Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கதவைச் சாத்தாமல் பாத்ரூம் போகச் சொன்னார்”, ‘விக்ஸ்’ விளம்பரப் புகழ் திருநங்கை கெளரி சவந்த்!

கெளரி சவந்த்

விக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த விளம்பரப் படம் பலரையும் கண்ணீர்க் குளத்தில் மூழ்கடித்துள்ளது. படம் ஓடத்துவங்குகிறது.... பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அந்தக் குட்டிப் பெண் தன் கடந்த காலத்துக்குப் பயணிக்கிறாள். வேதனையும், குறுநகையும் மாறி மாறி இடம்பிடிக்கிறது அவள் முகத்தில். தாய்ச்சிறகில் அடைகாக்கப்பட வேண்டிய குட்டிப்பறவையின் தவிப்பு அவள் விழிகளில். விவரம் புரியாத சிறு வயதில் தன்னை பெற்றெடுத்த தாய்நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, நிர்கதியாகிறது அந்தக் குழந்தை. அன்பின் சிறகை தொலைத்து வாடும் அந்த பிஞ்சு மனம் தனிமைப்படுத்தப்படுகிறது. அவ்வளவு கொடுமையான சூழலில் இருந்து இன்னொரு தாயின் அன்பு அவளை மீட்டெடுக்கிறது. அவர் அவளின் வளர்ப்புத் தாய். 

வளர்ப்புத் தாய்க்கும் தனக்குமான அனுபவங்களைக் குட்டிப் பெண் பெருமிதத்தோடும், நெகிழ்வோடும் பகிர்ந்துகொள்கிறாள்... 
‘‘என்னை அவளின் மகளாக ஏற்றுக்கொண்டார். என் பசியறிந்து ஊட்டி விடுவார். எங்களது ஞாயிற்றுக்கிழமைகள் ரொம்ப ஸ்பெஷலானவை. என் தலைக்கு ஆயில் மசாஜ்  செய்துவிடுவார். புது டிரெஸ் வாங்கித் வந்து எனக்கு உடுத்திப் பார்த்து உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்துவார். என்னைப் படிக்க வைக்கிறார்,’’ - இப்படிப் பேசியபடியே அந்த சிறுமி திரும்புகிறாள்... அவள் அருகில் அமர்ந்து பயணிக்கும் வளர்ப்புத் தாயின் மலர்ந்த முகம் திரையில் காட்டப்படுகிறது. அவர் ஒரு திருநங்கை. அந்தச் சிறுமியை முத்தமிட்டு கட்டிக்கொள்கிறார். 

அந்தச் சிறுமி தன் பேச்சைத் தொடர்கிறாள்... ‘‘நான் ஒரு டாக்டராக வேண்டும் என்று அம்மா விரும்புகிறாள். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை. திருநங்கைகளும் மனிதர்கள்தானே. மறுக்கப்படும் அவர்களின் உரிமையை மீட்க வழக்கறிஞராகவே விரும்புகிறேன்.. டாக்டராக மாட்டேன்,’’ என்ற அந்த சிறுமியின் குரல் உறுதியாய் ஒலிக்கிறது. அந்தத் தாய், பள்ளியில் சிறுமியை விட்டுவிட்டுத் திரும்புகிறார்... தான் ஒரு தாய் என்ற பெருமிதம் அந்த திருநங்கையின் கண்களில் நம்பிக்கையாய் மின்னுகிறது. முடிவில் இது விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட கதையல்ல. இதில் நடித்திருக்கும் திருநங்கையின் உண்மை கதை என்ற எழுத்துக்கள் நம் கண்களில் விழுந்து இதயத்தில் பாய... அந்த விளம்பரப் படம் முடிகிறது. 

