வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (31/03/2017)

கடைசி தொடர்பு:21:17 (31/03/2017)

கமிஷன் பிரச்னையால் மாணவியை பழி வாங்கினாரா தருமபுரி கலெக்டர்? - ஃபாலோ அப்!

பத்தாம் வகுப்பு மாணவி சங்கமப் பிரியா, ‘என்னைத் தேர்வு எழுதவிடாமல் டார்ச்சர் செய்கிறார்’ என்று தருமபுரி கலெக்டர் விவேகானந்தன் மீது சைல்டு லைனில் கொடுத்த புகார் குறித்து கடந்த 28-ம் தேதி விகடன் இணையதளத்தில்  ‘இவரெல்லாம் ஒரு கலெக்டரா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் ஃபாலோ அப் ஆக, துறை சார்ந்தவர்களிடம் விளக்கம் கேட்டோம். கலெக்டருக்கும் சிஇஓ-வுக்கும் நடந்த கமிஷன்  பிரச்னை,  நடக்கும் அதிகார யுத்தம் என ஒவ்வொரு தகவல்களாக வெளிவந்து அதிர்ச்சி கொடுக்கின்றன.

தருமபுரி பத்தாம் வகுப்பு மாணவிதர்மபுரி, இலக்கியம்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் சங்கமப் பிரியா,  தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் மகள்.  சங்கமப் பிரியாவுக்கு பிறந்ததிலிருந்து வலது கை நரம்பு பிரச்னை இருக்கிறது.  40% உடல் குறைபாடு உள்ளவர் என்று மருத்துவச் சான்றிதழ் சொல்கிறது. வலது கை பாதிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் இருந்து இடது கையால் எழுதி வருகிறார். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை இடது கையால் விரைவாக எழுத முடியாது என்பதால், உரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, தேர்வெழுத ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வாங்கித் தேர்வை எழுதிவந்தார். இந்நிலையில்தான், 24-ம் தேதி சைல்டு லைனில், 'கலெக்டர் விவேகானந்தன் என்னைத் தேர்வு எழுதவிடாமல் டார்ச்சர் செய்கிறார்' என்று பிரியா புகார் கொடுத்தார். ஒரு பள்ளி மாணவிக்கு கலெக்டர் ஏன் டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பிரியா சொன்ன பதில் இதுதான். 


“என் அம்மா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருக்கிறார். என் அம்மாவைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக கலெக்டர் என்னைத் தேர்வு எழுதவிடாமல் டார்ச்சர் செய்கிறார்.  நான்  முறைப்படி அனுமதி வாங்கித்தான் தேர்வு எழுதினேன். ஆனாலும்,  நான் எப்படி எழுதுகிறேன் என்று அடிக்கடி எக்ஸாம் ஹாலுக்குள் வந்து போட்டோ  எடுப்பது, அனுமதிக் கடிதத்தை கேட்பது என்று அதிகாரிகளை விட்டு டார்ச்சர் செய்தார் கலெக்டர். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தேர்வை எழுதினேன். உச்சகட்டமாக, ஒரு தேர்வு மிச்சமிருக்கும் நிலையில், 'உங்கள் குறைபாட்டின் மீது சந்தேகம் இருக்கிறது. 24-ம் தேதி  இரவு 8 மணிக்கு நீங்கள் மருத்துவப் பரிசோதனைக்கு வரவேண்டும்' என்று  தர்மபுரி மருத்துவக்கல்லூரி டீன் சாமிநாதனிடம் இருந்து என் பெயருக்கு சம்மன் வந்தது. அதைப் பார்த்ததும் எனக்குத் தாங்க முடியாத மன உளைச்சல் ஏற்பட்டது.   அதனால்தான்,  'சைல்டு லைனில்’ புகார் கொடுத்தேன். ஒரு கலெக்டர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்  தர்மபுரி கலெக்டர்தான்'' என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.


தருமபுரி கலெக்டர்
இந்தப் பிரச்னையில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதைச் சொல்வதாகவே இருந்தது கலெக்டரின் பதில். இது தொடர்பாக பேசிய  கலெக்டர், “அந்த மாணவி சொல்லும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. அவர் சிஇஓ உடைய பெண் என்பதே இப்போதுதான் தெரியும். தேர்வு மையங்களுக்கு பறக்கும் படையாகச் சென்ற ஆர்டிஓ  ராமமூர்த்தி கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான், தேர்வுத்  துறை இயக்குநருக்கு ரிப்போர்ட் அனுப்பினோமே தவிர, மாவட்ட நிர்வாகம் சார்பாக எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. மருத்துவத் துறையிலிருந்து சம்மன் அனுப்பியதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதை டீனிடம்தான் கேட்க வேண்டும்'' என்று ஒதுங்கப் பார்த்தார்.  டீன் சாமிநாதனோ, “நான் கலெக்டர் உத்தரவின் பேரில்தான் சம்மன் அனுப்பினேன்'' என்று அந்தர் பல்டி அடித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சங்கமப் பிரியா மீது சந்தேகம் இருப்பதாக ரிப்போர்ட் கொடுத்த ஆர்டிஓ ராமமூர்த்தி சொல்லும் விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது. “நான் தேர்வறைக்குச் சென்றபோது சங்கமப் பிரியா இடது கையில்  வேகமாக  தேர்வெழுதிக் கொண்டிருந்தார். வலது கையில் பிரச்னை இருப்பதால் வேகமாக எழுத முடியாது என்பதற்காகத்தானே ஒரு மணி நேர அவகாசம் வாங்கியிருக்கிறார்? அதை விடுத்து இடது கையில் எழுதினால் என்ன நியாயம்? நாளை ஏதாவது பிரச்னை என்றால் அதற்கு நான்தானே பொறுப்பு? அதனால்தான் நான் கலெக்டருக்கு ரிப்போர்ட் கொடுத்தேன்'' என்றவரிடம், ''சார்...  இடதுகையில் எழுதுவதற்குதான் அனுமதி வாங்கியிருக்கிறார். அது தெரியாமலா ரிப்போர்ட் கொடுத்தீர்கள்?'' என்றோம். “அனுமதிக் கடிதத்தில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நான் பார்த்ததை ரிப்போர்ட்டாக கொடுத்தேன்'' என்று ஏதோ படிக்காதவர் போல் பதில் சொன்னார்.  ஆர்டிஓ, தான் பார்த்ததை ரிப்போர்ட்டாக கொடுத்தார்.  ஒரு கலெக்டர், என்ன, ஏது என்று விசாரிக்காமலா தேர்வுத் துறை இயக்குநருக்கு ரிப்போர்ட் கொடுத்தார் என்ற நம் கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை.

இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் பேசினோம். “தலைமை ஆசிரியரின் பரிந்துரை, மருத்துவச் சான்றிதழ் எனப் பலவற்றை பரிசோதித்துதான் நாங்கள் ஒரு மணிநேரம் அனுமதி கொடுத்திருக்கிறோம். சிஇஓ மகள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியவே தெரியாது. அந்த மாணவியின் குறைபாட்டில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு முறையாக மருத்துவப் பரிசோதனை செய்து, 'நீங்கள் அனுமதி வழங்கியது தவறு' என்று ஆதாரபூர்வமாக எங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு  எந்தவித மருத்துவச் சான்றிதழும் இல்லாமல், நேரடியாக எங்களுக்கு கலெக்டர் ரிப்போர்ட் கொடுத்ததே தவறு. தேர்வு நேரத்தில் ஒரு மாணவியைத் தொந்தரவு செய்வது என்பது நிச்சயமாக ஏற்க முடியாத செயல். மற்றபடி அவர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது'' என்றார்.


பிரின்ஸ் கஜேந்திரபாபு
பொதுப் பள்ளிகளுக்கான மாநிலமேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “எதன் அடிப்படையில் கலெக்டர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்பதே  தெரியவில்லை. சிஇஓ-வின் மகள் என்ற அதிகாரத்தின் மூலம் அந்த மாணவிக்கு ஏதேனும் முறைகேடாக  சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால் கூட,  அந்தக் குழந்தையை தேர்வு முடிவதற்குள்ளாக செக்-அப்பிற்காக  மெடிக்கல் போர்டுக்கு அழைத்தது எந்த வகையிலும் நியாயம் இல்லை. சந்தேகம் இருப்பின் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு செக்-அப் செய்து, அந்த மாணவிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டிருந்தால் தேர்வு முடிவை நிறுத்தி வைக்கவும், விடைத்தாள்களை திருத்தாமல் நிறுத்தி வைக்கவும் கல்வித்துறையில் எத்தனையோ நடைமுறைகள் இருக்கிறது.

அப்படியிருக்க, ஏன் இவ்வளவு அவரசம்? ஒரு கலெக்டர் இப்படிச் செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதே  அல்ல.  ஸ்குவாட் சென்ற ஆர்டிஓ ரிப்போர்ட் கொடுத்தார் என்கிறார்கள். அந்த ஆர்டிஓ  சம்பந்தப்பட்ட மாணவியை எத்தனை மணிநேரம் அருகில் இருந்து கண்காணித்தார்? வெறும் ஐந்து நிமிடத்தில் அவர் அந்தக் குழந்தையின் கையில் குறைபாடு இல்லை என்பதை எப்படி அறிந்துகொண்டார்? அந்த மாணவியின் மீது மிகப்பெரிய உளவியல் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தால் அந்தக் குழந்தை உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் அவமானத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கும். பதற்றத்தில் படித்தவற்றை பரீட்சையில் எழுதுவதுகூட சிக்கலாகியிருக்கும். கலெக்டர் இதற்கு முறையான விளக்கம் கொடுத்தாக வேண்டும்'' என்றார்.

சிஇஓ-வுக்கும் கலெக்டருக்கும் அப்படி என்னதான் பிரச்னை?  விபரமறிந்தவர்களிடம் பேசினோம். ''சிஇஓ மகேஸ்வரியும் சரி, கலெக்டரும் சரி...  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தர்மபுரியிலேயே பணியாற்றுகிறார்கள். இருவருக்கும் மேலிட செல்வாக்கு இருக்கிறது. மகேஸ்வரி கலெக்டரை மதிப்பதே கிடையாது. கல்வி சார்ந்து கலெக்டர் போடும் மீட்டிங்கில் பெயருக்குக்கூட மகேஸ்வரி கலந்து கொள்வது கிடையாது.  கல்வித்துறையில் தான் வைத்ததுதான் சட்டம் என்பது போல் செயல்படுகிறார். அதுமட்டுமல்லாது சமச்சீர் நிதியை செலவழிப்பதில் இருவருக்கும் ஏகப்பட்ட மோதல். 15 லட்சம் ரூபாய்  சிஇஓ-விடம் கலெக்டர் கேட்டதாகவும் சொல்கிறார்கள். கலெக்டர்  சொல்லும் திட்டங்களுக்கு சிஇஓ ஒப்புதல் அளிப்பதில்லை. அதனால்தான்  சிஇஓவின் மகளுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இருவரின் செயல்பாடும் சரி இல்லை'' என்றார்கள்.

அதிகார மோதல்களின் அவலம். அரசு கவனிக்க வேண்டும்.

- எம்.புண்ணியமூர்த்தி   


டிரெண்டிங் @ விகடன்