Published:Updated:

‘‘உங்களுக்கு யாராவது தோசை சுட்டுக் கொடுத்திருக்கிறார்களா?’’ மகளிர் மட்டும் ஜோதிகாவின் கேள்வியில் எத்தனை உண்மை!

யாழ் ஸ்ரீதேவி
‘‘உங்களுக்கு யாராவது தோசை சுட்டுக் கொடுத்திருக்கிறார்களா?’’ மகளிர் மட்டும் ஜோதிகாவின் கேள்வியில் எத்தனை உண்மை!
‘‘உங்களுக்கு யாராவது தோசை சுட்டுக் கொடுத்திருக்கிறார்களா?’’ மகளிர் மட்டும் ஜோதிகாவின் கேள்வியில் எத்தனை உண்மை!

மகளிர் மட்டும் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு இன்று  நடந்தது. பரபரப்பான எதிர்பார்ப்புக்கு இடையில் அடுத்தடுத்த கட்டங்களை எட்டிக் கொண்டிருக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் பாடல்கள் புருவம் உயர்த்த வைத்துள்ளது. டிரெயிலரில் வரும் பாடல்  ‘வாடி திமிரா.....இந்த வாழ்க்கை வரமா, பயமா’ என்று புரட்சி பாடுகிறது. திருமணத்துக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கை எப்படி சிறை வாழ்க்கையாக மாற்றப்பட்டிருக்கின்றது என்பதை மையப்படுத்தி கதை நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இந்த படத்தின் டீசர் இன்றளவும் பெண்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தாமல் இல்லை. ஆண்டாண்டு காலமாக இல்லத்தரசிகள் சமையல் அறைக்குள் எப்படி அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை டீசரில் வரும் தோசை டயலாக் நமக்கு உணர்த்துகிறது. 

மிழகத்தை கொளுத்தும் வெயிலையும் தாண்டி ஒவ்வொருவர் மனதையும் சில்லிட வைத்தது ‘மகளிர் மட்டும் டீசர்’. ‘‘ஃபிரஷ்ஷ்ஷ்’’ ஜோதிகா, துணிச்சல் பார்வை...மிடுக்கான நடை...கலக்கல் பார்வை...அதிர வைக்கும் கேள்விகள் என ஜோதிகாவின் அழகுத் திமிரில் வெளிப்படுகிறது அத்தனை பெண்களுக்குமான சுதந்திர வெளி. சரண்யா, பானுப்பிரியா, ஜோதிகா என நண்பிகள் சேர்ந்து ஒரு ஜாலி டிராவல் பண்ணும் போது அந்தக் கேள்வி பானுப்பிரியாவுக்கு வருகிறது. ''ஒருத்தருக்கு 6 தோசைன்னா, வீட்ல மொத்தம் ஏழ பேர் இந்த 30 வருஷத்தில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 400 தோசை சுட்டுக் கொடுத்திருக்கேனா'' என்று வியக்கிறார். ''என் வீட்ல நான் இரண்டு லட்சம் தோசை சுட்டிருப்பேன்'' என ஊர்வசியும், ''நான் இரண்டரை லட்சம் தோசைகள் சுட்டிருப்பேன்'' என சரண்யா பொன்வண்ணன் சொல்வது போலவும் விவாதம் தொடர்கிறது. இடையில் புகும் ஜோதிகா ‘‘இது வரைக்கும் உங்களுக்கு யாராவது தோசை சுட்டுக் கொடுத்திருக்காங்களா?’’ என்ற கேள்வியாக தொடர்கிறது டீசர்.


ஆம் இந்தக் கேள்வியில் எத்தனை உண்மையிருக்கிறது?!


'இல்லத்தரசி' எனும் பட்டம் அத்தனை சாதாரணமான பட்டம் அல்ல. தலையில் முள் கிரீடம் வைத்தாலும் புன்னகையோடு 'கடமையே கண்ணாக' செய்து முடிக்க வேண்டிய பொறுப்புகள் இதில் ஏராளம். இல்லத்தரசி பதவி ஏற்கும் பெண்கள் மெத்தப் படித்திருக்கலாம். அதன் விளைவாக அரசாங்கப் பொறுப்பு, பெரிய நிர்வாக பதவிகளிலும் வீற்றிருக்கலாம். ‘‘வெளியில் நீ யாராகவும் இருக்கலாம்..வீட்டுக்கு வந்துட்டா துடப்பக்கட்டை’’ தான் என்பார்கள் வீட்டில் உள்ளவர்கள்.  

ஏன் பெப்சிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி கூட இல்லத்தரசி என்கிற நெருக்கடியில் இருந்து தப்பவில்லை என்பது அவர் கொடுத்த பேட்டியில் தெரியும். ஒரு மீட்டிங் முடிந்து தான் லேட்டாக வந்தபோது தன்னுடைய கணவர் கடிந்துகொண்டதை நூயி தெரிவித்திருப்பார். அதிலேயே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பெண்கள் வீட்டுப் பொறுப்பை துறக்க இயலாது என்பதை வேறு வேறு வார்த்தைகளில் விவரித்திருப்பார்.

ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்து பெண்ணுக்கு கை விலங்காகத்தான் மாட்டப்படுகிறது. இதில் காதல் திருமணம், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. அவளது கழுத்தில் தாலி ஏறி விட்டால் அவ்வளவுதான். வேலைக்குப் போகும் பெண்களுக்கு இல்லத்தரசி பொறுப்பில் சலுகைகள் எதுவும் கிடையாது. அலுவலக வேலையோடு வீட்டுவேலையும் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அத்தனை வேலைகளையும் இன்முகத்துடன் செய்ய வேண்டும். வேலைக்கு கிளம்பும் முன்பாக வீட்டில் யார் யாருக்கு என்ன பிடிக்கிறதெனக் கேட்டு சமையலை முடிக்க வேண்டும். யார் குறை சொன்னாலும் முகம் சுருங்காமல் சகித்துக்கொள்ள வேண்டும். இத்தனை களேபரங்களையும் வீட்டில் சமாளித்து விட்டே இல்லத்தரசிகள் தங்களது அலுவலகப் பணிகளுக்கு விரைகின்றனர். அலுவலகத்திலும் அதே இன்முகம். கொடுக்கும் டார்கெட்டை முடித்து தனது சம்பள உயர்விலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.  

இல்லத்தரசி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அந்த வீட்டில் உள்ளவர்களின் பசியறிந்து, பண்பு அறிந்து பணியாற்றினாலும் அவளது உழைப்புக்கு என்றுமே மதிப்பில்லை.  யாரும் சம்பளம் தரப்போவதும் இல்லை. இந்தப் பணிக்காக அவர்கள் எதெல்லாம் விட்டுக் கொடுக்கிறார்கள் தெரியுமா? தான் விரும்பிய பாடல் கேட்பதை விட்டு, புத்தகம் வாசிப்பதை மறந்து, கவிதை எழுதுவதை தொலைத்து, நடனம் ஆடுவதைத் துறந்து...படித்து வாங்கிய பட்டங்களை பரணில் போட்டுவிட்டே இல்லத்தரசிகளாக வலம் வருகின்றனர். அவர்களது புன்னகையின் வேரில் இத்தனை கண்ணீர்த்துளிகள் புதைக்கப்பட்டிருக்கிறது. 

தன்னையே தியாகம் செய்து விட்டே ஒரு பெண் இல்லத்தரசியாக இன்முகம் காட்ட வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு நாள் உடம்புக்கு முடியாமல் போய் விட்டாலும் வீட்டில் யாருக்கும் ஒரு குறையும் வைத்துவிடக் கூடாது. தலைவலி காய்ச்சல் வந்தாலும் குழந்தை மதியம் வயிறு நிறைய சாப்பிட்டதா என்று அந்தத் தாய் மனம் துடிக்கும். மாதத்தின் ஐந்து நாட்கள் இயற்கையே பெண்ணுக்கு விலக்கு அளித்தாலும் வேலைகளில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்கு இல்லையே. அந்த நாட்களுக்கான ‘அன்பு’ எத்தனை பெண்களுக்கு கிடைத்திருக்கிறது. 

வீடு, வேலை, குழந்தைகள் என அத்தனையும் சுமக்கும் இந்த இல்லத்தரிசகளின் வார விடுமுறை நாட்கள் எவ்வளவு வலி மிகுந்தவை தெரியுமா. வாரம் முழுவதும் விட்டு வைத்த அத்தனை வேலைகளையும் அந்த 24 மணி நேரத்துக்குள் முடித்தாகவேண்டும்.

இல்லத்தரசி பட்டத்துக்காக அவர்கள் சுமக்கும் வலிகளுக்கு மருந்திட அன்புடன் எந்தக் கரமும் நீள்வதில்லையே ஏன்? இப்படி சமைத்துக் கொட்டும் பெண்ணிடம் என்றைக்காவது 'நீ சாப்பிட்டாயா' என்று ஒரு வார்த்தை கேட்காத உறவுகள் எத்தனை. லட்சக்கணக்கிலான தோசை சுட்டுப் போட்டிருந்தாலும் ஒரு நாள் அந்தப் பெண்ணை அமரவைத்து சமைத்துப் போட வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஒருவருக்கும் வருவதில்லை. மகளிர் மட்டும் ஜோதிகா கேட்கும் கேள்வியில் ஒளிந்திருக்கும் உண்மை இது தான். இல்லத்தரசிகளுக்கும் வலிகள் உண்டு. 

வாழ்க்கை முழுவதும் குடும்பத்தை மட்டுமே மனதில் சுமந்து கொண்டிருக்கும் அவர்களது விருப்பங்களைக் கேட்டு நிறைவேற்றுங்கள். வாரம் ஒருமுறையாவது இந்த கூட்டுச் சிறையில் இருந்து கொஞ்சம் விடுபட்டு வானம் பார்க்க வாய்ப்புக் கொடுங்கள். அவர்களது ஹாபிக்கு மதிப்பளியுங்கள். மாதத்தின் ஐந்து நாட்களில் அவர்கள் மீது கூடுதல் அன்பு காட்டுங்கள். ஆம் உழைத்தே களைத்துப் போன இல்லத்தரசிகளின் வேலைகளில் சிலதை பகிர்ந்து கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பான திறமைகளை தோண்டியெடுத்து அவர்களது வாழ்வை அர்த்தப்படுத்துங்கள். அழகிய அடையாளம் கொடுங்கள். முடிந்தால் ஆண்களே உங்கள் மனைவிக்கு உடம்புக்கு முடியாமல் போகும் தருவாயிலாவது அவர்களுக்கு பணிவிடையைச் செய்யுங்கள். இல்லத்தின் மற்ற உறவுகளே அவர்களும் மனுஷிகள் தான் என்பதை புரிந்து கொண்டு புன்னகைக்க விடுங்கள்!


யாழ் ஸ்ரீதேவி