வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (11/04/2017)

கடைசி தொடர்பு:18:21 (11/04/2017)

'நண்பன்' பட பாணியில் ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் ஏப்ரல் 7-ம் தேதி நாக்பூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது வாட்ஸ்அப்பின் உதவியுடன் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார். இந்தச் சம்பவம் உலக சுகாதார தினத்தன்று நடைபெற்றுள்ளது. 

விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் ஏப்ரல் 7-ம் தேதி அகமதாபாத்-பூரி விரைவு ரயில் வண்டியில் பயணம் செய்துள்ளார். அவர் நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு  படித்து வருகிறார். அதே ரயிலில் 24 வயது மதிக்கத்தக்க சித்ரலேகா என்ற பெண் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் ரயிலை நிறுத்துவதற்கான செயினை இழுத்துள்ளனர். உடனே அங்கு வந்த டி.டி.ஆர். ரயிலில் யாரேனும் மருத்துவர் உள்ளனரா என்று தேடியுள்ளார். அப்போது மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் யாரும் அந்த ரயிலில் இல்லாததால் விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் பிரசவம் பார்க்க முன்வந்துள்ளார்.

 

பின்னர் அவர், அந்த பெட்டியில் இருந்த ஆண்களை வெளியேற சொல்லிவிட்டு சில பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டும் வாட்ஸ்அப்பின் உதவியுடனும் பிரசவம் பார்க்கத் தொடங்கினார். விபினின் சாமர்த்தியமான முயற்சியால் அந்தப் பெண் அழகான குழந்தையை ரயிலிலேயே பெற்றெடுத்தார். இந்த நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து தெரிவித்த விபின், 'குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதிகள் வெளியே வர சிரமப்பட்டது. உடனே நான் அதனை போட்டோ எடுத்து மருத்துவர்கள் உள்ள வாட்ஸ்அப் குருப்பில் பதிவிட்டேன். அதனைப் பார்த்து ஒரு மூத்த மருத்துவர் எனக்கு அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையின் படி வெற்றிகரமாக பிரசவம் செய்தேன்' என்று தெரிவித்துள்ளார். நண்பன் படத்தின் இறுதிக் காட்சியில் விஜய், இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக பிரசவம் பார்த்தது போல விபினும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.