திருநங்கை கௌரி சவந்த்தின் உண்மைக் கதை அவ்வளவு எளிதாய் கடந்துவிடக்கூடியது அல்ல.  புனேயில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தை அவன். கணேஷ் என்று பெயர் வைத்து பெற்றோர் வளர்த்தனர். வளர் இளம் பருவத்தை எட்டியபோது பெரும் குழப்பத்தைச் சந்தித்தான் கணேஷ். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பொட்டு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டான். பெண்களைப் போல அலங்காரம் செய்துகொள்ள விரும்பினான். ஆண் நண்பர்களைவிட பெண் தோழிகளுடன் இருக்கவே அவனுக்குப் கெளரி சவந்த்பிடித்தது. ஆனால், கணேஷ் உடலால் ஒரு ஆண் என்பதால் அவனுடைய  ஆசைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ள வேண்டிய நிலை. தன் வயது சிறுவர்களைப் போல அவனால் பேன்ட் - சட்டை போட்டுக்கொள்ள பிடிக்கவில்லை. குர்தா அணிந்து மனதை சமாதானப்படுத்திக்கொண்டான். 
தான் ஒரு திருநங்கையாக மாறும் வரை கடந்து வந்த வலிகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார் கௌரி சவந்த்... ‘‘அந்த வயதில் குர்தா எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான உடையாகவே குர்தா எனக்குத் தோன்றியது. வீட்டை விட்டு வெளியில் வந்ததும் பொட்டு வைத்து, கம்மல், வளையல் ஆகியவற்றால் என்னை அலங்கரித்துக்கொள்வேன். மீண்டும் வீடு திரும்பும்போது எல்லாவற்றையும் கழற்றி பையில் வைத்துக் கொள்வேன். வீட்டிலும் வெளியிலும் என இரட்டை வாழ்க்கை வாழ்ந்தேன். 

சிறு வயதில் அம்மா இறந்துவிட்டதால் புனேயில் இருந்து பாட்டி வீடான மும்பைக்கு வந்து விட்டேன். பாட்டியிடம் வளர்ந்தேன். என் அப்பா காவல் துறை அதிகாரி. எனக்குள் நடக்கும் மாற்றங்களை அவர் கண்டுபிடித்துவிட்டார்.  மீசை வைத்துக்கொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார். எனக்கு பிடித்தமாதிரியும் இருக்க முடியாமல்... அவர்கள் சொல்வது மாதிரி வாழ முடியாமல் தவித்தேன். வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். 

எனது பெண் தன்மையைப் பார்த்து பள்ளியிலும், வெளியிடங்களிலும் என்னை பலரும் கேலி செய்தனர். பொது இடத்தில் நடந்து செல்லவே எனக்கு கூசும். ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும் போது சகமாணவன் மீது எனக்குள் ஒருவித ஈர்ப்பு உருவானது. நான் அவனை காதலிக்கத் துவங்கினேன். அவனுக்கு காதல் கடிதங்கள் எழுதினேன். அவன் என் அன்பை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ரத்தத்தில் எழுதிக்கொடுத்தேன். அவனும் எனக்குக் கடிதம் எழுதினான். அவனுக்காக நான் அவன் வகுப்பு வாசலில் தினமும் காத்திருப்பேன். சிறிது நாட்களில் அவன் வேறு ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிவிட்டான். அதன் பின் காதல் என்பதே எனக்கு கசப்பாக மாறிவிட்டது,’’ என்று  சிரிக்கும் கௌரி, மேலும்  தனக்கு நடந்த கொடுமைகளைப் பகிர்ந்துகொண்டார்...

‘‘நான் பெண்ணாக மாறக் கூடாது, அப்படி மாறினால் அது தங்களுக்கு அவமானம் என்று குடும்பத்தினர் நினைத்தனர். இதற்காக அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை வார்த்தையால் சொல்ல முடியாது.  நான் பாத்ரூமில் சிறுநீர் கழிக்க சென்றால்கூட கண்காணித்தனர். கழிவறைக் கதவை திறந்து வைத்தபடிதான் நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தனர். அப்போது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. உயிர் போய் உயிர் வரும். அங்கு நடந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். வீட்டிலும் சமூகத்திலும் அவமானங்களை மட்டுமே சந்தித்த என் மனதுக்கு ஆறுதல் அளித்தது ‘ஹம்சபர் ட்ரஸ்ட்’தான். இவர்களிடம் அடைக்கலம் அடைந்த பின் என் வாழ்வின் அர்த்தத்தை என்னால்  புரிந்துகொள்ள முடிந்தது'' எனும் கெளரியின் வாழ்வையே புரட்டிப் போட்ட சம்பவம் 2001-ம் ஆண்டில் நடந்தது... 

