Published:Updated:

`உதவ நினைத்தேன்; அவ்வளவுதான்!'- மூழ்கிய பாலத்தில் ஆம்புலன்ஸை வழிநடத்திய சிறுவன்

உண்மையில் அங்கிருந்த பாலம் நீரில் மூழ்கி அடையாளமற்று இருந்தது. உடனே சிறுவன் வெங்கடேஷ் அங்கிருந்து கரை சேரும் வரை ஆம்புலன்ஸை எந்தச் சிக்கலும் இல்லாமல் வழிநடத்தினான்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

கர்நாடகாவில் பெய்துவரும் கன மழையால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரய்ச்சூர் மாவட்டம் தேவதூர்கா தாலுகாவில் உள்ள கிராமத்தில் பெய்த கனமழையால் தண்ணீர் குளம்போல் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த பாலமும் நீரில் மூழ்கியது. அப்போது அவ்வழியாக 6 குழந்தைகள் மற்றும் ஒரு இறந்த பெண்ணின் சடலத்தையும் ஏற்றிக்கொண்டு அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்று மச்சனூர் கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தது.

சிறுவன்
சிறுவன்

ஆனால், செல்லும் வழியில் அதிக அளவில் நீர் தேங்கியிருந்ததால், சாலையில் உள்ள மேடு பள்ளங்களைக் கண்டறிந்து முன்னேறிச்செல்வதில் சிக்கல் நிலவியது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம், ஆம்புலன்ஸ் டிரைவர் மஞ்சு சிறுவர்களிடம் உதவியை நாடினார். ஆனால், அங்கிருந்த சிறுவர்களில் சிலர் `எங்களால் இது முடியாது’ என்று கூறி விலகிவிட்டனர். ஆனால், 12 வயதான வெங்கடேஷ் என்ற சிறுவன் மட்டும், `நான் வழிகாட்டுகிறேன்’ என்று கூறி உதவி செய்ய முன்வந்தார். `என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்’ என்று கூறி அந்த ஆம்புலன்ஸை சிறுவன் வழிநடத்தினான்.

உண்மையில் அங்கிருந்த பாலம் நீரில் மூழ்கி அடையாளமற்று இருந்தது. உடனே சிறுவன் வெங்கடேஷ் அங்கிருந்து கரை சேரும் வரை ஆம்புலன்ஸை எந்தச் சிக்கலும் இல்லாமல் வழிநடத்தினான். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோ வைரலாகவே சிறுவன் வெங்கடேஷுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

``அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்னிடம், `இந்தத் தண்ணீரைத் தாண்டிச்செல்ல வழி இருக்கிறதா? நீரில் மூழ்கிக் கிடக்கும் பாலத்தின் மீது வண்டியை ஓட்டமுடியுமா?’ என்றுகேட்டார். நான் அவருக்கு வழி காட்டினேன். நான் செய்தது தைரியமான செயலா இல்லையா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. நான் அந்த டிரைவருக்கு உதவ நினைத்தேன் அவ்வளவுதான்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு அளித்தபேட்டியில் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பும் கூட வெங்கடேஷ், நீரில் மூழ்கித் தவித்த பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளார். சிறுவனின் தந்தை தேவப்பா ஒரு விவசாயி. சிறுவனின் செயலைப் பாராட்டி ரய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் அவருக்கு விருது ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது.