தடு...செல்...சொல்..! குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய 3 மந்திரம்! #NivinPauly | No...Go...Tell...! teach your kids these 3 words

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (26/04/2017)

கடைசி தொடர்பு:16:03 (26/04/2017)

தடு...செல்...சொல்..! குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய 3 மந்திரம்! #NivinPauly

நிவின் பாலி

வ்வொரு நாளும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும்  பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் போது மனம் பதறுகிறது. குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலில் கொடுமைகள் அனைத்தும் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். குழந்தைகளுக்கு No...Go...Tell...என்கிற மூன்று வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்து குட் டச்... பேட் டச் பற்றி விளக்கியிருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி.

‘போதினி கொச்சி’ என்ற அமைப்பு ’நோ...கோ...டெல்’ (No.Go.Tell) என்கிற குறும்படத்தை தயாரித்திருக்கிறது. இதனை இயக்கியிருக்கிறார் ஜூட் ஆன்டனி  ஜோசப் (Jude Anthany Joseph). இதில் முக்கிய அம்சமே, நடிகர் நிவின் பாலி தோன்றுவதுதான். டீச்சிங் தொனியில் வெளிப்படாமல் இருப்பதுதான் இந்த குறும்படத்துக்கான வெற்றி அடங்கியிருக்கிறது. அதில் நிவின் பாலி குழந்தைகளுக்கு  ‘குட்  டச், பேட் டச்’ பற்றியும், இந்த வார்த்தைகள் ஆபத்தான நேரத்தில் அவர்களை எப்படி காப்பாற்றிக்கொள்ள உதவும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறார். 


அந்த குறும்படத்தில்..
ஓர் அழகான பூங்காவில் குழந்தைகள்  விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, யாரோ ஒருவர் அந்த பூங்காவுக்குள் கேட்டை தள்ளிக்கொண்டு நுழைகிறார். அவரைப் பார்த்ததும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி வெட்கம் என கலவையான ரசனைகள் தாண்டவமாடுகிறது.

அனைத்து குழந்தைகளும் அந்த நபரை நோக்கி ஓடுகிறார்கள்.  அவர்தாம் மலையாள நடிகர் நிவின் பாலி! குழந்தைகளுடன் உரையாட ஆரம்பிக்கிறார் நிவின். மலையாளத்தில், ஆபத்து என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? என்று குழந்தைகளிடம் கேட்கிறார்... அதற்கான  மலையாள வார்த்தையைக்கூறி பதிலளிக்கின்றனர் குழந்தைகள். பிறகு, எவையெல்லாம்  ஆபத்து என்று நினைக்கிறீர்கள் என்று  கேட்கிறார் நிவின் பாலி. “சாலை விபத்துகள்”, “விமானத்தில்  போகும்போது..”,   என பலவிதமான பதில்கள் வருகின்றன குழந்தைகளிடமிருந்து!

வெள்ளம்  போன்ற ஆபத்து வரும்போது என்ன செய்யவேண்டும் என்று நிவின்  கேட்க, “லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும்” என்ற குழந்தைகள்  கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, நிவின் பாலி, “ ஒவ்வொரு ஆபத்தையும் தடுப்பதற்கு, நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கிறோம்..அதைப்போல, நம் உடல்பகுதிகளை மற்றவர்களிடம் இருந்து கவசம் போல பாதுகாக்க வேண்டும். மற்றவர்கள்  தொடுவதற்கு  நாம்  அனுமதிக்கக்கூடாது. அவை என்னென்ன பகுதிகள் என குழந்தைகளிடம் நிவின் கேட்க..  ‘கால்களுக்கு இடையே’, ‘மார்பு’, பின்பகுதி ‘ என  குழந்தைகள்  பதில் அளிக்கின்றனர். 

இந்த பதில்களை கேட்டு,  குழந்தைகளுக்கு ஒரு வரைப்படம் மூலம்,  உதடுகள்,  மார்பு, பிறப்புறுப்பு, பின்புறம் என உடலில் எந்தெந்த  பகுதிகளில் மற்றவர்கள் தொடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது என கற்றுக்கொடுக்கிறார்.  ’குட் டச்’ என்பது  பெற்றோர்கள் நம்மை குளிப்பாட்டும்போதோ அல்லது அணைக்கும்போதோ நாம் செளகரியமாக உணர்வது என்று குழந்தைகளிடம் விவரிக்கிறார் நிவின்! அது மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கு முக்கியமான மூன்று வார்த்தைகளை கற்றுக்கொடுக்கிறார்.

யாராவது குழந்தைகளிடம் அவர்களுடைய உடலின் முக்கியப் பகுதிகளைக் காட்ட சொன்னாலோ அல்லது அனுமதியின்றி  தொடமுயன்றாலும்.. 'No'  என்று கத்தவேண்டும்.  பிறகு, அவர்களிடம் இருந்து ஓடிச் சென்று, பெற்றோர்களிடமோ அல்லது அவர்களின் நம்பிக்கைக்குரியவரிடமோ  செல்லவேண்டும். அதுதான்  ‘Go'!  

என்ன நடந்தது என தனக்குளே  வைத்துக்கொள்ளாமல் பெற்றோர்களிடம்  கூறவேண்டும் என்பதற்கான குறியீடு.. ‘Tell'! 'No.Go.Tell' (தடு.செல்.சொல்.)  என்ற மூன்று மந்திரங்களையும், குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கும் அவசியத்தை, மிக  எளிமையாகவும் நேர்த்தியாகவும்  சொல்லிக்கிறது இந்த குறும்படம். 

கேரளா அரசின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக  எடுக்கப்பட்ட இந்த குறும்படத்திற்கு, நல்ல வரவேற்பும்  பாராட்டும் கிடைத்துள்ளது. மேலும், நடிகர் நிவின் பாலி தனது முகநூல் பக்கத்திலும், குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும், இதில் தானும் பங்கேற்று நடித்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அந்த குறும்படத்தை பகிர்ந்துக்கொண்டார்.


நிவின் பாலி நடித்த இந்த குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு குறும்படத்தைப் பார்க்க.. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்