தது. இதனை கருத்தில்கொண்டு, எனக்கு நியாயம் தேடும் முயற்சியிலிருந்து நான் பின்வாங்கவேண்டி இருந்தது. அவர்கள், என்னிடம் “நடந்தவை அனைத்தும் பொய்” என்று மன்னிப்பு கடிதம் எழுதித்தரவேண்டும் என்று கூறினார்கள். என் சூழ்நிலை கருதி,  நானும் அப்படியே செய்தேன்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், அவர் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலுக்காக, தானே மன்னிப்பு கேட்ட கடிதத்தையும் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

லெட்டர்

இந்தப் பதிவு குறித்து அவரை நாம் அலைபேசியில் தொடர்புகொண்டோம். “தற்போது டிவிஎஃப் நிறுவன விஷயம் வெளியானதால்தான், என் விஷயம் மற்றவர்களுக்கு விழிப்புஉணர்வாக இருக்கட்டுமே என்று மீண்டும் சமூகவலைதளத்தில் பதிவு செய்தேன். நான் அந்த நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக வேலை செய்தேன். ஆனால், எனக்கு இதுப்போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டபோது, ஒட்டுமொத்த நிறுவனமும் எனக்கு எதிராக செயல்பட்டது. 

எனக்கு ஆதரவாக இருந்தவர்களின் குரலை அவர்கள்  பெரியதாக கண்டுகொள்ளவில்லை. அதிகாரமும், பணமும் அவர்கள் கையில் இருந்தது. பணியிடத்தில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வாக ஒரு அமைப்போ அல்லது  உடனே தீர்வுகாணும் ஆணையமோ இல்லை. அப்படி ஒன்று உருவாகவேண்டும் என்ற நோக்கத்திலேயே, என் அனுபவத்தை சமூகவலைதளத்தில் பதிவுசெய்தேன்”, என்று உறுதியாக கூறுகிறார் வைஷ்ணவி! 

இன்னும் எத்தனை சொல்லப்படாத வேதனை கதைகள் நம் பெண்களிடம் இருக்கிறதோ?!

- எம்.ஆர்.ஷோபனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!