‘‘இது கழிவறை தந்த சமூக அங்கீகாரம்!’’ நிர்மல் புரஷ்கார் விருது பெற்ற மல்லிகா

நிர்மல் புரஷ்கார் விருது

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் சுகாதார விஷயத்தில், நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தைத் தொடங்கி, நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை, தனது அர்ப்பணிப்பான உழைப்பின் மூலம் மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்ததற்காக, ‘நிர்மல் புரஷ்கார் விருது’ பெற்றுள்ளார் மல்லிகா. 

காடுகள் மற்றும் மலைப் பகுதிகள் அடர்ந்த நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள சுயஉதவிக் குழுவின் செயலாளர் மல்லிகா, இந்தப் பகுதியில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவறை கட்டவைத்துள்ளார். இவரது சமூகச் சேவையைப் பாராட்டித்தான் இந்த விருது. நம் வாழ்த்தை மென்புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தார். 

'‘பல பெண்களைப் போல நானும் கல்லூரி முடித்ததும், திருமணம், குழந்தை என்று வீட்டுடன் முடங்கி இருந்தேன். என் கணவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். எங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறாள். பக்கத்தில் இருப்பவர்கள் அழைத்ததின் பேரில் 2012-ம் ஆண்டு சுயஉதவிக் குழுவின் உறுப்பினரானேன். குழுவில் சேர்ந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலக அனுபவம் கிடைக்க ஆரம்பித்தது. சேமிப்பு, கடன் என்று மட்டுமின்றி, மாவட்ட அளவில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. எந்தப் பயிற்சியைப் பெற்றாலும் அதை ஆவலுடன் நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கிவிடுவது என் இயல்பு. 

நாங்கள் வசிக்கும் பகுதி, கோத்தகிரியின் அரவேலு என்கிற கிராமம். அரசின் திட்டங்கள் பற்றி மக்களிடம் விழிப்புஉணர்வு குறைவாக இருந்தது. எங்கள் பகுதியில் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்று விழிப்புஉணர்வு அளிக்க ஆரம்பித்தேன். முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உட்பட அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் உதவிகள் செய்து வந்தேன். இந்தச் சமயத்தில்தான் 2014-ம் ஆண்டு கழிவறையின் முக்கியத்துவம் பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பெண்கள் கழிவறை இல்லாமல் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. என்னை முழுமையாக இந்தப் பணிக்குள் ஈடுபடுத்திக்கொள்ளும் உறுதி உருவானது'’ என கண்கள் அகலப் பேசுகிறார் மல்லிகா. 

நிர்மல் புரஷ்கார்

'‘நாங்கள் வாழும் பகுதி காடுகள், மலைப் பகுதிகள் என அடர்ந்த இடம். இங்கு நிலவும் வறட்சி, குறைவான மழை, குக்கிராமங்களின் விரிவாக்கத்தால் அடிக்கடி வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துவிடும். வீடுகளில் கழிப்பறை வசதியில்லாத மக்கள், ஒதுங்கச் செல்லும் இடங்களில் விலங்குகளால் தொந்தரவுகளை எதிர்கொள்வர். பருவ வயது பெண்களும் பல்வேறு சிரமங்களைச் சந்திப்பார்கள். படிக்கும் பெண்கள், தங்களுடன் படிக்கும் தோழிகளைக் கழிவறை இல்லாத காரணத்தாலே தங்கள் வீட்டுக்கு அழைக்க முடியவில்லை என என்னிடம் வேதனையுடன் சொல்வார்கள். இவை என் மனதில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இங்குள்ள பழங்குடி மக்கள், வீட்டின் அருகில் கழிவறை இருப்பது நல்லதல்ல என்ற மூடநம்பிக்கையிலும் இருந்தனர். அவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும், மூடநம்பிக்கையைத் தகர்த்தெறியவும் வீடு, வீடாகச் சென்று சுத்தமான கழிவறையின் அவசியத்தை எடுத்துரைத்தேன். தொடர்ந்த விழிப்புஉணர்வின் காரணமாக, பலர் வீடுகளில் கழிவறைக் கட்ட சம்மதித்தனர். ஆனால், 'எங்களிடம் பணம் எதுவும் இல்லை' என கை விரித்தனர். 

மக்களின் மனம் மாற்றத்துக்குப் பிறகும் பணம் பெரிய சவாலாக இருந்தது. அரசு, தனிநபர் கழிவறைக்கு வழங்கும் பன்னிரண்டாயிரம் ரூபாய் மானியம் போதுமானதாக இல்லை. கனரா வங்கியில் பேசி கடன் வாங்கிக் கொடுத்தேன். எங்கள் பகுதியில் 120 குடும்பங்களுக்கு 1.2 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடனை மக்கள் செலுத்தி வருகின்றனர். அரசின் மானியமும் குறித்த நேரத்தில் வந்துவிட்டதால் கடன் சுமையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பெண்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்'’ என்றார் மகிழ்வுடன். 

விருதை எதிர்பார்த்து எந்தப் பணியையும் செய்யவில்லை. எங்கள் பஞ்சாயத்து சார்பாக, எங்கள் பணிகளைப் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர். இதேபோல தமிழகத்தில் 15 பஞ்சாயத்துக்கள் விண்ணப்பித்துள்ளன என்று கூறினர். தமிழக அளவில் எனக்கு மட்டும் இந்த விருது கிடைத்துள்ளது. கழிவறையில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக நீலகிரி உருவாக வேண்டும். அதுவே இந்த விருதுக்கான முழுமையான அங்கீகாரமாக நினைக்கிறேன்'' என்கிறார் புன்னகையுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!