வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (26/04/2017)

கடைசி தொடர்பு:21:37 (26/04/2017)

குழந்தைகளின் உடல் வளர்ச்சி ரகசிய தொடுதல் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா?

குழந்தைகளின்

குழந்தைகளின்  மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை நினைத்தாலே மனதில் ஒரு எரிமலை வெடித்து குமுறுகிறது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என மனம் பரபரக்கிறது. ஆனால் இதை எப்படிச் செய்வது என்ற குழப்பம் பெற்றோருக்கு. பாலியல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை குழந்தைகளிடம் எந்த வயதில் எப்படி ஆரம்பிப்பது என்பதே குழப்பத்துக்கு காரணம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ரகசிய தொடுதல் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா?

* குழந்தைகளுக்கு அவர்கள் உடல் உறுப்புகளின் பெயர்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் பிரைவேட் பார்ட் எனப்படும் அந்தரங்க உறுப்புகளின் பெயரை நாம் சொல்வதில்லை. ஒரு வேளை அந்த உறுப்பில் பாதிப்பை குழந்தைகள் சந்திக்கும்போது அதை தெளிவாகவும், முழுமையாகவும் சொல்லத் தெரியாமல் போகலாம். பிரச்னை முழுமையாக வெளியில் தெரியாமல் போவதால் பாதிக்கப்படுவது குழந்தைகளே. உடல் உறுப்புகளின் பெயர்களை சொல்லித்தருவதில் தயக்கம் வேண்டாம்.

* எதெல்லாம் அந்தரங்க உறுப்புகள் என்ற தெளிவை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அந்த உறுப்புகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது. அம்மாவும் அப்பா மட்டுமே குறிப்பிட்ட வயது வரை பார்க்கலாம். மருத்துவரிடம் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அந்தரங்க உறுப்புகளைக் காட்டலாம். அதுவும் பெற்றவர்கள் முன்னால் மட்டுமே. மற்ற யாரும் அந்தப் பகுதிகளை தொடவோ, பார்க்கவோ அனுமதிக்கக் கூடாது என்பதை விளக்குங்கள்.

* உங்கள் குழந்தையிடம் உடலின் எல்லை எது என்று கற்றுக் கொடுங்கள். குழந்தையின் உடலை வெளி நபர்கள் எந்த எல்லை வரை என்ன காரணங்களுக்காக தொடலாம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வேறு யாராவது குழந்தைகளின் பிரைவேட் பார்ட்டை தொட முயற்சிக்கின்றனரா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

* பாலியல் தொந்தரவுகள் என்பவை ரகசியங்கள் அல்ல. அவற்றை மனம் திறந்து சொல்ல வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம். பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் குழந்தைகள் இதை வெளியில் சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரிடமும் சொல்லாமல் விடுகின்றனர். மேலும் குழந்தைகளை பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கும் நபர்கள் ‘‘நானும் நீயும் ரகசியமா விளையாடப் போறோம் இதை யாரிடமும் சொல்லிடாத. அப்புறம் உனக்கு தான் பிரச்னை வரும்,’’ என்று குழந்தைகளை அச்சுறுத்துகின்றனர். குழந்தைகள் இது போல யாராவது சொன்னால் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். 

* அந்தரங்க உறுப்புகளை யாரும் எந்த காரணத்துக்காகவும் புகைப்படம் எடுக்கக் கூடாது. இது பற்றி பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளை நிர்வாணமாக படம் எடுப்பது மற்றும் அந்தரங்க உறுப்புகளை படம் எடுப்பதும் அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என்று புரிய வையுங்கள். இதுபோன்ற செயல்களுக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. 

* பாதுகாப்பற்ற அல்லது நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் இளம் வயதினர் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை பார்ப்பது மற்றும் தொடுவது போன்ற அசெளகரியமான சூழலில் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதைக் கட்டாயம் உணர வைக்கலாம். 

* பாதுகாப்பற்ற சூழலை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்கான ‘கோடு வேர்டை’ உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். எப்போதெல்லாம் பாதுகாப்பற்ற உணர்வை அடைகிறார்களோ அப்போதெல்லாம் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போதோ, உறவினர்கள் மத்தியில் இருக்கும் போதோ குழந்தை இந்த வார்த்தையின் மூலம் பெற்றோருக்கு தனது பிரச்னையை உடனடியாக உணர்த்தலாம். தூங்கும் போதும், விளையாடும் போதும் அவர்கள் அசவுகரியமாக உணர்ந்தால் இந்த வார்த்தையை பயன்படுத்தப் பழக்குங்கள். 

* பிரச்னை எதுவும் ஏற்படாத பட்சத்திலும் குழந்தைகள் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். பருவ மாற்றத்தின் காரணமாக அவர்கள் உடலில் தானாக உணரும் மாற்றங்களையும் மனம் விட்டுப் பேச வாய்ப்புக் கொடுங்கள். அப்போது தான் உடல் பற்றிய ரகசியக் கூச்சம் விடுபடும். பிரச்னை வரும்போது தயங்காமல் குழந்தைகள் வெளிப்படுத்த பழகும். 

* நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பதைவிட ரகசியமாகத் தொடுகை எது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். வெளி நபர்கள் அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசுவது மற்றும் அவற்றை ரகசியமாக தொட முயற்சிக்கும்போது குழந்தைகள் அலர்ட் ஆக இந்த வார்த்தை பயன்படும். 

* தன் உடல் மற்றும் தொடுகை சார்ந்த விழிப்பு உணர்வு சக குழந்தைகளோடு இருக்கும்போதும் பின்பற்ற வேண்டும். மோசமான எண்ணத்தோடு அணுகுபவர்கள் முதலில் குழந்தைகளின் நண்பர்களாகியே பின்பு தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுக்கு பிடித்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர், பயிற்சியாளர் என்று யாராக இருந்தாலும் அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்கக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது பெற்றோரின் கடமை. 

 

- யாழ் ஸ்ரீதேவி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க