Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மல்லையா கைதுக்கான 5 காரணங்களும் ஜாமீன் பின்னணியும்!

மல்லையா

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் 35 நாட்களையும் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் அவர்களுடைய போராட்டங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்திய வங்கிகளிடம் ரூ. 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கி விட்டு லண்டனுக்கு ஓடிய பீர் நிறுவன முதலாளி கிங்ஃபிஷர் மல்லையாவை லண்டனில் கைது செய்திருக்கிறார்கள். வங்கிகள் எவ்வளவோ கதறியும் அரசு எடுத்த நடவடிக்கைகளில் சரியாக ஒரு வருடம் கழித்து இப்போதுதான் மல்லையா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் கைதாகக் காரணமாக இருந்த ஐந்து விஷயங்களை இங்கே பார்ப்போம்.

ரூ. 9000 கோடி கடன்!  

28 வயதில் யுனைட்டெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் தலைவராக ஆன விஜய் மல்லையா ஆடிய ஊதாரி ஆட்டத்தின் விளைவு தான் இந்த ரூ. 9000 கோடி கடன். இந்திய வங்கிகள் பலவற்றில் அவர் வாங்கிய மொத்த கடன் இது. உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமாக விஜய் மல்லையாவின் நிறுவனம் இருந்ததை வைத்தே வங்கிகளிடம் எளிதில் கடன் வாங்கினார். பெரிய நிறுவனங்களுக்குக் கடன் தரும் வங்கிகள் திருப்பி கேட்கவே பயந்தன. இதனை சாதகமாக்கிக்கொண்டு கடனை திருப்பி செலுத்தாமல் கண்டபடி ஆடினார்.

மல்லையாவை கவிழ்த்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்!

மல்லையாவின் பிசினஸ் நன்றாக போய்க்கொண்டிருக்கவே வங்கிகளும் பொறுத்திருந்தன. ஆனால் மல்லையா ஏர்லைன்ஸ் பிசினஸில் இறங்கியதும் தான் அவருடைய மொத்த வருமானமும்  கரைய ஆரம்பித்தன. தனது ஏர்லைன்ஸில் ஆடம்பரத்தைக் கொட்டி கொட்டி கொடுத்தார். மதுவும், அழகிய சிப்பந்திகளும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் இருந்தாலும், விலை அதிகம் காரணமாக நாளடைவில் யாரும் அதை விரும்பவில்லை. பெரும் நஷ்டத்துக்குள்ளானது. 2012ல் மொத்தமும் திவாலானது.

எப்போதும் கொண்டாட்டம்!

தன்னுடைய நிறுவனம் நஷ்டமடைந்துகொண்டிருப்பதையோ, கடன் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பற்றியோ கூட கவலைப்படாமல் எப்போதுமே கொண்டாட்டத்திலேயே இருந்தார். அவருடைய நிறுவன ஊழியர்கள் சம்பளம் கிடைக்காததால் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, காலாண்டர் பெண்களுடன் அவர் அடித்த கூத்துகளெல்லாம் உச்சகட்டம்.

நீதிமன்ற அவமதிப்பு!

கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாதவர் என்று முத்திரை குத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் நீதிமன்றத்தி உத்தரவுகளுக்கு அடிபணியாமல் எப்படி யாருடைய உதவியோடு தப்பி ஓடினாரோ தெரியவில்லை. நீதிமன்றம் எத்தனை முறை அழைத்துப் பார்த்தும் லண்டனுக்கு ஓடிப்போனவர் வரவில்லை. இந்திய அரசும் இங்கிலாந்து அரசிடம் மல்லையாவை அனுப்பி வைக்குமாறு கேட்டது. அதுவும் நடந்தபாடில்லை.

விவசாயிகளின் போராட்டம்!

மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்ட வங்கிகளும், அதற்கு உத்தரவு போட்ட நீதிமன்றமும் அந்த விஷயத்தையே மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், இந்தியாவில் விவசாயிகள் ஆங்காங்கே வறட்சியாலும் கடன் தொல்லையாலும் இறந்து போனார்கள். எப்போதும் நடக்கும் வழக்கமான நிகழ்வுதானே என்று எல்லோரும் இருந்துகொண்டிருக்க, பிரச்னை மிகத் தீவிரமானது. வறட்சி என்பது முன்னெப்போதையும்விட அதிகமாக இருந்தது. விவசாயிகளின் இறப்புகளும் தான். அதற்காக எந்த நடவடிக்கையும் அரசுகளை எதிர்த்து, நிவாரணம் கேட்டு போராட ஆரம்பித்த விவசாயிகள் கடைசியில் கோவணம் கூட இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இன்னமும் போராட்டம் ஓயவில்லை. அரசு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. பிரதமர் மோடி எல்லா இடங்களிலும் விவசாயிகளைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்கும் போராட்டக் களத்திலுள்ள விவசாயிகளைப் பார்க்கவில்லை.

ஜாமீன் பின்னணி!

இன்று மல்லையா லண்டனில் கைது என்பது பிரேக்கிங் செய்தியாக வருகிறது. இத்தனை நாட்களும் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தியாக இருந்த விவசாயிகள் போராட்டம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மல்லையாவை கைது செய்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மல்லையா கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் ட்விட்டரில் "இது வழக்கமான இந்திய மீடியாக்களின் ஹைப்பிங் வேலை. இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான விசாரணை இன்று எதிர்பார்க்கப்பட்டதுபோல் தொடங்கியிருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டிருக்கிறது. மல்லையா கைது என்று செய்தி வெளியாகிய உடனேயே ஜாமீனும் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருப்பதன் பின்னணி என்ன என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ‘மல்லையா வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.ஆனால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒருவரை ஒப்படைக்கும் நிகழ்வு அவ்வளவு விரைவாக நடக்கக் கூடியதல்ல. இப்போதுதான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்குள்ளாகவே ஜாமீனில் விடுவிக்கவும்பட்டுவிட்டார். எனவே மல்லையா இந்தியா வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று வழக்கறிஞர்கள் தரப்பினர் சொல்கின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close