Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''ஜெயலலிதா சமாதி தியானத்துக்கு முன், பின்..?!''- ஓ.பி.எஸ் பற்றிய திலகவதியின் பார்வை

திலகவதி பார்வையில் ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ்

காவல் துறை டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்ற திலகவதி ஐபிஎஸ், தற்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு தனது ஆதரவை தெரித்தும், ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவும் அளித்திருக்கிறார். திடீர் தேர்தல் அரசியலில் களமிறங்கியது குறித்துப் பேசுகிறார் திலகவதி.

"நான் பணியாற்றிய காவல் துறையும் மக்களுக்கான சேவைப் பணிதான். அந்தப் பணியில் சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்காமல், சிறப்பாகவே திலகவதி ஐபிஎஸ்பணியாற்றினேன். ஓய்வுபெற்ற பிறகும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில சேவை செய்ய நினைத்தேன். என்.ஜி.ஓ தொடங்கி செயல்படுவதைவிட, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய முடியும். அரசு உயர் பொறுப்பிலும், ஆட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அரசியல் கட்சியில் சேர முடிவெடுத்தேன். இன்றைய கட்சிகளின் தற்போதைய செயல்பாடுகளை ஆழமாக கவனித்தேன். இன்றைய காலகட்டத்தில், நல்ல அரசியல் கட்சியாக ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுக இருப்பதாக நினைக்கிறேன். அதனால், பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அவருடைய அணியில் சேர்ந்தேன்" என்கிறார் திலகவதி.

பன்னீர்செல்வம் மீதும் குற்றச்சாட்டு இருக்கே என்ற கேள்விக்கு, "கி.மு., கி.பி. என்பதுபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார்ந்து ஓ.பி.எஸ். தியானம் செய்வதற்கு முன், பின் என இரண்டு கால நிலைகளாக இதைப் பிரித்துப் பார்க்கிறேன். ஓ.பி.எஸ். மீதான குற்றச்சாட்டில், யாரால் நிர்பந்தம் செய்யப்பட்டு செயல்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தான் இதுவரை செய்த தவறுகளை உணர்ந்து, மன்னிப்பும் கேட்டு, இனி தூய்மையான அரசியல்வாதியாக செயல்படுவேன் என்றுதான் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். அன்று முதல் நேர்மையான அரசியல்வாதியாகவே செயல்படுகிறார்.

ஓபிஎஸ் எளிமையாகவும் எல்லோரும் எளிதாக சந்திக்கும் வகையிலும் இருக்கிறார். இதுதான் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கியம். தனக்கான புகழ், பப்ளிசிட்டியை நினைக்காமல், வர்தா புயல் சமயத்தில் சிறப்பாக செயல்பட்டார். கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடுக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது, ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்கு டெல்லிக்குச் சென்று, மூன்று துறை மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தீர்வை பெற்றது என பல விஷயங்களிலும் விரைவாக முடிவெடுத்தார். ஜல்லிக்கட்டை நடத்த அலங்காநல்லூர் சென்றவர், மக்கள் எதிர்ப்புக்கு மதிப்பு கொடுத்து திரும்பி வந்தார். ஈகோ இல்லாமல், தற்போதும் அரசியலில் செயல்படுபவர் என்பதால்தான் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தேன்'' என்கிறார் திலகவதி.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல் போராட்டக் களங்களில் தன்னெழுச்சியாக இளைஞர்களும் பொதுமக்களும் செயல்படுவது மகிழ்ச்சியைத் தருவதாக சொல்லும் திலகவதி, ''இனி அரசியல் களத்திலும் ஊழல் இல்லாத, மக்கள் நலன் சார்ந்த அரசியல்வாதிகளையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. எனவேதான், எனது ஓய்வுக் காலத்தை தூய்மையான அரசியல் செயல்பாடுகளில் செலவிட முடிவெடுத்துள்ளேன். காவல் துறை அதிகாரியாகவும், எழுத்தாளராகவும் மக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் நிறைக் குறைகளை கண்கூடப் பார்த்திருக்கேன். அதனால், இந்தப் புதிய களம் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் அணியில் விருப்ப மனுவும் அளித்திருக்கிறேன். இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக பணி செய்வேன்'' என்கிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு இருக்கும் சந்தேகங்களையும் எழுப்புகிறார் திலகவதி. "மெட்ரோ ரெயில் திட்டத்தின் துவக்க விழாவில் நன்றாக கலந்துகொண்டவர், திடீரென உடல்நலக்குறைவு என மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மூன்று மாத சிகிச்சையின் மர்மங்களுக்குப் பிறகு, இறந்த நிலையில்தான் மக்களுக்கு காட்டப்படுகிறார். இவ்வளவு ரகசியத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கவேண்டிய தேவை என்ன? இதற்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மறைந்த முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிகிச்சைப் பெறும் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளிட்டனர். இது, ஒளிவுமறைவில்லா சிகிச்சை தங்கள் தலைவருக்கு அளிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியது. இதுபோல எதையும் செய்யாமல், ஜெயலலிதா விஷயத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்வது, சந்தேகத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மருத்துவர்கள் மற்றும் அவருடன் இருந்த இருவருக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை. ஆனால், நோய்த்தொற்று ஏற்படும் எனச் சொல்லி கவர்னரையும் மற்றவர்களையும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்காதது ஏன்? இப்படி பல சந்தேகங்களுக்கு, ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் நிச்சயம் விடை கிடைக்கும் என நம்புகிறேன். மக்களுக்கு நேர்மையான ஆட்சி நிர்வாகத்தால், நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடந்து அரசியல் களத்தில் பணி செய்வேன்'' என்கிறார் உறுதியான குரலில்.

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close