Quora இப்ப அக்கப்போரா! - கோராவில் சில அட்ராசிட்டீஸ் | Some funny questions on quora

வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (22/03/2017)

கடைசி தொடர்பு:19:21 (22/03/2017)

Quora இப்ப அக்கப்போரா! - கோராவில் சில அட்ராசிட்டீஸ்

என்னதான் உலகம் நிமிஷத்துக்கு நிமிஷம் முன்னேறிக்கிட்டே இருந்தாலும் சிலர் மட்டும் கொஞ்சம்கூட மாறவே மாட்டாங்க. ஆண்ட்ராய்ட் ஆப்கூட ஆறு நாளைக்கு ஒரு தடவை அப்டேட் ஆகுது. ஆனா நம்ம மக்கள் மட்டும் பல விஷயங்கள்ல அப்டேட் ஆகுறதே இல்லை. சோஷியல் மீடியா என்னதான் வளர்ந்து இருந்தாலும் அதுலேயும் ஆதிவாசி டைப்ல சுத்திக்கிட்டு இருக்காங்க. அதுல முக்கியமான ஒரு வெப்சைட்தான் `கோரா` வெப்சைட். மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு ஒவ்வொருத்தங்களும் எப்படி பதில் சொல்றாங்கங்கிறதுதான் இந்த வெப்சைட்டோட சிறப்பம்சமே. இதுல பல முக்கியமான கேள்விக்கு பதில் கண்டுபிடிச்சு பலன் அடைஞ்சவங்களும் இருக்காங்க, மொக்கையான கேள்வி கேட்டு பல்பு வாங்கினவங்களும் இருக்காங்க. அந்த மாதிரி கோராவில கேட்கப்பட்ட சில `கோரமான` கேள்விகள் அண்ட் பதில்களின் தொகுப்பு.

கோரா

* கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்லுறேன்னு கமல் எப்படிக் கேள்வி கேட்டு குழப்பினாரோ அதே மாதிரி கோராவிலேயும் பல பேர் குழப்பமான கேள்வி கேட்டு அவங்களையும் குழப்பிக்கிட்டு, நம்மையும் குழப்பிக்கிட்டு குழப்பமாவே (எத்தனை குழப்பம்!) வாழ்ந்து இருக்காங்க. அப்படி ஒருத்தர் கேட்ட கேள்விதான் இது. கடவுள் இருக்காரோ இல்லையோ அப்படி ஒருத்தர் இருந்தா அவர் ஆத்திகவாதியா இருப்பாரா இல்லை நாத்திகவாதியா இருப்பாரான்னு கேள்வி கேட்டு இருக்கிறார். அதாவது கடவுளுக்கு கடவுள் பக்தி இருக்கான்னு சிம்பிளா கேட்டு இருக்கார். நீங்களே சொல்லுங்க மக்களே... கடவுள் கோயிலுக்குப் போவாரா? அதுவும் ஸ்பெஷல் கவுன்ட்டர்ல காசு கொடுத்து போய் சாமி கும்பிடுவாரா? சொல்லுங்க மக்களே கடவுள் மதச் சண்டைலாம் போடுவாரா? கடவுளுக்கு ஏதும் கடவுள் இருக்கா? சொல்லுங்க சொல்லுங்க.

கோரா

* புத்துணர்வான சுவாசத்திற்கு, பளிச்சிடும் வெள்ளைப் பற்களுக்கு, நிலா போன்று மின்னிடும் பற்களுக்குன்னு வர பரபர பல்பொடி, பேஸ்ட் விளம்பரங்களைப் பார்த்து கன்ஃப்யூஷன் ஆன யாரோ ஒருத்தர் கேட்ட கேள்விதான் இது. ஆமா பாஸ் தினமும் பேஸ்ட், பிரஷ் யூஸ் பண்ணி கஷ்டப்பட்டு பல்லு விளக்குறதுக்குப் பதிலா வெள்ளை கலர் நெயில் பாலிஷ் போட்டுக்கிட்டு வாரத்துக்கு ஒருதடவை மட்டும் கிளீன் பண்ணா நல்லா இருக்கும்ங்கிற மாதிரி கேள்வி கேட்டு இருக்கிறார். இதில் மிராக்கிள் என்னன்னா அதை ஏற்கெனவே ஒருத்தர் ட்ரை பண்ணியும் பார்த்து இருக்கிறார். இனிமே உங்க நெயில் பாலிஷ்ல உப்பு இருக்கான்னுதான் காஜல் அகர்வால் அக்கா கேட்கப் போறாங்க போல.

* இப்ப இருக்கிற அப்பா, அம்மாக்கள் எல்லாம் சமுத்திரக்கனி மாதிரி இல்லாம அவங்களோட குழந்தையை எங்கே படிக்க வைக்கலாம்னு கருவுல இருக்கிறப்பவே கன்னாபின்னான்னு பிளான் பண்ணிடுறாங்க. அப்படி ஒருத்தர் கோராவில கேட்ட கொடூரமான கேள்விதான் இது. இப்ப ஐந்தாவது படிக்கிற என் குழந்தையை ஐஐடி-ல சேர்க்கணும்னா என்ன பண்ணும்?னு கேட்டு இருக்கிறார். அந்தக் கேள்விதான் மாஸ்னா அதுக்கு வந்து இருக்கிற பதில் எல்லாம் பக்கா மாஸ் பம்புளி மாஸ் பாஸ். அஞ்சாம் கிளாஸ் படிக்கிறப்பவே ஐஐடியா ப்ரோ. பூரா வெசம்...வெசம்...!

கோரா

* உலகத்துல பல பேர் அடிக்கடி லேப்டாப் யூஸ் பண்ணி பைத்தியம் ஆகி இருக்காங்க. அப்படி ஒருத்தர் அதிகமுறை சிஸ்டம் யூஸ் பண்ணி சின்னாபின்னம் ஆனதால கேட்ட கேள்விதான் இது. நான் யூஸ் பண்ற லேப்டாப் 2.3 பவுண்ட் இருக்கும். இதுல நான் ஃபைல்ஸ் டவுண்லோட் பண்ணா வெயிட் அதிகம் ஆகுமா இல்லை அப்படியேதான் இருக்குமா?ன்னு கேட்டு இருக்கிறார். ஆமா லேப்டாப் பெரிய சைஸ் ஃபைல்ஸ் வெச்சுருந்தா வெயிட் கூடுமா? அப்படி அதிகமானா அதைக் குறைக்க எவ்வளவு தூரம் ஓடணும்?னு கேட்காம கேட்டு இருக்கிறார். நீங்களே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க மக்கா.

* அதே மாதிரி கடவுள் பற்றி இன்னொருத்தர் கேட்ட ஒரு `அதிரி புதிரி ஐஐயோ அம்மம்மா` கேள்விதான் இது. போகாத கோயில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லைன்னு கேட்கிற மாதிரியே ஃபீல் பண்ணி கேட்டு இருக்கிறார் இந்தக் கேள்வியை. நானும் கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கேன்... கடவுள் எதுக்குமே பதில் சொல்ல மாட்றாரேன்னு அவருக்கு கோராவில ஐடி இருக்கா இல்லையான்னு ரொம்பவே சீரியஸா கேள்வி கேட்டு இருக்கிறார். அதுக்கு பலர் சீரியஸா பதிலும் சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறப்பதான் துயரம் துரோட்டை அடைக்குது மக்களே.

கோரா

* ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி, ஒரே நாளில் இன்ஜினீயர் ஆவது எப்படிங்கிற மாதிரி இப்பலாம் ஒரே நாளில் கோடிங் கற்றுக்கொள்வது எப்படின்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. கோராவில வைரல் ஆன முக்கியமான கேள்விகள்ல இதுவும் ஒண்ணு. அதுக்கான பதில் நார்த் போல் போங்க அங்கேதான் ஆறு மாசத்துக்கு ராத்திரி மட்டுமே இருக்கும். அதனால ஒரே நைட்ல ஈசியா ஆறு மாசத்துல கோடிங் கத்துக்கலாம் பாஸ். அது ஒரு நீண்ட இரவு ப்ரோ.

* இப்பலாம் கோராவில எல்லாத்துக்கும் பதில் போட்டு போட்டு அடிக்ட் ஆனவங்க பல பேர் இருக்காங்க. அப்படி அடிக்ட் ஆன ஒருத்தர் ஒரு கொடூரமான கேள்வி கேட்டு இருக்கிறார். நான் எல்லாரோட கேள்விக்கும் கோராவில பதில் சொல்றேன். ஆகவே எனக்கு கோரா கம்பெனியிலேயே வேலை கிடைக்குமான்னு கேட்டு இருக்கிறார். இவர் லாஜிக்படி ஃபேஸ்புக்ல களமாடுறவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா அங்கே வேலை கொடுத்தே ஆகணுமே. இப்படிப் போனா ட்விட்டர், யூ டியூப் முழுக்க நம்ம பசங்கதானே வேலை பார்ப்பாங்க. அடப் போங்க பாஸ் கனவு காணாம. லாக் ஆஃப்.

-லோ.சியாம் சுந்தர்

 


டிரெண்டிங் @ விகடன்