வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (15/03/2017)

கடைசி தொடர்பு:13:54 (15/03/2017)

“இஸ்ரோவில் ஆண் - பெண் வேறுபாடு இல்லை!'' - சாட்டிலைட் பெண்கள் பேசுகிறார்கள்! #ISROScientist

லலிதாம்பிகா இஸ்ரோ

ரை வைத்த புடவை, பெரிய ஹேண்ட்பேக், தலையில் மல்லிச்சரம், முகமெல்லாம் சிரிப்புடன் இருக்கும் அந்தப் பெண்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அந்தப் புகைப்படம், அதைப் பற்றிய குறிப்பு இல்லாமல் பார்ப்பவர்களுக்கு, 'ஆன்டீஸ் டே அவுட் போல' என்பதாகத் தோன்றும். ஆனால் அவர்கள், நம் நாட்டின் பெருமையான 'இஸ்ரோ'வில் பணிபுரியும் உயர் அதிகாரிப் பெண்கள். அந்தப் புகைப்படம் பதிவு செய்யப்பட்ட தருணம், சென்ற வருடம் டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி அனுப்பப்பட்டபோது அந்த வெற்றியை அவர்கள் பகிர்ந்துகொண்ட நிமிடம். இந்த உலகின் அதிநவீனத் துறையான விண்வெளித் துறையில், பெண்மையின் அடையாளங்களுடன் வலம் வரும் அந்த ஆளுமைகள், அழகு. இம்முறையும் அதேபோன்ற சாதனை மகிழ்வுக்குத் தருணம் இஸ்ரோவுக்குக் கிட்டியது. 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்விசி37 ராக்கெட்டின் வெற்றிக்குப் பின்னிருந்த இந்த சாட்டிலைட் பெண்களிடம் பேசினோம்! 

“நான் ஒரு மல்டி டாஸ்கர்!”

''திருவனந்தபுரத்தில இருக்கிற விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துல 1988ம் ஆண்டு சேர்ந்தேன். எப்படி 29 வருடம் ஓடிப்போச்சுனு தெரியலை" - லலிதாம்பிகா பேச்சில் இருக்கும் மகிழ்வையும் பெருமிதத்தையும் நாம் அலைபேசி மூலமாகவே உணரமுடிகிறது. 30 வருடங்களுக்கு முன்னால், ஒரு பெண் வேலைக்குச் செல்வது என்பதே அரிது. அப்படியான சூழலில், கிட்டத்தட்ட 24 மணி நேரமும் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து, பேரன் - பேத்திகள் என்றான பிறகும், முதல் நாள் வேலையில் சேர்ந்த உத்வேகத்துடனே இன்று வரை இருக்கும் லலிதாம்பிகா, முன்னுதாரண மனுஷி.

“ஆரம்பத்துல, படிக்கணும், வேலைக்குப் போகணும்னு எல்லாம் எங்க வீட்டில் என்னை சொல்லலை. கல்யாணம், குழந்தைனு ஒரு இல்லத்தரசியா என்னை செட்டில் பண்ணத்தான் நினைச்சாங்க. ஆனா, கணிதவியலாளரான என் தாத்தா ராமச்சந்திரன் பிள்ளைதான், ஆராய்ச்சித் துறையில் என்னை ஊக்கப்படுத்தினார்.

