10 வயதான மெய்னிங்சின்லியு (Meiningsinliu) என்ற சிறுமி மணிப்பூரின் தமெங்லாங் (Tamenglong) மாவட்டத்தில் உள்ள டெய்லாங் ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் ஊருக்குச் சென்றுவிட்டதால் கைக்குழந்தையாக இருக்கும் தனது தங்கையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. எனவே தனது தங்கையை தன்னுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிறுமி, வகுப்பறையில் தன் தங்கையை மடியில் சுமந்தபடியே பாடங்களையும் கவனித்துள்ளார்.
இதையடுத்து இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. இதைக் கண்ட மணிப்பூரின் அமைச்சர் த.பிஸ்வஜித் சிங் (Th.Biswajit Singh) அந்தச் சிறுமியின் கல்விக்கான மொத்தச் செலவையும் தானே ஏற்பதாகக் கூறியுள்ளார்.
இது பற்றிக் கூறிய அவர், "சமூக ஊடகங்களில் இந்தச் செய்தியை நான் கவனித்தவுடன், நாங்கள் அந்தச் சிறுமியின் குடும்பத்தைக் கண்டுபிடித்து அவர்களை மணிப்பூர் தலைநகரான இம்பால் நகருக்கு அழைத்து வரும்படி கூறினோம். பின்னர் படித்து முடிக்கும்வரை சிறுமியின் படிப்பிற்கான மொத்தச் செலவையும் நான் தனிப்பட்ட முறையில் பார்த்துக்கொள்கிறேன் என்று சிறுமியின் குடும்பத்திடம் கூறினேன். சிறுமியின் அர்ப்பணிப்பை எண்ணி பெருமைகொள்கிறேன். கல்விக்கான சிறுமியின் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது" என்று கூறியுள்ளார்.
