உங்கள் மனைவி அடிக்கடி கோபப்படுகிறாரா பிரச்னை இதுவாகவும் இருக்கலாம்! # HighAlert

மனைவி

நாற்பதை தொட்டிருக்கும் அல்லது 35 வயதை தாண்டிய உங்கள் மனைவியின் நடவடிக்கை மாறுகிறதா? அவர்களை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறதா... தயவு செய்து மனம் திறந்து அவர்களிடம் பேசுங்கள்... அவர்களின் பிரச்னையை அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத ஒரு கடினமான நிலைதான் மெனோபாஸ். எல்லா பெண்களும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை என்பது தான் சிக்கலே. 

மனைவி - கமலி பன்னீர் செல்வம்இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த பிரச்னைகளே என்னுடைய அனுபவங்களை இங்கு எழுத காரணம். இதனால் நான் அடைந்த வலிகளும், இழந்தவைகளும் ஏராளம். என்னைப் போல பிரச்னையை சந்திக்கும் ஒரு தோழிக்கு மெனோபாஸ் தனக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறியவே ஒன்றரை ஆண்டுகள் ஆனதென்று சொன்னார். இதை வாசிக்கும் பெண்கள் தங்கள் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து கொள்ள உதவும், ஆண்கள் அத்தகைய காலகட்டத்தை கடக்கும் பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள உதவும் என்பதற்காக தான்…

உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் மிக சாதாரணமாக இந்த மெனோபாஸை கடப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் மெனொபாஸுக்கு முந்தைய நிலையான (PCOS, PCOD)  என்கிற நிலையை கடக்கும் பெண்கள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.

முதலில் ப்ரீ மெனோபாஸ் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். அவை கால் வலியாககூட இருக்கலாம், அல்லது தலைவலி, முதுகுவலி, பசியின்மை, திடிரென்று அதிகமாகும் உதிரப்போக்கு அல்லது உதிரப்போக்கு கண்ணில் படும்... ஆனால், முதல் மூன்று நாட்கள் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று நான்காம் ஐந்தாம் நாள் அதீத உதிரம் என்று பிரச்சனை சிறியதாக ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் கவனமெடுக்கவும் பெண்களே. உடனடியாக இரண்டு மாத மாதாந்திர பீரியட்ஸ் வந்த நாளை  நோட் செய்யவும். இது தவிர அதீத மூட் ஸ்விங் உணரலாம். திடீரென்று காரணமே இல்லாமல் சந்தோசமாக பாடி ஆட வேண்டும் என்ற உணர்வோ அல்லது அதீத எரிச்சலோ, கோவமோ.. ஒன்றின் முடிவில் இன்னொன்று என்று சட்டென உணர்ச்சிகள் மாறி மாறி உங்கள் மனைவியை ஆட்கொள்ளலாம் ஆண்களே. 

நமக்குள் என்ன நடக்கிறது என்று குழம்பி மருத்துவரை சந்திக்கும்போது, நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தெளிவாக கூறுங்கள். வயதை எக்காரணம் கொண்டும் குறைத்து சொல்லாதீர்கள். எப்போதும் பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன், அல்லது பீரியட்ஸ் நடக்கும் போது நீங்கள் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி கூறினால்தான் மருத்துவரால் டயாக்னைஸ் செய்ய முடியும். இல்லை உங்களுக்கு (PCOS, PCOD) இருப்பதை டாக்டர் உணரவே நாட்கள் பிடிக்கும். 

மனைவி

அதுபோல பருக்கள்... இதனை ஆங்கில மருத்துவர்கள் Acne என்கிறார்கள். பீரியட்ஸ் ஆரம்பிக்கும் போது வந்து, பீரியர்ஸ் முடிந்தவுடன் மறையும் பருக்களாக இருக்காது. தாடைகளில் அதிகளவும், கன்னத்தில் எதிர்பாராத அளவுக்கு... சொல்லப் போனால் நீங்கள் டீன் ஏஜில் கூட அனுபவித்திராத அளவு பெரியதாக இருக்கும். இதற்கு தோல் மருத்துவரை கன்சல்ட் செய்வதை விட, மகப்பேறு மருத்துவரை சந்திப்பதே நல்லது. எனக்கு முதலில் பரு வந்தபோது தோல் மருத்துவரைதான் சந்தித்தேன். அவர் அதற்கான மருந்துகளை கொடுக்க,  அதை சாப்பிட்டு பக்கவிளைவுகள் என்று நகர்ந்தது தனி கதை. 

முகத்தில் தோன்றும் பருக்களுக்கு... கருப்பையில் ஏற்படும் மாற்றங்களும், அங்கு உருவாகும் கட்டிகளாலும் கூட இருக்கலாம். மகப்பேறு மருத்துவரிடம் ஆரம்ப நிலையில் செல்லும்போது அதற்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, கர்ப்பப்பையை காப்பாற்றிக் கொள்ளும் நிலை வரலாம். இது போக, கீழ்காணும் அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட்டல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை ஆலோசிக்கவும்.  

* சாதாரணமாக பீரியட்ஸ் சமயத்தில் வரும் வயிற்றுவலி, கால்வலி, முதுகு வலி  லேசாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் கடப்பவர்களுக்கு வலி அதிகரிக்கும். வலியே தெரியாதவர்கள் கூட வலியை உணருவார்கள்.

