வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/04/2017)

கடைசி தொடர்பு:11:04 (05/04/2017)

''இட்லி, மிளகாய்ச் சட்னி ஊட்டிவிட்ட கை... காசுக்காவா நீளப்போகுது!?'' - தனுஷுக்காக உருகும் மதுரை தம்பதி

'காணாமல் போன எங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ்... இப்படிப்பட்ட கோரிக்கையோடு சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற படியேறிய மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியை இச்சமூகம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் தனுஷ்தான் எங்கள் மகன் என்ற அவரை பணம் பறிக்கும் கும்பல் என்று எண்ணத் துவங்கினார்கள். அதன்பிறகு நீதிமன்றத்தில் நடந்தவை ஊர் அறியும். அந்த பெற்றோர் என்ன செய்கிறார்கள்... அவர்களின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பதை அறிய அவர்களுடைய வீட்டுக்குப் போனோம்.

தனுஷ்'' எம் பேரு மீனாட்சி தம்பி. மீனாள்னு கூப்பிடுவாங்க. எங்களுக்கு தனபாக்கியம், கலைச்செல்வன்னு ரெண்டு புள்ளைங்க. உங்க கண்ணுக்கு தனுஷா தெரியுறவர்தான் என் புள்ளை கலைச்செல்வன். மதுர பெரியாஸ்பத்திரியிலதான் கலைச்செல்வன் பொறந்தான் . பிறகு எங்க அப்பாவீட்டில் வைத்து வளர்த்தேன்


எங்க அப்பா வீட்டுல தங்கியிருந்துதான் புள்ளைங்களைப் படிக்கவைச்சேன். என் அப்பா மேலூர் பஸ் ஸ்டாண்ட் எதிர்ல ஹோட்டல் வைச்சு நடத்திட்டு இருந்தார். எனக்கு நல்லா சமைக்க வரும். என் ரெண்டு புள்ளைங்களுக்கும் விதவிதமா சமைச்சு போடுவேன்.
என் வீட்டுக்காரர் பிரைவேட் கம்பெனியில 50 ரூபா சம்பளத்துக்கு வேலை பார்த்தார். நான் கெமிஸ்ட்ரி படிச்சிருந்தேன். நல்லா படிச்சிருந்தேன்ங்கிறதுனால எம் புள்ளைங்களுக்கு நான்தான் பாடம் சொல்லிக்கொடுப்பேன். ஒருதடவை என் பையன் கலைச்செல்வனுக்கு உடம்பு சரியில்ல... அதனால அவனுக்கு வசம்பு கொடுத்தேன். கொஞ்சம் அதிகமா கொடுத்திட்டேனு நினைக்கிறேன். புள்ள மயங்கிட்டான். பதறிப்போய்ட்டேன். அதுக்குப்பிறகு நார்மலாகிட்டான்.

ஆனா ஐஞ்சு வயசு வரைக்கும் கலைச்செல்வனுக்கு பேச்சுவராம இருந்துச்சு. மேலூர் கவர்மென்ட் ஸ்கூல்ல பத்தாவது வரைக்கும் படிச்சவன், பதினொன்னாவதை திருப்பத்தூர்ல படிச்சான். பத்துநாள்தான் படிச்சான். அப்புறம் அங்கிருந்து எங்க போனானு தெரியல். நாங்க தேடாத எடமே இல்ல. மனசும் உடம்பும் வலிக்கவலிக்கத் தேடினோம்.

எங்க குடும்ப சந்தோஷமே ரெண்டாச்சு. சரியா சாப்பிடாம தூங்காம, அலைஞ்சு மனசு ரெண்டாச்சு. இனி அவன் கிடைக்க மாட்டானு மனச கல்லாக்கிட்டோம். அவன் இல்லாத ஒவ்வொரு நாளும் எழவு வீடுமாதிரிதான் எங்களுக்கு ஆச்சு. பொங்கல், தீபாவளி எல்லாம் மறந்தோம்.

ஒரு தடவ பொல்லாதவன் பட புரோமோஷனுக்காக டிவியில பேட்டி கொடுத்த தனுஷ் பார்த்த நாங்க 'ஏய் நம்ம கலைச்செல்வன் மாதிரியே இருக்கான்லனு பேசிக்கிட்டோம்' அந்த பேட்டியில, ''நான் மதுரைக்காரன். பிளஸ் ஒன் பாதி வரைக்கும்தான் படிச்சிருக்கேனு சொன்னார்.

அதுவரைக்கும் சந்தேகமா இருந்த எங்களுக்கு அவரோட நடை, உடை, பாவனை எல்லாம் எங்க மகன்றதை உறுதி பண்ணுச்சு. தனுஷோட நெத்தியில தழும்பு உண்டு. ஆனா நாங்க கோர்ட்டுக்கு போனப்ப அதை அழிச்சுட்டார். அதே மாதிரி சின்ன வயசுல அவருக்கு உச்சந்தலையில ஒரு தழும்பு உண்டு. அதை நாங்க ஸுட்டிங் ஸ்பாட்ல பார்த்துட்டோம். அவர்கிட்ட பலமுறை பேச ட்ரை பண்ணினோம். ஆனா எங்களை தவிர்த்துட்டார்.

எங்க சொந்தக்காரங்க பலபேர்கிட்ட கலைச்செல்வன்தான் தனுஷ்னு சொன்னோம். ஆனா எல்லாரும் நாங்க பொய் சொல்றோம்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் வழக்குப் போட்டோம். இப்ப வரைக்கு அவர் எங்ககிட்ட வந்து பேசலை. நான் தான் உங்க மகன் இல்லியே... ஏன் என்னை வந்து தொல்லை பண்றீங்கனுகூட ஒரு வார்த்தை கேட்கலை.

ஏன்னா முடியாது. மனசாட்சினு ஒண்ணு இருக்குது இல்லியா? நாங்க அவரோட அப்பா அம்மா இல்லைனு ஒரு பேட்டி கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம். பெத்த வயிறு அத்தனை கஷ்டத்தையும் சுமந்துட்டு இருக்கேன்.


தனுஷ்


அவருக்குப் பிடிச்ச இட்லியும், மிளகாய்ச்சட்னியும் செய்ஞ்சு கொடுத்த கையா காசுக்காக கை நீட்ட போகுது? கலைச்செல்வனுக்கு சின்ன வயசுலிருந்தே டான்ஸ், பாட்டுனா அவளோ இஷ்டம். அவன் எங்ககிட்ட திரும்ப வந்துட்டா கோயிலுக்கு கெடா வெட்டி கரும்பு தொட்டி கட்டுறதா வேண்டுதல் வைச்சிருக்கோம். தனுஷோட பணம், பங்களா எதுவும் எங்களுக்குத் தேவையில்லை தம்பி. அவர் கலைச்செல்வனா திரும்பி வந்தாலே போதும்" என்று கையெடுத்து கும்பிடுகிறார் மீனாட்சி.
 

 சே.சின்னதுரை
 


டிரெண்டிங் @ விகடன்