Published:Updated:

விமான விபத்தில் மறைந்த காதலன்! - மணமகள் உடையில் அஞ்சலி செலுத்திய காதலி

விமான விபத்தில் மறைந்த காதலன்! - மணமகள் உடையில் அஞ்சலி செலுத்திய காதலி
விமான விபத்தில் மறைந்த காதலன்! - மணமகள் உடையில் அஞ்சலி செலுத்திய காதலி

ந்தோனேசிய விமான விபத்தில் தனது வருங்கால கணவனை இழந்த பெண், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் மணமகள் போல உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் இண்டன் சீரி (Intan Indah Syari). இவருக்கும் ரியோ நந்தா பிரதாமா (Rio Nanda Pratama) என்பவருக்கும் கடந்த நவம்பர் 11, 2018-ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மருத்துவரான ரியோ நந்தா 3 நாள்கள் பயிற்சிக்காக ஜகார்த்தா சென்றிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி ஜகார்த்தாவில் இருந்து லயன் ஏர் விமானம் மூலம் பினாங் மாநிலம் வருவதற்குத் திட்டமிட்டிருந்தார். அவர் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு லயன் ஏர் விமானம் மூலம் பினாங் விரைந்துள்ளார். ரியோ நந்தாவின் வருகைக்காக இண்டன் காத்துக்கொண்டிருந்தார். இந்த இடைப்பட்ட நாள்களில் இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தங்களது எதிர்காலக் கனவுகளை பகிர்ந்துகொண்டிருந்தனர். காதலையும் வளர்த்து வந்தனர். 

ஜகார்த்தா செல்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது திருமணத்துக்காக ஆடைகள் மற்றும் இதரப் பொருள்களை வாங்கச் சென்றிருந்தனர். திருமண நாள் ஆடையை ரியோ நந்தா தனது விருப்பப்படி எடுத்துக்கொடுத்துள்ளார். ஜகார்த்தாவில் இருந்த ரியோ தனது வருங்கால மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், `நான் நவம்பர் 11-ம் தேதி வரவில்லை என்றால் நான் உனக்காகத் தேர்ந்தெடுத்த ஆடையை உடுத்தி உன் கூந்தலில் வெள்ளை ரோஜா மலர் சூடி அந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பு' எனத் தெரிவித்துள்ளார். விளையாட்டாகத்தான் இந்த உரையாடல்கள் நடந்துள்ளன.

ஆனால், விதி வேறு விதமாக இருந்துள்ளது. நந்தா ஏறிய லயன் ஏர் விமானம் பினாங்கை வந்தடையவில்லை. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஜாவா கடலில் 189 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரியோ நந்தாவும் உயிரிழந்தார். இந்தச் செய்தி இண்டனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ரியோவின் பிரிவு அவரை வாட்டிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண நாள் வந்தது. ரியோவின் ஆசைப்படி, அவர் எடுத்துக்கொடுத்த ஆடையை உடுத்தி கூந்தலில் வெள்ளை ரோஜா மலர் சூடி புகைப்படம் எடுப்பது என முடிவு செய்தார். இதற்காக திருமண ஏற்பாட்டாளர்களை அணுகினார். மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுப் போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உருக்கமாகச் சில வாசகங்களை  எழுதியுள்ளார்.

ரியோ நந்தாவின் சகோதரியுடன் மணப்பெண் உடையில் அவர் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு, `` என் அன்பிற்குரிய ரியோ, இப்படி ஒரு தங்கையை எனக்காக கொடுத்ததற்கு நன்றி. அவள் உங்களைப் போன்றே வலிமையானவள், கருணை உள்ளம் கொண்டவள். உங்களது ஆசையை நிறைவேற்ற எனக்கு உறுதுணையாக இருந்தாள். காலங்கள் கடந்தாலும் உங்கள் மீதான என் காதல் மட்டும் குறையாது' எனப் பதிவிட்டுள்ளார்.

மணப்பெண் கோலத்தில் இருக்கும் மற்றொரு புகைப்படத்தில், `` என் உள்ளம் முழுவதும் சோகத்தால் நிரம்பி இருக்கிறது. அதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. ஆனால், நான் உங்களுக்காக சிரிக்கிறேன். நான் சோகமாக இருக்கமாட்டேன். நீங்கள் கூறுவதைப்போல் எப்போதும் தைரியமாக இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.