Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சாதி அடையாளம் வேண்டாம்!" தமிழ்த்தாலி கட்டிக்கொண்ட அபிராமி நெகிழ்ச்சி

தமிழ் தாலி

குழந்தைகள் ஆர்வலர் பிரீத்தா நிலாவின் முகநூல் பதிவு, தமிழ் மீதான பெருமித உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பன் திருமணத்தில் கடவுள் உருவங்கள் பொறித்த தாலிக்குப் பதிலாக 'தமிழ்' எனப் பொறிக்கப்பட்ட தமிழ்த் தாலி, மங்களநாணை மனைவிக்கு அணிவித்திருக்கிறார் ரவீசு ராசா. மணமகன் ரவீசுவின் பெயர் பொறித்த மோதிரம் அபிராமியின் விரல்களிலும், அபிராமியின் பெயர் பொறித்த மோதிரம் ரவீசுவின் விரல்களிலும் தங்கக் கவிதை பாடுகின்றன. அதைப் பார்த்து உலகம் முழுவதுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி, தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இதை அணிந்துகொண்ட அபிராமியின் மனம் என்ன சொல்கிறது? 

‘‘சின்ன வயசிலிருந்தே தமிழ்மீது பற்று அதிகம். எழுதுறதும் விருப்பம். அவரோ தமிழ்மீது உயிரையே வெச்சிருக்கார். சின்ன வயசிலேயே கையில் 'தமிழ்' எனப் பச்சைக் குத்திக்கிட்டார். இது, காதல் திருமணம். எல்லாமே தமிழில் இருக்கணும்னு அவர் விரும்பினார். எனக்கும் அது பிடிச்சிருந்துச்சு. திருவள்ளுவர் படம் போட்டு, திருக்குறளோடு முழுக்க முழுக்க தமிழில்தான் அழைப்பிதழ் அச்சடித்தோம். முதல்ல கிண்டல் பண்ணினவங்க, அழைப்பிதழைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. அன்பின் அடையாளமான தாலியிலும் மோதிரத்திலும் தமிழைச் சுமக்கிறது ரொம்ப மகிழ்வா இருக்கு. சாதிய அடையாளமாகத் தாலியைச் சுமக்கவில்லை என்கிற உணர்வே பெருமையா இருக்கு’’ என்கிறார் அபிராமி. 

தமில் தாலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டாரு பகுதியைச் சேர்ந்தவர் ரவீஷ் குமார். தனது பெயரிலுள்ள வடமொழி எழுத்தையும் மாற்றிக்கொண்டு ரவீசு ராசன் ஆனார். எம்.சி.ஏ. முடித்துவிட்டு, பெங்களூரில் டெக்னிக்கல் ஸ்பெஷலிஸ்டாக பணிபுரிகிறார். இவருடன் காதலாகி கரம் கோர்த்திருக்கும் அபிராமியும் எம்.சி.ஏ. முடித்து ரிசர்ச் அனலிஸ்டாக கன்னியாகுமரி பகுதியில் பணியாற்றுகிறார். ஆனாலும் இருவருக்கும் தமிழ்மீதான காதல் மட்டும் குறையவே இல்லை. 

பத்து ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு காதல் இணையர் திருமணப் பந்தத்தில் கரம் கோர்த்துள்ளனர். எங்கும் எதிலும் தமிழ் எனக் களம் இறங்கிய தங்கத் தமிழர் ரவீசுவின் மனம் என்ன சொல்கிறது? 

‘‘தமிழ் எனக்கு உயிர். உடம்பில் பச்சை குத்திக்கிற அளவுக்குத் தமிழ் மேல பிரியம். அபிராமியும் நிறைய எழுதுவா. முழுக்க முழுக்க தமிழில் திருமணம் என வேலைகளை ஆரம்பிச்சப்போ நிறைய நடைமுறை சிக்கல்களைச் சந்திச்சோம். தாலியில் தமிழ் எழுத பல ஜூவல்லரிகளில் அலைஞ்சோம். தங்கத்தில் தமிழ்ல எழுத்துகள் பொறிக்க ஆள் கிடைக்கலை. தமிழில் எழுதினால், சேதாரம் 14 சதவீதம் கொடுக்கணும்னு சொன்னாங்க. எப்படியோ ஒரு ஆசாரியைப் பிடிச்சு தமிழ் பெயரைச் செதுக்கினோம். இருவர் விரல்களையும் தமிழ் மோதிரங்களால் அலங்கரிக்க ஆசைப்பட்டோம். அதுவும் நடந்தது. எங்க வீட்ல அம்மா, அப்பா சாதி பார்க்கமாட்டாங்க. ஆனால், தாலி விஷயத்தில் சாதிய அடையாளம் இருக்கிறது அவங்களுக்குப் புரியலை. அதை மாற்றவும், என் தமிழ் மேல எனக்கு இருக்கிற பேரன்பை வெளிப்படுத்தவும் இப்படியொரு புதுமை செய்தோம். தொல்காப்பியத்திலேயே தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்யும் முறை இருந்திருக்கு. கட்டிய எனக்கும் கட்டிக்கொண்ட அபிராமிக்கும் தமிழ்ப் பெருமை சேர்த்திருக்கு. எங்க வாழ்க்கையில் தமிழ் எப்பவும் இருக்கும்’’ என்கிறார் ரவீசு ராசா. 

வாழ்த்துகள் தம்பதிகளே! 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற பாரதிதாசனின் வரிகள் இன்றும் வாழ்கிறது. திருமணங்கள் நடத்தும் விதமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement