வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/03/2017)

கடைசி தொடர்பு:09:55 (29/03/2017)

குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோர்கள் கவனத்துக்கு 10 விஷயங்கள்

தத்தெடுக்க

 இந்தியச் சட்டப்படி திருமணமான, திருமணமாகாத ஆண் அல்லது பெண் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியும். தமிழ்நாட்டில் 16 உரிமம் பெற்ற தத்து நிறுவனங்கள் செயல்படுகின்றன.  தத்தெடுக்க விரும்பும் நபர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

* தனித்து வாழும் ஆண்கள், பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது. திருமணமாகாத பெண்கள் ஆண் அல்லது பெண் குழந்தைகளை தங்கள் விருப்பப்படி தத்தெடுக்கலாம்.

* இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் குழந்தையைத் தத்தெடுக்க இயலும். 

* தத்தெடுக்க விரும்புபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யம் போது கீழ்கண்ட சான்றிதழ்களை வழங்க வேண்டும்
1 வயதுச் சான்றிதழ்
2 இருப்பிடச் சான்றிதழ்
3 வருமானச் சான்றிதழ்
4 மருத்துவச் சான்றிதழ்
5 தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் புகைப்படம்
6 சேமிப்பு மற்றும் சொத்து விவரம் குறித்த ஆவணம்
7. பான்கார்டு

* மேற்காணும் ஆவணங்களை தாக்கல் செய்த பின்னர் சமூக பணியாளர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை அனுப்புவர். 

* மனநிலை சரியில்லாதவர்கள், குறைந்த சம்பளம் அல்லது குறைந்த பொருளாதார  நிலையில் இருப்பவர்கள், ஹெச்.ஐ.வி., புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், கொலை போன்ற  குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தத்தெடுக்க முடியாது. தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் தத்தெடுக்கும் நபருக்கும் குறைந்தபட்சம் 21 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.

தத்தெடுக்க

* தத்தெடுக்கும் சமயத்தில் மனுதாரர் குறித்து விவரம் அறிந்த 3 நபர்களின் கடிதம் மற்றும் இரு உறவினர்கள் அல்லது தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் நண்பர்களிடமிருந்து பொறுப்பு ஏற்கும் உறுதிமொழிக் கடிதத்தை வழங்க வேண்டும். தத்தெடுக்கத் தகுதியான நபரிடம் குழந்தையைத் தற்காலிகப் பராமரிப்பு என்ற அடிப்படையில் கொடுப்பார்கள். அப்படி ஒப்படைக்கப்பட்ட குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தவர்கள் எப்படி வளர்க்கிறார்கள் என்று 6 மாதங்கள் கண்காணிப்பார்கள். அதில் அந்த அமைப்புக்கு திருப்தி ஏற்பட்டால், உடனடியாக அந்த அமைப்பு நிரந்தரத் தத்தெடுப்புக்கு  சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

* குழந்தையைத் தத்துக் கொடுக்க விரும்புவதாக அந்த அமைப்பு ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். குழந்தை மற்றும் தத்தெடுக்கும் பெற்றோர் அல்லது நபர் குறித்த எல்லா தகவல்கள்  மற்றும் ஆவணங்களை அது அந்த மனுவோடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது, இந்தியக் குழந்தை நல கவுன்சில் அல்லது இந்திய சமூக நல கவுன்சில் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீஸை மேற்கோள்காட்டி கவுன்சில் இந்தத் தம்பதி அல்லது நபரின் தகவல்கள் மற்றும் ஆவணங்களை  சரிபார்க்கும். எல்லா விஷயங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பு கவுன்சில், நீதி மன்றத்துக்கு ஒரு நீண்ட அறிக்கையை அனுப்பும். அந்த நீண்ட அறிக்கை ஏற்புடையதாக இருப்பதாக நீதிமன்றம் கருதினால், தம்பதி அல்லது நபரை அந்தக் குழந்தையின் அதிகாரபூர்வ பெற்றோராக அறிவித்து அது ஆணை பிறப்பிக்கும்.

* அதையடுத்து, இந்தக் குழந்தை சட்டரீதியாக தத்துக் கொடுக்கப்பட்டது என்கிற ரீதியில் தத்துக் கொடுக்கும் அமைப்பு ஒரு தத்துப் பத்திரம் ஒன்றைத் தயார் செய்யும். இதைச் சார்பதிவாளர்  அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தையும், நீதிமன்ற ஆணையையும் நகராட்சி/மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்.  பிறப்புச் சான்றிதழைப் பெற்ற பின்பு தாசில்தார் அலுவலகத்தில் அதை சமர்ப்பித்து பெற்றோர் அல்லது நபர், தான் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பொறுத்து சாதிச் சான்றிதழ் பெறலாம்.

* இந்தியா முழுவதற்கும் குழந்தை தத்தெடுத்தல் குறித்த செயல்பாடுகள் அனைத்துமே தேசிய அளவில் `காரா' என்ற மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பெறும் அமைப்பின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.  அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் முதலில் `காரா' அமைப்பில் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்து அந்த நாட்டில் உள்ள தத்துக் கொடுக்கும் ஒருங்கிணைப்பு அமைப்பு மூலமாக காரா அமைப்பிடம்  தத்தெடுக்க முடியும்.

- ஆர்.ஜெயலெட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்