Published:Updated:

வாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி

வாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி -  சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி
வாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு, இந்தியா மற்றும் உலகின் பல இடங்களில் இருந்தும் நிதியுதவிகள் வந்து குவிந்துகொண்டிருக்கிறது. இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வேலை, குழந்தைகளுக்குக் கல்வி போன்ற பல்வேறு உதவிகளை முடிந்தவர்கள் செய்துவருகின்றனர். அதே புல்வாமா தாக்குதலில் இறந்த குடும்பத்தினருக்கு, தன் வாழ்நாள் முழுவதும்  சம்பாதித்த பணத்தை வழங்கியுள்ளார், ஒரு மூதாட்டி.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பஜ்ரங்கர் பகுதியைச் சேர்ந்தவர், சர்மா. இவர், அதே பகுதியில் உள்ள அம்பி மாதா கோயிலில் பிச்சை எடுத்து தன் வாழ்நாளைக் கழித்துவந்துள்ளார்.  தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தை அடுத்த நாள், ஒரு வங்கியில் சேமித்து, அதற்கு இரண்டு அறங்காவலர்களையும் நியமித்துள்ளார். கடந்த ஆகஸ்ட்  மாதம், வயது மூப்பின் காரணமாக மூதாட்டி சர்மா உயிரிழந்தார்.  இறப்பதற்கு முன்னதாக, வங்கியில் தான் சேர்த்துவைத்துள்ள அனைத்து பணமும் நாட்டிற்காகவே செலவழிக்கப்பட வேண்டும் என்றும், அதுதான் தன் இறுதி ஆசை என்றும் கூறியுள்ளார். 

அவர் சேர்த்துவைத்திருந்த 6.61 லட்சம் ரூபாயையும், சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மூதாட்டி நியமித்த இரண்டு அறங்காவலர்கள், மொத்த பணத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்து, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். 

இது தொடர்பாகப் பேசிய அறங்காவலர்களில் ஒருவரான சந்தீப் கவுர், “மூதாட்டி சர்மா சம்பாதித்த மொத்த பணமும் அவர் பிச்சையெடுத்ததனால் வந்தது. அந்தப் பணத்தை நாட்டுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என அவர் கூறிவந்தார். புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களுக்கு அந்தப் பணத்தை அளித்துள்ளோம். இதைவிடச்  சிறந்த முறையில் சர்மாவின் கடைசி ஆசையை எங்களால் நிறைவேற்ற முடியும் எனத் தோன்றவில்லை. அந்தக் கோயிலுக்கு தினசரி வரும் அனைத்து பக்தர்களுக்கும் சர்மா தனது பணத்தை  வங்கியில் சேமித்துவைக்கிறார் எனத் தெரியும். அதற்காகவே சிலர் தாமாக வந்து பணம், உணவு, உடை ஆகியவற்றை அவருக்கு வழங்குவர். அங்கு வரும் அனைத்து பக்தர்களும் சர்மாவிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்கள்” எனத் தெரிவித்தார். மூதாட்டியின் பணம், தாக்குதலில் இறந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி, மாதா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காட்டுத் தீ போல் பரவ, அவர்கள் அனைவரும் சர்மாவின் மறைவுக்காக சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்கின்றனர்.