Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘டீச்சருக்குப் படிச்சேன்... ஓட்டுறது விசைத்தறி!’’ - திருநங்கை திவ்யாகிருஷ்ணன் எம்.ஏ.பி.எட்.

திருநங்கை

 


ஃறிணை உயிர்கள் மீதும் அன்பு செலுத்தச் சொல்லும் பண்பாடுகொண்ட இதே சமூகத்தில்தான் திருநங்கைகளை மட்டும் அவமானப்படுத்தி ஒதுக்கிவைக்கும் நிலை காலம் காலமாக நடந்துவருகிறது. ஒருவர் திருநங்கையாகத் தன்னை உணரும்போது இந்தச் சமூகம் அவர்களுக்குத் தரும் தண்டனை மனிதக் குலத்துக்கே இழுக்கு அளிக்கக் கூடியது. வீட்டில் ஆரம்பிக்கும் இந்தப் புறக்கணிப்பு வெளியெங்கும் துரத்தும். ஆனால், திவ்யா கிருஷ்ணன் இந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலி. பெற்ற வீடு அவரை அரவணைத்துக்கொண்டது. படிக்கவும் வைத்தது. 

சமூகம் ஒருபுறம் கேலி செய்தாலும், திவ்யாவின் எதிர்நீச்சல் அவரை எம்.ஏ.பி.எட்., பட்டதாரியாக உயர்த்தியது. ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு என எழுதிக்கொண்டிருக்கும் திவ்யாவின் ஆசை இன்று வரை நிறைவேறவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை முடித்த திவ்யாகிருஷ்ணன் இன்று வரை வேலைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். தான் கடந்துவந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 

‘‘சேலம் பக்கத்திலிருக்கும் இடங்கனசாலை மடத்தூர் எனது சொந்த ஊர். என் அம்மா பாஞ்சாலி, என் அப்பா வையாபுரி. ரெண்டு பேருக்கும் விவசாய வேலை. எனக்கு ஓர் அண்ணன், ஓர் அக்கா. நான் வீட்டின் கடைக்குட்டி. எப்பவுமே வகுப்பில் நான்தான் ஃபர்ஸ்ட்டா வருவேன். இப்படி என் குழந்தைப் பருவம் குதூகலமா போயிட்டிருந்துச்சு. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் என்னைத் திருநங்கையா உணர்ந்தேன். என் வீட்டில் யாரும் என்னைக் காயப்படுத்தலை. என்னை அரவணைச்சாங்க. அன்பு அதிகமா இருந்தாலும் வசதி இல்லை. என்னைப் படிக்கவைக்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. 2004 ஆம் வருஷம் பிளஸ் டூ முடிச்சுட்டு அடுத்த நாலு வருஷமும் வீட்லதான் இருந்தேன். விவசாய வேலைகளையும், விசைத்தறி ஓட்டவும் கத்துக்கிட்டேன். திருநங்கைகளுக்காக உதவும் 'மக்கள் மேம்பாட்டு வினையகம்' அமைப்பு மூலமா மேல படிக்கும் வாய்ப்புக் கிடைச்சது. தாரமங்கலம் வெற்றிவேல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே என்னை அவ்வளவு கண்ணியமா நடத்தினாங்க. 

நான்காம் வகுப்புப் படிக்கும்போதே டீச்சரா வரணும்னு என் மனசுக்குள்ளே விதை விழுந்துடுச்சு. திருநங்கையா உணர்ந்த பிறகும் அந்த ஆசையைச் செயலாக்க முடியும்னு நம்பினேன். அதனால்தான், டீச்சர் டிரெய்னிங் போனேன். அப்போ, தமிழ்நாட்டிலேயே டீச்சர் டிரெயினிங் முடிச்ச முதல் திருநங்கை நான்தான். தொடர்ந்து படிக்கும் ஆசையை வீட்டுல சொன்னதுமே ஒத்துக்கிட்டாங்க. தமிழ்நாடு ஓப்பன் யுனிவர்சிட்டியில் தமிழ் பி.ஏ. மற்றும் எம்.ஏ. முடிச்சேன். அடுத்து, ராக்கிப்பட்டி பி.எஸ்.எம்., காலேஜ் ஆஃப் எஜூகேசன்ல பி.எட். முடிச்சேன். ஆசிரியர் தகுதித் தேர்வும் எழுதியிருக்கேன். 

2013 ஆம் வருஷம் குரூப் 2 ‘ஏ’ வேலைக்கான தேர்வு எழுதி, 150-க்கு 111 மார்க் வாங்கினேன். ஆனால், என்னை ஆண்கள்  பிரிவில் சேர்த்ததால் வேலை கிடைக்கல. தமிழில் முதுகலைப் படிப்பும் முடிச்சிருக்கிறதால் டி.ஆர்.பி. தேர்வும் எழுதப்போறேன். அடுத்தடுத்த அரசுத் தேர்வுகளையும் எழுதுவேன். தமிழ்நாட்டிலேயே ஆசிரியர் பயிற்சியோடு எம்.ஏ., பி.எட்., முடிச்சிருக்கிற திருநங்கை நான் மட்டும்தான். திருநங்கைகளுக்கு அரசு வேலையில் மூன்று சதவிகிதம் ஒதுக்கீடு இருக்கு. அதனால், அரசு எனக்கு வேலைக் கொடுக்கலாம். ஆனால், இதுவரைக்கும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. நான் இப்போ விசைத்தறி ஓட்டிக்கிட்டிருக்கேன். விவசாய வேலைகளையும் பார்க்கிறேன். சீக்கிரமே ஆசிரியரா ஆகணும். பள்ளியில் மாணவர்கள் மத்தியில் நின்னு பாடம் நடத்தணும். அவங்களுக்கு ஒரு மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் ஆசிரியராக என்னையே நான் உதாரணப்படுத்திக்க ஆசைப்படறேன். அதுக்காக நீதிமன்றத்தை நாடவும் தயாரா இருக்கேன்’’ என்கிறார் திவ்யா கிருஷ்ணன். 

இவரது குரல் தமிழக அரசின் காதுகளில் விழுமா? 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement