வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (18/04/2017)

கடைசி தொடர்பு:19:58 (18/04/2017)

ஜல்லிக்கட்டு முதல் மணல் கொள்ளை வரை... எதிர்த்துப் போராடிய சமூகப் போராளி நர்மதா கைது!

நர்மதா

'ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் போன்ற விவகாரங்களுக்காகப் போராடும் கல்லூரி மாணவர், மாணவிகள், தமிழக ஆறுகளில் மணலைச் சுரண்டி, நீர் ஆதாரத்தைக் கெடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்' என்ற கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், கரூரில் முறைகேடாக நடக்கும் மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராடுவதற்காக, சென்னையைச் சேர்ந்த நர்மதா நந்தகுமார், 'தனி ஒருவராக' போராட வந்தார். அவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 

நர்மதா கைது

கரூர் மாவட்டம், வாரப்பாளையத்தில் காவிரியில் முறைகேடாக மணல் குவாரி நடத்துவதை கண்டித்து அவர் போராட்டம் நடத்த வந்தார். தனியாளாக வந்த அவர், அங்கே மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரிகளை தடுக்க முயன்றார். அங்குள்ளவர்கள், 'ஒழுங்கா போயிடுங்க. இல்லைன்னா, லாரியை மேலே ஏத்திபடுவோம்' என்று மிரட்டியுள்ளார்கள். 

 

அவர்களின் மிரட்டலுக்கு கொஞ்சமும் அசராத நர்மதா, லாரிகளை மறித்தபடி நின்றார். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தகவல் அறிந்து அங்கே வந்த போலீஸார், தங்கள் பங்குக்கு நர்மதாவை எச்சரித்து விரட்ட முயன்றனர். அதற்கும் அசராமல் தொடர்ந்து போராடிய நர்மதாவை போலீஸார் அவரைக் கைது செய்ய முற்பட்டனர். 

நர்மதா கைது

''முறைகேடாக செயல்படும் இந்த மணல் குவாரிக்கு சீல் வைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி இங்கே அள்ளிய மணல் கொள்ளை மூலம் சம்பாதித்த இருநூறு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்யணும். இல்லைன்னா, இங்கே இருக்கும் அணையில் குதிச்சு உயிரை விட்டுடுவேன்'' என்று நர்மதா ஆவேசம் காட்ட, மிரண்டுபோன போலீஸார் அவரைக் கைது செய்து, ரிமாண்ட் செய்தனர். 

இருந்தாலும், "என்னைக் கைது செய்தால் என்ன? எனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எனது போராட்டம் தொடரும். வெளியில் வந்ததும் மறுபடியும் எனது போராட்டத்தை ஆரம்பிப்பேன்" என்று எச்சரிக்கை செய்துள்ளார் நர்மதா. 

 

இது பற்றி பேசிய அந்தப் பகுதி மக்கள், "தமிழகத்திலேயே அதிகமாக மணல் கொள்ளை நடப்பது கரூர் மாவட்டத்தில்தான். ஏற்கனவே, தவுட்டுப்பாளையம், மாயனூர், குப்புச்சிப்பாளையம், வாங்கல் என்று ஏழு இடங்களில் முறைகேடாக மணல் குவாரி நடத்தி மணலை அள்ளிவிட்டார்கள். விதிமுறைகளை மீறி மணலைக் கொள்ளையடித்து 3,000 கோடி வரை கொள்ளையடித்துவிட்டார்கள். அந்தக் கொள்ளையில் ஓ.பி.எஸ், சசிகலா குடும்பம் என்று பலருக்கும் தொடர்பு இருக்கு. அந்த மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். வைகோ உண்ணாவிரதம் இருந்தார். நல்லக்கண்ணு வந்து, 'ஒரு லட்சம் மக்களைத் திரட்டி மணல் குவாரிகள் நடத்துபவர்களுக்கு எதிராக கரூரில் மாபெரும் போராட்டம் நடத்துவோம்' என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால், மணல் கொள்ளையர்கள் எதற்கும் அசரலை. இந்த நிலையில்தான், நிர்மலா வந்திருக்காங்க. அவங்க மறுபடியும் போராட வரும்போது, புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடும் மக்களை போல நாங்களும் சேர்ந்து போராடுவோம். மணலைச் சுரண்டி, ஆற்றை எலும்புக்கூடாக்குபவர்களை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று ஆவேசமாக சூளுரைத்துள்ளார்கள். 

 

ஒவ்வொரு போராட்டங்களிலும் அதை முன்னெடுத்துச் செல்பவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். தன் குடும்பம், தன் குழந்தைகள் என்றில்லாமல் சமூகத்துக்காக போராடும் பெண்கள் இருக்கும்வரை அநீதிகள் தடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

- துரை.வேம்பையன்,

படங்கள்: நா.ராஜமுருகன்.


டிரெண்டிங் @ விகடன்