வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (05/05/2017)

கடைசி தொடர்பு:19:36 (05/05/2017)

"நிர்பயா வழக்கில் இது மட்டுமே முழுமையான தீர்வாகாது!" வழக்கறிஞர் பாலமுருகன்.

நிர்பயா

 

 

ப்போது நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது. 2012-ம் ஆண்டில் நடந்த கொடூரம் அது. ஐந்து ஆண்டுகள் கழித்தும் ஆராத ரணத்துக்கு மருந்திட்டது போல சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிர்பயா கடைசி நேரத்தில் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நான்கு பேருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குஜராத் வன்முறையில் 15 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ்பானு என்ற முஸ்லிம் பெண்மணி நீதியின் கரம் பற்றி போராடி வென்றுள்ளார். குற்றவாளிகளுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. குற்றத்துக்கு துணையாக இருந்த போலீசாருக்கும் நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பின் பெண்ணின் போராட்டத்துக்கு நீதி கிடைத்துள்ளது. 

நிர்பயாவுக்கு முன்னும் பின்னும் பெண் இனம் பாலியல் வன்கொடுமைகளை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஹாசினி, ரித்திகா என்று பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பல குற்றங்கள் காவல் நிலையத்தைக் கூட தொடாமல் மறைக்கப்பட்டு விடுகிறது. நாடே எதிர்பார்த்து காத்திருந்த நிர்பயா வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு... சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வழக்கறிஞர் மற்றும் மக்கள் கண்காணிப்புக் கழகத்தின் தேசிய குழு உறுப்பினர், எழுத்தாளர் ச.பாலமுருகனிடம் நிர்பயா பாலமுருகன்கேட்டோம். 

‘‘மக்கள் கண்காணிப்பகத்தில் மரண தண்டனை என்பது இந்தச் சமூகத்தில் குற்றங்களைக் குறைப்பதற்கான தீர்வாக இருக்காது என்கிற கொள்கை முடிவை எடுத்திருக்கிறோம். மரண தண்டனையை ஒரு காலத்திலும் ஆதரிக்க முடியாது. பாப்புலரான வழக்காக இருந்ததால் அரிதினும் அரிதான வழக்குகள் மற்றும் சென்சிட்டிவ் வழக்குகளில் மரண தண்டனை வழங்குவது தொடர்ந்து வருகிறது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் துயரத்தை வேதனையோடு அணுகுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு கொலை தண்டனை மட்டுமே தீர்வாகாது என்கிறோம். 

சமூகத்தில் தண்டனை பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி விடும் என்று நினைப்பது எதார்த்தத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது. தண்டனை வழங்கப்படுவதால் குற்றங்கள் குறைவதில்லை. அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பார்வை என்பது எல்லா மனிதர்களிடமும் ஊறியுள்ளது. நம் சமூகத்தில், மதங்களில், கடவுள்களில் பெண்களுக்கு எதிரான பார்வை ஆண்டாண்டு காலமாக பதியவைக்கப்பட்டுள்ளது. 

நம் சமூகத்தின் பெரும்பாண்மையோரின் பார்வையில், பெண்களின் உடல் சமூகத்தின் சொத்து என்ற எண்ணம் காலம் காலமாக விதைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் வெளியில் வருகிற பெண்களை கையைப் பிடித்து இழுக்கலாம் என்ற எண்ணம் பொதுபுத்தியில் இங்கு பதிந்து போயுள்ளது. இவற்றில் மாற்றம் வராமல் நான்கு பேரைத் தூக்கில் போடுவதால் பிரச்னை தீராது.

சினிமாவில் பெண்ணை இழிவுபடுத்தும் விஷயங்கள் காட்டப்பட்டால் அதை எதிர்க்கிறோம். ஆனால் நம் வீட்டில், பள்ளியில், கல்லூரிகளில் பெண்ணை மதிக்க என்ன சொல்லித்தருகிறோம்? ஆண் மனதில் பெண் உடல் தொடர்பாக இருக்கிற பிம்பத்தை எப்படி உடைக்கப் போகிறோம்? குற்றங்கள் மரண தண்டனையோடு தொடர்புடையதல்ல. மரண தண்டனைக்கு அடுத்த நாளில் இருந்து பெண்களை சகோதரியாகவும், தோழியாகவும் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்ட எல்லா வழக்குகளிலும் இது போன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள. பில்லா ரங்கா வழக்கு, ஆட்டோ சங்கர் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பில்கிஸ்பானு பாதிக்கப்பட்ட சம்பவம் 2002-ல் நடந்தது. குடும்பத்தில் 8 பேரைக் கொன்று அந்தப் பெண்ணை 15 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். அது பாப்புலரான வழக்காக பார்க்கப்படவில்லை. அதில் மரண தண்டனை வழங்கப்படவில்லை. தண்டனை அளவு வரையறுக்கப்படவில்லை. 

சென்சேசன் வழக்குகளில் துரதிஷ்டவசமாக நீதிபதிகளின் விருப்பு வெறுப்பு சார்ந்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது. 1989-ல் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனைகொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அரிதினும் அரிதான வழக்கு என்பதற்கு சட்ட வரையரை எதுவும் வழங்கப்படவில்லை.

நிர்பயா பாதிக்கப்பட்டதற்கு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தண்டனை வழங்கப்பட்டிருக்கும் வடிவத்தில்தான் மாறுபடுகிறோம். நிர்பயா சம்பவம் நடந்த சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளி செல்லும் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது. அது இந்தளவுக்கு சென்சேஷன் ஆக்கப்படவில்லை. மிடில் கிளாஸ் மனநிலையில் அந்த வழக்கு அணுகப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு, மரியாதையை மேம்படுத்தும் போதுதான் பாலியல் வன்கொடுமைக்கான வேரை அறுக்க முடியும். மரண தண்டனையால் மட்டும் பெண்களுக்கான பாதுகாப்பும், பெண்களுக்கான நீதியும் சமூகத்தில் கிடைக்காது. 

ஆணாதிக்க மனநிலையில் வளர்க்கப்பட்ட ஒரு சமூகம் இது. இந்தச் சமூகத்தில் குழந்தைகளின் உள்ளத்தில் இருந்து ஆணாதிக்க மனோபாவத்தை எப்படி தூக்கி எறிவது என்று யோசிக்க வேண்டியுள்ளது. ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்ற எண்ணம் பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகிறது. இந்த மனநிலையை மாற்ற நாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம். இந்தப் பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. என் குழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறேன்? என் வீட்டில் எந்தளவுக்கான ஜனநாயகத்தை பின்பற்றுகிறேன். நிர்பயா சம்பவத்துக்கு பின் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் டெல்லியில் பல நடந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. நிர்பயா வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மட்டுமே பெண்கள் நாளும் சந்தித்து வரும் பாலியல் வன்கொடுமைக்கான தீர்வு ஆகாது. இன்னொரு பெண்ணுக்கு இந்தக் கொடுமை நடந்திடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக மாற்றத்துக்கான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான பணிகளை ஆண்களும், பெண்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்,’’ என்கிறார் பாலமுருகன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்