Published:Updated:

இணையவாசிகளின் அன்பை பெற்ற சிறுவர்களின் `காலணி’ செல்ஃபி! -வைரலான புகைப்படம்

சத்யா கோபாலன்
இணையவாசிகளின் அன்பை பெற்ற சிறுவர்களின் `காலணி’ செல்ஃபி! -வைரலான புகைப்படம்
இணையவாசிகளின் அன்பை பெற்ற சிறுவர்களின் `காலணி’ செல்ஃபி! -வைரலான புகைப்படம்

தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகில் அனைவரும் செல்போனுக்கு பின்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், செல்போன் நம் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறது.

பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை செல்போன் இல்லாத கைகளையே பார்க்க முடியாது. உணவு முதல் உடை வரை அனைத்தையும் செல்போன் மூலம் பெறலாம் என எளிதாக்கி, வேலைகளைக் குறைத்து நம் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.

முன்பெல்லாம் ஏதாவது விழாக்கள் நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசி மகிழ்வோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைத்து விழாக்களையும் செல்ஃபிக்கள் ஆக்கிரமித்துள்ளன. புதிதாக யாரைப் பார்த்தாலும் செல்ஃபி, எதைக் கண்டாலும் செல்ஃபி எனச் சிலர் தன் மொத்த வாழ்வையும் செல்ஃபியுடனேயே கழித்து வருகின்றனர். இந்த செல்ஃபி மோகம் பல இளைஞர்களின் உயிரையும் பறித்துள்ளது.

இப்படிப்பட்ட டிஜிட்டல் உலகில்  அழகான மற்றும் இதயத்தைக் கனக்க செய்யும் ஒரு செல்ஃபி கடந்த இரு தினங்களாக மொத்த இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது. ஐந்து சிறுவர்கள் இணைந்து காலணி மூலம் செல்ஃபி எடுக்கும் புகைப்படம்தான் அது. அந்த சிறுவர்கள் மிகவும் வெகுளியாக அந்தக் காலணியைப் பார்த்துச் சிரிக்கும் புகைப்படம் மிக யதார்த்தமாக பார்ப்பவர்களின் இதயத்தை கனக்கச் செய்வதாக உள்ளது.  

இதை இணைய வாசிகள் மட்டுமல்லாது திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் ஷேர் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் போமன் இரானி இந்தப் புகைப்படத்துடன், ‘ நீங்கள் என்ன வைத்துள்ளீர்களோ அதிலே மகிழ்ச்சி காண்கிறீர்கள். இது மிகவும் உண்மையான ஒன்று. நான் சொல்கிறேன் இந்த செல்ஃபி பலரது அன்பையும் பெறும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இணையத்தைக் கலக்கிய இந்தப் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது யார் எடுத்தார்கள் போன்ற எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.