``அப்போது என் வீட்டின் அருகில் ஒரு பாலியல் தொழிலாளி வசித்துவந்தார். அவரின் ஒரே மகள் காயத்ரி. எப்பவும் துறுதுறு என்று விளையாடிக்கொண்டிருப்பாள். திடீரென நோய்வாய்ப்பட்ட காயத்ரியின் அம்மா ஒருநாள் இறந்துவிட்டார். கண்ணீரும் தேம்பலுமாக அந்தக் குழந்தை தனித்து நின்றாள். வறுமையில் வாடிய அவளின் பாட்டி, காயத்ரியை கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியான சோனாகச்சியில் விற்றுவிட முடிவுசெய்தார். அந்த சிறு குழந்தையை ஒரு பாலியல் தொழிலாளியாக என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. `அங்கு போனால் அந்தக் குழந்தை எத்தனை கொடுமைகளை அனுபவிக்குமோ' என்ற வேதனை என் மனதை வாட்டியது. உடலால் ஆணாகப் பிறந்துவிட்டாலும் மனதால் என்னை பெண்ணாகவே எல்லாத் தருணத்திலும் உணர்கிறேன். அந்தக் குழந்தையின் கண்ணீர் என்னிடம் தாய்மை உணர்வைத் தூண்டியது. நான்  பாட்டியிடம் பேசி காயத்ரியைத் தத்து எடுத்தேன். அவள் மகளாக வந்த பின் நான் வாழ்வதன் அர்த்தமே மாறியது'' என்ற கெளரி தொடர்ந்தார்... 
``அவளை எங்கள் மத்தியில் வளர்ப்பதை முதலில் கடினமாக உணர்ந்தேன். என் பாலினத்தைப் பற்றி அவளுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. சுடிதார், புடவை அணிந்தவர்கள் ஆன்ட்டி, மற்றவர்கள் அவளுக்கு அங்கிள்... அவ்வளவுதான். அவளோடு இருக்கும்போதும், அன்பு காட்டும் போதும் பெண்மையின் புனிதத்தை நான் உணர்கிறேன். அவளைப் படிக்கவைத்து தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக வளர்க்க விரும்புகிறேன். அருகில் இருக்கும் பள்ளியில் அவளைச் சேர்த்தேன். மற்ற மாணவர்கள் அவளைப் பார்த்து கைதட்டி சிரித்து கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். 

அந்த பிஞ்சு மனம் இது போன்ற அவமானங்களை தாங்காது. அவளது கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழுவதைக்கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவளை போர்டிங் ஸ்கூலில் படிக்கவைக்க முடிவு செய்தேன்,’’ என்கிறார். ஒரு தாயின் அக்கறையுடன் காயத்ரியை வளர்க்கும் கௌரி, கடைசியாக உங்களிடம் கேட்பது இதுதான் ....‘அன்புக்கு பாலினம் இருக்கிறதா?!’

கெளரி சவந்த் நடித்த ’விக்ஸ்’ விளம்பரத்தைப் பார்க்க:

 

 

‘சகி சார் சோவ்கி’ என்ற சமூக அமைப்பை நடத்தி வருகிறார் கௌரி சவந்த். மூன்றாம் பாலினத்தவருக்கு மட்டுமின்றி ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் போராடுகிறது இவரின் அமைப்பு. ‘‘நான் கண்ணியமாக வாழ நினைக்கிறேன். அவமானங்கள் என்னை சுயமரியாதையை நோக்கித் தள்ளியது. இப்போது நான் வாழும் வாழ்க்கை எனக்கானது. சுயமரியாதைகொண்டது,’’ என்று  நெகிழ்கிறார் கௌரி சவந்த்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close