* ஹார்மோனின் தாறுமாறான சுழற்சி காரணமாக, பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்பு துவங்கும் தலைவலி, பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாது. சில நேரங்களில் பீரியட்ஸ் ஆரம்பிக்கும் வரை இருக்கும் தலை வலி, உதிரப்போக்கு ஆரம்பித்தவுடன் நின்றுவிடும். 

* சிலருக்கு மார்பில் பாரத்தை சுமப்பது போன்ற வலியிருக்கும். கட்டிகள் தென்பட வாய்ப்புண்டு. அது கேன்சர் கட்டி என்று அலற வேண்டாம். சாதாரண கட்டிகளாக கூட இருக்க வாய்ப்புண்டு. எனவே மருத்துவரிடம் செக் செய்து கொள்ளுங்கள். எனக்கு ஒன்றிரண்டு கட்டிகள் இருந்தது. மருத்துவர்கள் சோதித்து பயப்படத் தேவையில்லை என கூற, பிறகு அவை கரைந்தும்போனது. பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்  மார்பை, சில நேரங்களில் அதன் காம்பை தொட்டால் கூட வலி தாங்க முடியாததாக இருக்கும்.  நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போல தோன்றும். இதுவும் பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும். PCOD & PCOS இரண்டு நிலையிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 

* சில நேரங்களில் பீரியட்ஸ் ஆரம்பிக்கும் முன்னர் ஒன்று அதீதமாக பசிக்கும், இல்லை சாப்பிடவே பிடிக்காது. பீரியட்ஸ் முடியும் வரை இந்த மனநிலை தொடரும். 

* பாலியல் சார்ந்த உணர்வு அதிகமாகும். அதீத வெறுப்பும் தோன்றும். இரண்டு மன நிலையில் நம்பாடு திண்டாட்டமாகும்.  

* சாதாரணமாகவே நீங்கள் கோவப்படுபவர், கொஞ்சம் சென்ஸிடிவ் என்றால் இந்த காலகட்டம் உங்களை அதீத கோவத்துக்கும், உணர்ச்சி குவியலுக்கும் கொண்டு செல்லும். இந்த நேரத்தில்தான் கணவர்களின் ஒத்துழைப்பு பெண்களுக்கு மிக மிக அவசியம். இவ எப்பப் பாரு கத்திகிட்டே இருப்பா... ச்சே'' என்று நீங்களும் எரிந்து விழாமல்... அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடன்டியாக மகப்பேறு மருத்துவரை மனைவியுடன் அணுகுங்கள். 

* மூட் ஸ்விங் மற்றும் டிப்ரஷன்... இரண்டும் சேர்ந்து உங்களை ஆட்டிப்படைக்கும். எதிர்மறையான எண்ணங்கள், ஒரு சுழல் போல உங்களை உள்ளிழுக்கும். நீங்கள் போராடினாலும் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வருவது முடியாத ஒன்றாக இருக்கும், உங்கள் மனதை மாற்ற மிகுந்த போரட்டத்தை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். வாய் விட்டு கதறி அழ வேண்டும் என்கிற சந்தர்ப்த்துக்காக காத்திருப்பீர்கள். ஒன்று யாரையாவது வார்த்தைகளால் காயப்படுத்த முயற்சிப்பீர்கள், அல்லது உங்களை நீங்களே தேவையில்லாத எண்ணங்களால் காயப்படுத்தி கொள்வீர்கள். மன அழுத்தம் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். 

* பீரியட்ஸ் அதிகமாக வரத்துவங்கும். மாதத்தில் இருமுறை, அல்லது நாற்பது, நாற்பதைந்து நாட்கள் என்ற இடைவெளியில் வருவதுடன், உதிரப்போக்கும் அதிகளவில் இருக்கும். அதுவரையில் சமச்சீரான உதிரப்போக்கை சந்தித்த பெண்கள் மன ரீதியாக பீதியடைவதுடன், உடல் ரீதியாக சோர்ந்து போவார்கள். 

* ரத்த அழுத்தமும், படபடப்பும் அதிகரிப்பதுடன், ஏஸியிலும் வியர்த்து கொட்டி இரவு திடுமென எழுவீர்கள். சில நேரங்களில் தூக்கம் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

* ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சியால், உதிரப்போக்கு  மட்டுமன்றி ரத்ததில் சர்க்கரை அளவும், ரத்த கொதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் அம்மா எப்படிப்பட்ட காலநிலையை கடந்து வந்தார் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.  

* நாற்பது வயது வரை பருக்கள் வராமல் இருந்தவர்களுக்கு முகத்தில் தாறுமாறாக பருக்கள் வந்தால், கண்டிப்பாக அது ஹார்மோர்ன் சுழற்சியால் என்பதால், மகப்பேறு மருத்துவரை அவசியம் கலந்தாலோசிக்கவும்.  

* மேற்கண்ட பிரச்னைகளை சந்திக்க நேரிட்டால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசியுங்கள். மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டியிருக்கும். 

கண்டிப்பாக ஒரு ஸ்கேனும், (included vaginal Scan) அவசியம். அதுபோல பேப்ஸ்மியர் (Pap Smear) டெஸ்டும் செய்து விடுங்கள்.  

- கமலி பன்னீர் செல்வம்
(இவர் எழுதிய அனைத்தையும் நாம் மகப்பேறு மருத்துவரிடம் செக் செய்த பிறகே இங்கே வெளியிடுகிறோம்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!