Published:Updated:

‘ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கிடையாது’ - ராணுவ வீரர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி

‘ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கிடையாது’  - ராணுவ வீரர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி
‘ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கிடையாது’ - ராணுவ வீரர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி

இந்திய பாகிஸ்தான் மோதலில் சுடப்பட்ட இந்திய ராணுவர் வீரர் இறந்த அடுத்த நாளே அவருக்குக் குழந்தை பிறந்துள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Photocredit : Twitter/@SSBCrackExams

லான்ஸ் நயிக் ரஞ்ஜீத் சிங் என்ற இந்திய ராணுவ வீரர், கடந்த திங்கள் கிழமையன்று இரண்டு மாத விடுமுறையில் தன் சொந்த ஊரான ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பனுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு, கர்ப்பமாக உள்ள தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கும், குழந்தையைத் தன் கைகளில் ஏந்துவது என்ற பெரும் கனவுடன் இருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்திய எல்லைப் பகுதியான ராஜுவுரி லால்யாலி ராணுவத் தளம் அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் திடீரென ஊடுருவியுள்ளனர். அவர்களைத் தடுத்து நிறுத்த நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ரஞ்ஜீத் சிங் உள்பட மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

ரஞ்ஜீத் உயிரிழந்த மறுநாளே, அவரது மனைவி ஷிம்பு தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தன் குழந்தையைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த ராணுவ வீரர், குழந்தை பிறப்பதற்கு ஒருநாள் முன்னதாக எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். ‘நான் இன்று இந்தியாவின் மகளைப் பெற்றெடுத்துள்ளேன். அவளும் ஒரு ராணுவ அதிகாரியாக வளர்ந்து, நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதே என் ஆசை’ என மருத்துவமனையில் ஷிம்பு தேவி கூறியுள்ளார். 

அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு, நேற்று ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, செரி காட் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது . அப்போது நிகழ்ந்த சம்பவம் சுற்றியிருந்தவர்கள் மனத்தைக் கனக்கச் செய்தது. ஷிம்பு தேவி, பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையுடன் தன் கணவர் உடல் வைக்கப்பட்டிருந்த மைதானத்துக்கு வந்திருந்தார்.  அதைத் தொடர்ந்து, முழு ராணுவ மரியாதையோடு ரஞ்ஜீத் சிங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, “ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கிடையாது. பாரத் மாதா கி ஜே” என அவரது மனைவி கூறிய வார்த்தைகள் பலரையும் கண்கலங்கவைத்தது.