நான் பி.டெக் முடிச்சிட்டு, எம்.டெக் படிச்சிட்டு இருக்கும்போது கல்யாணம் ஆயிடுச்சு. அப்புறம், கொஞ்ச நாள் கல்லூரி ஆசிரியர் வேலை, குழந்தைனு பிஸி ஆனேன். அப்பவே ‘மல்டி-டாஸ்கிங்’ கைவந்திடுச்சு. இஸ்ரோ எனக்கு  மூணாவது வேலை. 1993ம் ஆண்டு,  பிஎஸ்எல்வி வகை விண்கலத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியது. முதல் முயற்சியே தோல்வி. அதுல இருந்து மீண்டு வரவேண்டிய அவசியம் எங்களுக்கு இருந்தது. 1994ல அதே பிஎஸ்எல்வி  விண்கலத்தை நாங்க வெற்றிகரமா செயல்படுத்தினோம். தொடர்ந்து, மங்கல்யான், சந்திரயான் புராஜெக்ட்களிலும் முக்கியப் பணியாற்றினேன். விண்ணில் செலுத்தப்படும் ஒவ்வொரு விண்கலத்தின் பாதையையும், அதுக்குத் தேவைப்படும் எரிபொருட்கள் போன்றவற்றையும் நிர்ணயிப்பது எங்க குழுவோட முக்கியப் பணி.  

இஸ்ரோவில் ஆண் - பெண் வேறுபாடுகள் இல்லை. இங்க திறமையின் அடிப்படையிலதான் அவரவருக்கான பொறுப்புகள் வழங்கப்படுது. வேலைக்கு வந்துட்டா, வீட்டைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ஆரம்பக்காலத்தில், என்னுடைய ஒரு குழந்தைக்கு  அடிக்கடி  உடம்பு சரியில்லாம போகும். அப்போ என் கணவர் பிரதீப் குமார்தான் ரொம்ப உறுதுணையா  இருந்தார். எனக்கு  மட்டுமில்ல, இங்க வேலைப்பார்க்குற பெரும்பாலான பெண்களுக்கு பலமே, அவங்களோட இல்லற இணைதான். 
இஸ்ரோ வேலையுடன் கூடவே, 2008ம் ஆண்டு, ‘ரோபோ  கன்ட்ரோல்' என்ற தலைப்பில் பி.ஹெச்டி முடிச்சேன். 2001ம் ஆண்டு சிறப்பான இஸ்ரோ பணிக்காக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால் விருது வாங்கியிருக்கேன்.

‘எப்படி இவ்வளவு வேலைகளையும் சமாளிக்கிறீங்க?'னு நிறைய பேர் எங்கிட்ட கேப்பாங்க. தினமும் காலையில ஒருமணி நேரம் எனக்கான நேரம். காலையில ஐந்தரை மணிக்கு எழுந்தா, கொஞ்ச நேரம் யோகா, புத்தகம் படிக்கிறதுனு செலவழிப்பேன். இதுதான் என் சக்சஸ் ஃபார்முலானு நினைக்கிறேன்!" 

“இந்தத் துறையில் ஜெயிக்க, குடும்பத்தின் ஒத்துழைப்பு வேண்டும்!”

பெண்கள்


''நாகர்கோவில் பொண்ணு நான். பூமி என்ற எல்லையைத் தாண்டி விண்வெளி வேலைகளைப் பார்த்தாலும், சொந்த மண் அடையாளம் தர்ற உணர்வே சிறப்புதான்'' என்று சொல்லும் ஜெஸ்சி ஃப்ளோராவின் குரலில் குதூகலம். மகேந்திரகிரியிலுள்ள 'இஸ்ரோ' மையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இவர், விண்வெளித் துறையில் தன் 34 வருடப் பணி அனுபவங்களை நம்மிடம் மிக உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார். 

“என் அப்பா ஜான் அகல்ரட்டி, நாகர்கோவிலில் வட்ட வளர்ச்சித்துறை அதிகாரியாக இருந்தார். சின்ன வயசில் இருந்தே, எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் சிறப்பா சிந்திக்கவும், வித்தியாசமான கோணத்தில் ஒரு விஷயத்தை அணுகவும் எனக்குக் கற்றுத் தந்தார். 
பள்ளியில் படிக்கும்போதே இயற்பியலில் ஈர்ப்பு இருந்ததால, ஹோலிகிராஸ் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் முடிச்சிட்டு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் படிச்சேன். அப்போ கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 'இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டட்' நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபரும், பெண்ணும் நான்தான்.

30 வருஷத்துக்கு முன்னால, பக்கத்து ஊருக்குப் பொண்ணை தனியா அனுப்புறதுக்கே பெற்றோர்கள் தயங்குவாங்க. ஆனா எனக்கு முதல் போஸ்டிங் ஹைதிரபாத்தில். 'அவ்ளோ தூரமெல்லாம் போக வேண்டாம்'னு எல்லாரும் சொல்ல, 'இல்ல அவ போகட்டும்'னு என்னை அனுப்பி வெச்ச என் அப்பாதான், விண்ணைத் தொட்ட என்னோட சாதனைகளுக்கு எல்லாம் காரணம். பிறகு 'இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டட்' நிறுவனத்தில், விமானங்களுக்காகச் செயல்படும் 'விங்க்ஸ் கன்ட்ரோலர் சிஸ்டம்' பிரிவில்  ஒரு வருஷம், வேலை பார்த்துட்டு, 1983ம் ஆண்டு, இந்திய விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தேன். அப்போ மொத்தமே மூன்று பெண்கள்தாம் இங்க வேலை பார்த்தாங்க. ஆனா, நெல்லை மாவட்டத்தில் இருக்கிற இஸ்ரோவுக்குச் சொந்தமான மகேந்திரகிரி மையத்தில் மட்டும் இப்போ 78 பெண்கள் பணிபுரியுறாங்க.

என்னோட 30 வருட இஸ்ரோ வாழ்க்கைப் பயணத்தில் நான் வெற்றிகரமாப் பணிபுரிய, நிம்மதியான என் குடும்பச் சூழலும் ஒரு காரணம். எங்க வேலைக்கு இதுதான் நேரம் என்பதெல்லாம் கிடையாது. இந்தச் செயல்திட்டத்தில், பிஎஸ்எல்வி 2-வது  கட்டத்துக்கான மின்னணு தொடர்பான வேலைகளுக்கு, எங்க குழு இரவு பகலா உழைச்சோம். நான் வீட்டுக்குப் போக அதிகாலை மூணு மணியாகிவிடும். ரொம்ப சவாலான பணிச்சூழல். அதையெல்லாம் மீறி ஜெயிக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

சிரமமான இந்தப் பணியை நிறைவாக, நிம்மதியோட செய்ய உறுதுணையா இருக்கிற என் கணவர் எலியாஸ்ஸுக்கும், மகள் ஆனி க்ரஸ்லினுக்கும் நன்றிகள். இருவருமே அவங்களோட சொந்த வேலைகளுக்கு என்னை எதிர்பார்க்கமாட்டாங்க. அலுவல் வேலைகளில் இருந்து இப்போ 'இன்டலிஜன்ஸ் கன்ட்ரோலர்' குறித்து பி.எச்டி பண்ற வரைக்கும், அவங்களோட புரிதல் இல்லைன்னா, எனக்கு எந்த வெற்றியும் சாத்தியமாகியிருக்காது. நான் இந்தத் துறையில் இருப்பது, எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நான் பயன்படுத்திக்கொண்டதால மட்டுமே. வாய்ப்புகள் வரும்போது அவற்றைத் தக்கவைத்துக்கொள்ளணும்.

நல்லா ஞாபகம் இருக்கு. முதன்முறையாக நான் கல்லூரி சென்றபோது, 'ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி நீ எந்தச் சலுகையும் எதிர்பார்க்கக்கூடாது. அதேபோல, ஒரு பெண் என்பதால, நீ எந்த வாய்ப்புகளையும் இழந்துவிடக்கூடாது'னு சொன்னார் எங்கப்பா. இந்த வார்த்தைகள்தாம் என்னை இன்றுவரை இயங்கவைக்கின்றன!"

விண்ணாளும் பெண்மை! 

- ஷோபனா ரூபகுமார்

படம்: ராம்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்